எமக்கு தொழில் ரொமான்ஸ் – விமர்சனம்

நடிப்பு: அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா, ஊர்வசி, அழகம் பெருமாள், எம்.எஸ்.பாஸ்கர், பகவதி பெருமாள், படவா கோபி மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: பாலாஜி கேசவன்

இசை: நிவாஸ் கே பிரசன்னா

ஒளிப்பதிவு: கணேஷ் சந்திரா

படத்தொகுப்பு: ஐ.ஜெரோம் ஆலன்

தயாரிப்பு: எம்.திருமலை

பத்திரிகை தொடர்பு: சதீஷ் AIM

காதலர்களுக்கு இடையில் பொய் இருக்கக் கூடாது; அப்படி பொய் இருந்து, ஒரு பொய்… அதை மறைக்க மற்றொரு பெரிய பொய்… அந்த இரண்டையும் மறைக்க இன்னொரு பெரிய்ய்ய்ய பொய்… என்று வளர்ந்துகொண்டே போனால், அந்த காதலில் எப்படிப்பட்ட சிக்கல்கள் எல்லாம் ஏற்படும் என்பதை நகைச்சுவையாகச் சொல்லும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் தான் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’.

ஆஸ்கர் விருது பெறும் கனவுடன் சென்னையில் திரைப்பட உதவி இயக்குநராக இருக்கிறார் நாயகன் உமாசங்கர் (அசோக் செல்வன்). மருத்துவமனை ஒன்றில் நர்ஸாக பணி புரிகிறார் நாயகி லியோ (அவந்திகா மிஸ்ரா). லியோ மீது காதல் வயப்படுகிறார் உமாசங்கர். ஒரு கட்டத்தில் அவரது காதலை லியோ ஏற்றுக்கொள்ள, காதலர்கள் இருவரும் காதல் வானில் சிறகடித்துப் பறக்கிறார்கள்.

நாயகன் உமாசங்கரின் நெருங்கிய சினேகிதி சரண்யா. அவர் தனது காதலர் பிரசாந்துடன் படுக்கையில் கூடிக் களிக்கிறார். பிரசாந்த் அமெரிக்கா சென்ற பிறகு தான், தான் கருவுற்றிருப்பது சரண்யாவுக்குத் தெரிய வருகிறது. கருவைக் கலைக்க வேண்டும் என்றால் மருத்துவமனைக்கு கணவருடன் தானே செல்ல வேண்டும். என்ன செய்வது என்று கலங்கும் சரண்யா, உமாசங்கரிடம் தன் இக்கட்டான நிலையைச் சொல்லி  உதவி கேட்கிறார். அவர் மீது இரக்கப்படும் உமாசங்கர், அவருடன் மருத்துவமனைக்குச் செல்லவும், அங்கு சிறிது நேரம் அவரது கணவராக நடிக்கவும் சம்மதிக்கிறார்.

உமாசங்கரும் சரண்யாவும் கணவன் மனைவி போல் பெண் மருத்துவர் முன் ஆஜராகி, கருவைக் கலைக்க கோரிக்கை வைக்கிறார்கள். “உங்களால் பத்து ரூபாய் காண்டம் வாங்க முடியாதா?” என்று இருவரையும் திட்டும் மருத்துவர், கரு கலைப்புச் செய்ய தயாராகிறார்.

இதை கவனிக்கும் ஒரு நர்ஸ் அதிர்ச்சி அடைந்து, வேறொரு மருத்துவமனையில் நர்ஸாக இருக்கும் தன் தோழியும், உமாசங்கரின் காதலியுமான லியோவுக்கு போன் செய்து “உன் காதலர் உமாசங்கர் ஏற்கெனவே கல்யாணம் செய்து ஒரு மனைவியுடன் இருக்கிறார். ஆனால் கல்யாணம் ஆகாதவர் போல் உன்னை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்” என்று உண்மை நிலவரம் தெரியாமல் போட்டுக்கொடுக்கிறார். தோழி சொல்வதை அப்படியே நம்பும் லியோ, உமாசங்கரை கன்னாபின்னா என்று திட்டி சண்டை போட்டுவிட்டு பிரிந்து சென்றுவிடுகிறார்.

இதனால் வருத்தப்படும் சரண்யா, உண்மையை லியோவிடம் சொல்லி காதலர்கள் இருவரையும் சேர்த்து வைக்க முயற்சி செய்கிறார். அந்த முயற்சியிலும் ஒரு பொய் உட்கார்ந்துகொண்டு பிரச்சனையை மேலும் சிக்கலாக்குகிறது.

இப்படி காதலி லியோவுடன் மீண்டும் சேரவிடாமல் அடுத்தடுத்து வில்லங்கம் தோன்றி நீண்டுகொண்டே செல்லும் பிரச்சனையை காதலர் உமாசங்கர் தீர்த்தாரா, இல்லையா? இறுதியில் இருவரும் இணைந்தார்களா, இல்லையா? என்பதை சிரிக்கச் சிரிக்க சித்தரிக்கிறது ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் ரசிக்கும்படியான படங்களைத் தொடர்ச்சியாகக் கொடுத்து கவனம் பெற்றுவரும் நடிகர் அசோக் செல்வன், இந்த ரொமாண்டிக் காமெடி படத்தில் நாயகன் உமாசங்கராக நடித்திருக்கிறார். எப்போதும் போல இந்த படத்திலும் அழகாய் தோன்றி துருதுரு நடிப்பை வழங்கியிருக்கிறார். சினேகிதி சொல்லும் பொய்களில் சிக்கிக்கொள்ளும்போதெல்லாம், பாவம் போல் அவர் முகத்தை வைத்துக்கொள்வது சிரிப்பை வரவழைக்கிறது.

நாயகி லியோவாக அவந்திகா மிஸ்ரா நடித்திருக்கிறார். நாயகனுக்கு ஈடு கொடுக்கும் வகையில் காதல் மற்றும் முத்தக் காட்சிகளிலும், கதாபாத்திரத்துக்கு ஏற்ப கோபப்படும் காட்சிகளிலும் குறை சொல்ல முடியாத அளவு நிறைவாக நடிப்பை வழங்கியிருக்கிறார்.

 நாயகனின் அம்மாவாக வரும் ஊர்வசி, அப்பாவாக வரும் அழகம் பெருமாள், மாமாவாக வரும் படவா கோபி, சினேகிதி சரண்யாவாக வரும் நடிகை, டாக்டராக வரும் எம்.எஸ்.பாஸ்கர், திரைப்பட நடிகர் ஆகத் துடிப்பவராக வரும் பகவதி பெருமாள் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கி நகைச்சுவைக்கு பங்களிப்பு செய்திருக்கிறார்கள்.

பாலாஜி கேசவன் இப்படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார். எளிய ரொமாண்டிக் கதையைக் கையில் எடுத்து, அதை சுந்தர்.சி, கிரேஸி மோகன் போன்றோர் பாணியில் நகைச்சுவையைத் தூவி, சிரிப்புக்குப் பஞ்சம் இல்லாமல் திரைக்கதை அமைத்து, போரடிக்காமல் படத்தை ரசிக்கத்தக்க விதத்தில் நகர்த்திச் சென்றுள்ளார். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருந்தால் படத்தை இன்னும் நன்றாக ரசித்திருக்கலாம்.

நிவாஸ் கே பிரசன்னா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே ரகம். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவில் காட்சிகள் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ – குடும்பத்துடன் (அல்லது நண்பர்களுடன்) கூட்டமாகச் சென்று, லாஜிக் பற்றி யோசிக்காமல் பார்த்து, சிரித்து, மகிழ்ந்து வரலாம்!