மார்ச் முதல் எரிவாயு சிலிண்டர் மானியம் முழுமையாக ரத்து: மோடி அரசு அறிவிப்பு!
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் முழுவதும் ரத்து செய்யும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், மானிய விலை சிலிண்டர்களுக்கு மாதம்தோறும் ரூ.4 உயர்த்தவும் அறிவுறுத்தியுள்ளது.
பொதுமக்கள் வீட்டில் உபயோகப்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மானிய விலையில் மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த மானியத்தால் அரசுக்கு ஆண்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவாகிறது. இந்த மானியத்தை ரத்து செய்யும்படி மத்திய அரசை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
தற்போது நாடு முழுவதும் 18.11 கோடி வாடிக்கையாளர்கள் மானிய விலை சிலிண்டரை பயன்படுத்தி வருகின்றனர். ‘பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா’ திட்டத்தின் கீழ், 2.5 கோடி ஏழை பெண்கள் இலவச எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது 14.2 கிலோ எடை கொண்ட மானிய விலை சிலிண்டர் ரூ.477.86-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மானியம் இல்லாத சிலிண்டர் ரூ.564-க்கு விற்கப்படுகிறது. ஒரு சிலிண்டருக்கு ரூ.86.54 வீதம் மத்திய அரசு மானியம் வழங்குகிறது.
இந்நிலையில், மானிய விலை சிலிண்டர்களுக்கான மானியத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாத்துக்குள் முழுவதும் ரத்து செய்யும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, மத்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்ற மக்களவையில் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில்,
“கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் வீட்டு உபயோகத்துக்காக பயன்படுத்தப்படும் மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மாதம்தோறும் 2 ரூபாய் அளவுக்கு உயர்த்திக் கொள்ளும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டது. இனிமேல் மாதம்தோறும் 4 ரூபாய் உயர்த்திக் கொள்ளும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை முழுவதும் ரத்து செய்யும்படியும் எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.