“ஜெயலலிதா உடல் பதப்படுத்தப் பட்டது உண்மை தான்!”

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் உலா வருகின்றன. “ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தபோது அவரது கன்னத்தில் துளைகள் இருந்தன. உதடுகள் தடிமனாக இருந்தன. இவை எல்லாம் எப்படி ஏற்பட்டன? அவரது உடல் பதப்படுத்தப்பட்டதா? ஆம் எனில் எப்போது பதப்படுத்தப்பட்டது? அவர் இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்பா? அல்லது அதற்கு சில நாட்கள் முன்பா?” என்பவை பொதுமக்களின் சந்தேகங்களில் சில.

அரசு ஏற்பாடு செய்த செய்தியாளர்கள் சந்திப்பில் சென்னை மருத்துவக் கல்லூரி உடற்கூறுயியல் துறை இயக்குநர் டாக்டர் சுதா சேஷய்யன் கலந்துகொண்டு இச்சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது.

விஐபிக்கள் உயிரிழந்தால், அவர்களது உடல் பொது இடத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வருவதால் மாசு ஏற்படும். இதில் உடல் கெட்டுப் போகாமல் இருக்கவும், அஞ்சலி செலுத்த வருவோருக்கு துர்நாற்றம் எதுவும் வீசாமல் இருப்பதற்கும் உடலைப் பதப்படுத்துவது வழக்கம்.

எம்ஜிஆர் இறந்தபோதுகூட, அவரது உடல் பதப்படுத்தப்பட்டது. அதுபோல், மறைந்த ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப்பட்டது உண்மை தான்.

கடந்த டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11.35 மணியளவில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் என்னை செல்போனில் தொடர்புகொண்டு, ஜெயலலிதா உயிரிழந்த விவரத்தையும், அவரின் உடலை பதப்படுத்துவதற்கான குழுவை அனுப்பும்படியும் கேட்டுக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, சென்னை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த குழுவினரோடு நான் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றேன். அந்த மருத்துவமனையில் தான் ஜெயலலிதாவின் உடலை பதப்படுத்துவதற்கான பார்மலின் திரவத்தைக் கலந்து தயாரித்தோம். உடல் நிறத்தை இயற்கையான நிறமாகவே தக்க வைக்கும் வகையில், திரவத்தின் கலவை அளவு மாற்றப்பட்டது.

பதப்படுத்துவதற்கான திரவத்தை ரத்தக்குழாய்களில் நிரப்புவது தான் பதப்படுத்தும் பணி. இப்பணியை நள்ளிரவு 12.20 மணிக்கு தொடங்கினோம். ஜெயலலிதாவின் வலது காலில் சிறிய குழாய் செருகி அதன் வழியாக திரவத்தைச் செலுத்தினோம். சுமார் 15 நிமிடங்களில் திரவத்தைச் செலுத்தும் பணி நிறைவடைந்தது. 5.5 லிட்டர் திரவம் செலுத்தி உடல் பதப்படுத்தப்பட்டது.

பொதுவாக, உடலில் திசுக்கள் ஏதேனும் சேதமடைந்திருந்தால், அதன் வழியாக பதப்படுத்தும் திரவம் வெளியேறும். ஆனால் ஜெயலலிதாவின் உடலில் எவ்விதப் பிரச்சனையும் இல்லாததால், அது போன்று எதுவும் நடக்கவில்லை. அவரது உதடுகளிலும், மூக்கிலும் மட்டுமே ஓரிரு துளிகள் வெளியேறின.

ஜெயலலிதாவுக்கு டிரக்கியோஸ்டமி கருவி உதவியுடன் செயற்கை சுவாசமும் அளிக்கப்பட்டு வந்தது. டிரக்கியோஸ்டமி சிகிச்சை பெற்றவர்களின் உதடுகள் தடித்து காணப்படும். ஜெயலலிதாவின் உதடுகள் தடிமனாக இருந்ததற்கு இதுதான் காரணம்.

நீண்டநாள் படுத்த படுக்கையாக சிகிச்சையில் இருந்ததால், ஜெயலலிதாவின் கன்னத்தில் சிறிய சிறிய துளைகள் காணப்பட்டன. அவை பார்ப்பதற்கு புள்ளிகள் போல் சிறிய அளவிலேயே இருந்தன. புகைப்படங்களில் அந்த புள்ளிகள் பெரிதாக காட்டப்பட்டுள்ளன.

இவ்வாறு டாக்டர் சுதா சேஷய்யன் கூறினார்