நவீன் சந்திரா நடிக்கும் ‘லெவன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

ஏ.ஆர். என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில், நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ‘லெவன் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லெவன்’ திரைப்படத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி, திலீபன், ரித்விகா, ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ.ஆர் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

‘லெவன்’ டிரெய்லரை நடிகர் கமல்ஹாசன் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே ‘லெவன்’ முன்னோட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை சுஷ்மா சினி ஆர்ட்ஸ் ஜி என் அழகர்சாமியும், தெலுங்கு வெளியீட்டு உரிமையை ருச்சிரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் என் சுதாகர் ரெட்டியும், மலையாள உரிமையை E4 என்டர்டெய்ன்மென்ட் முகேஷ் ஆர் மேத்தாவும், கர்நாடகா உரிமையை ஃபைவ் ஸ்டார் கே செந்திலும் பெற்றுள்ளனர்.

மே 16 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணு, டி.ஜி. தியாகராஜன், டி. சிவா, இணை தயாரிப்பாளர் கோபாலகிருஷ்ணன், இயக்குநர்கள் அமீர், செல்வராகவன், பிரபு சாலமன், ஏ. எல் விஜய் , விநியோகஸ்தர்கள் ஃபைவ் ஸ்டார் செந்தில், அழகர்சாமி, அருள்பதி , சரிகம ஐஸ்வர்யா, சஞ்சய் வாத்வா, முகேஷ் மேத்தா, மீனா சாப்ரியா, கிருஷ்ண ரெட்டி, பி. எல். தேனப்பன், கதிரேசன், ராஜ் டிவி ரவி, ரகுநந்தன், இயக்குநர்கள் விஷால் வெங்கட், பத்ரி, ரமேஷ் கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவரையும் எழுத்தாளர் செல்வேந்திரன் வரவேற்றார். இப்படத்தின் இசையை இயக்குநர் கே. பாக்யராஜ் மற்றும் தயாரிப்பாளர் எஸ் தாணு வெளியிட, இயக்குநர் ஏ.எல். விஜய், தயாரிப்பாளர்கள் கதிரேசன், டி சிவா, தியாகராஜன், பி. எல். தேனப்பன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து இப்படத்தின் முன்னோட்டத்தை இயக்குநர்கள் அமீர் – செல்வராகவன் இணைந்து வெளியிட, விநியோகஸ்தர்கள் சஞ்சய் வாத்வா, அழகர்சாமி, செந்தில், முகேஷ் மேத்தா ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பேசுகையில், ”நண்பர் அக்பரின் வாரிசான அஜ்மல் கான் இப்படத்தை தயாரித்திருக்கிறார். ரசிகர்களை இருக்கை நுனிக்கு வரவழைக்கும் அளவிற்கு காட்சிகள் திரில்லிங்காக இருக்கிறது. இமானின் இசை படத்திற்கு கூடுதல் சிறப்பு. இந்நிறுவனம் தயாரித்த இந்த மூன்றாவது திரைப்படமும் வெற்றி பெறும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் தியாகராஜன் பேசுகையில், ”நீண்ட நாட்கள் கழித்து அரசாங்க அருங்காட்சியகத்தில் உள்ள இந்த கலையரங்கத்தில் நடைபெறும் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். இந்த விழாவின் நாயகன் இசையமைப்பாளர் இமான். அவர் எப்போதும் தயாரிப்பாளர்களுக்கு நண்பராக இருப்பவர். இந்தப் படத்தின் பாடல்களை கேட்டேன். சிறப்பாக இருக்கிறது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கலந்து கொடுத்திருக்கும் பாட்டும் நன்றாக இருக்கிறது. இப்படத்தின் நாயகன் நவீன் மிகச் சிறந்த திறமைசாலி. அவருடைய திறமையை தமிழ் திரையுலகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இப்படத்தின் இயக்குநரை மனதாரப் பாராட்டுகிறேன். முன்னோட்டத்தில் சில காட்சிகளை பார்த்த உடனே இவருடைய திறமை வெளிப்பட்டது.‌ இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர் கதிரேசன் பேசுகையில், ” லெவன் திரைப்படத்தை நான் பார்த்து விட்டேன். இன்ட்ரஸ்டிங்கான திரில்லர் திரைப்படம். இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடித்த நடிகர், நடிகைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தைப் பார்க்கும்போதுதான் படத்திற்கு ஏன் ‘லெவன்’ என பெயர் வைத்திருக்கிறார்கள் என்பது தெரியவரும். இந்தத் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் டிக்கெட்டை வாங்கி பார்க்கிறார்கள். ஆனால் பத்து கோடி ரூபாய் முதலீட்டில் எடுக்கும் சிறிய முதலீட்டு திரைப்படங்களுக்கு அனைவரும் ஒன்று கூடி விவாதித்து டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும். நல்ல படமாக இருந்தாலும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பல சங்கடங்கள் இருக்கிறது. ஆந்திராவுடன் ஒப்பிடும்போது ஒரு நல்ல படத்திற்கு தமிழ்நாட்டில் வசூல் சதவீதம் குறைவாகவே இருக்கிறது. சினிமாவைப் பொறுத்தவரை வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை – இந்த மூன்று நாட்களில் தான் ரசிகர்களின் வருகை அதிகமாக இருக்கிறது. அதனால் சிறிய முதலீட்டில் உருவாகும் திரைப்படங்களுக்கு 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயித்தால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய கோரிக்கை. இதனை மூன்று அல்லது நான்கு மாதங்கள் வரை பரீட்சார்த்தமாக சோதனை செய்ய வேண்டும் என்றும், இது தொடர்பாக திரையுலகினர் அனைவரும் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகை ரித்விகா பேசுகையில், “இந்தத் திரைப்படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த தயாரிப்பு நிறுவனம் இதற்கு முன் உருவாக்கிய‌ ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்திலும் நான் நடித்திருக்கிறேன். அதற்கு ரசிகர்களிடத்தில் பெரிய வரவேற்பு இருந்தது. இந்தப் படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன், ” என்றார்.

தயாரிப்பாளர் டி . சிவா பேசுகையில், ”தயாரிப்பாளர் அக்பர் தைரியமானவர். தொடர்ந்து படங்களை தயாரிக்கிறார். அவர் தயாரித்த இந்த திரைப்படமும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். இந்த அரங்கத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கான அனுமதி நிறுத்தப்பட்டிருந்தது. இப்போது மீண்டும் வழங்கியிருக்கிறார்கள். இதற்காக படக்குழுவினரை வாழ்த்துகிறேன். ‘லெவன்’ திரைப்படம், ‘ராட்சசன்’ படத்தை போல் மிகப் பெரிய வெற்றியை பெறும் என்று நம்புகிறேன்.

நடிகர் நவீன் சந்திரா மிகப்பெரிய திறமைசாலி. அவருக்கு இந்த திரைப்படம் தமிழில் மிகப் பெரிய வாய்ப்பினை வழங்கும் என்று நம்புகிறேன். திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கும் இமானுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஃபாஸ்டஸ்ட் – எக்கனாமிக்- பிரண்ட்லி- லவ்லி – மியூசிக் டைரக்டர் இமானுக்கு இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை வழங்க வேண்டும்,” என்றார்.

நடிகை ரியா ஹரி பேசுகையில், ”திரையுலகில் உள்ள அனைத்து தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த மேடையில் இருக்கிறார்கள். இதற்கு காரணம் அக்பர் சார்தான்.‌ அவர் மீதான அன்பின் காரணமாகவே அனைவரும் இங்கு வருகை தந்திருக்கிறார்கள். நானும் அவருடைய பார்ட்னர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த திரைப்படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய விழா நாயகன் இசையமைப்பாளர் இமான் சாரை பார்க்கும்போது உற்சாகமாக இருக்கும். அவருடனான சந்திப்பின்போது எப்போதும் ஒரு பாசிட்டிவிட்டியை பரவச் செய்து கொண்டிருப்பார். அவரை நிறைய முறை சந்தித்து இருக்கிறேன். ஆனால் பேசியதில்லை.
அவருடைய இசையில் முதல் பாடல் உருவான‌ போது இதுதான் என்னுடைய ஃபேவரிட்டான பாடல் என சொன்னேன்.‌ இரண்டாவது பாடல் உருவான போது இந்தப் பாடல் தான் எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது என்றேன். அதன் பிறகு காத்திருங்கள் தொடர்ச்சியாக பாடல்கள் வந்து கொண்டிருக்கிறது அனைத்து பாடல்களையும் கேளுங்கள் என்றனர். எனக்கு எல்லா பாடல்களும் பிடித்திருக்கிறது. ரசிகர்களுக்கும் அனைத்து பாடல்களும் பிடிக்கும். இதற்காக சரிகம நிறுவனத்திற்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நவீன் அவர்களை இப்படத்திற்கான போட்டோ ஷூட்டின் போது முதன்முதலாக சந்தித்தேன். எனக்கு இருந்த தயக்கத்தை உடைத்து இயல்பாக பழகினார். படப்பிடிப்பு தளத்தில் எனக்கு சிறிய நுட்பமான பல விஷ‌யங்களை கற்றுக் கொடுத்திருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் ஒட்டுமொத்த படக்குழுவையும் இயல்பாக வைத்திருப்பார். அவருடன் இணைந்து பணியாற்றிய தருணங்கள் மறக்க முடியாதது. இதற்காக அவருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் ஒரு மேஜிக் இருக்கிறது. இந்த திரைப்படத்தை பார்க்கும்போது உங்களுக்குள் நிபந்தனையற்ற அன்பு இருப்பதை உணர்வீர்கள். அந்த அதீத அன்பு ஒரு மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறது. இந்த திரைப்படம் திரில்லராக இருந்தாலும் எமோஷனலான படம். மே 16அன்று வெளியாகும் இந்த திரைப்படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ”நான் திரைப்படத்தை இயக்குவதற்கும், திரைப்படத்தை பார்ப்பதற்கும் சம்பந்தமே இருக்காது. எனக்கு கிரைம் ஆக்ஷன் திரைப்படங்கள் தான் மிகவும் பிடிக்கும். இது போன்ற படங்களை பார்க்கும் போது மூளைக்கும் கொஞ்சம் வேலை கொடுக்கும் விஷ‌யம் இருக்கும். அடுத்து என்ன என்ற இன்ட்ரஸ்ட் இருக்கும். ‘விடியும் வரை காத்திரு’, ‘ஒரு கைதியின் டைரி’ என இரண்டு திரைப்படங்களை தான் இந்த வகையில் இயக்கியிருக்கிறேன். ‘லெவன்’ திரைப்படம் கிரைம் திரில்லர் என்று சொன்னவுடன் ஆர்வம் ஆகிவிட்டேன்.‌ இந்தப் படத்தை 16ம் தேதி அன்றே பார்க்க வேண்டும் என்று ஆவலும் ஏற்பட்டிருக்கிறது. ரசிகர்களிடமும் வரவேற்பு இருக்கும். படக் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

நடிகை அபிராமி பேசுகையில், ”மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இயக்குநர் லோகேஷ் அஜில்ஸின் தொடக்கப் பயணத்தில் என்னையும் இணைத்துக் கொண்டதற்கு நன்றி. இந்தத் திரைப்படத்தில் அழகான பாடல்களை வழங்கியதற்காக இசையமைப்பாளர் இமானுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தயாரிப்பாளர் அஜ்மலுடன் இணைந்து பணியாற்றுவது அனைத்து நட்சத்திரங்களுக்கும் இயல்பாக இருக்கும். அவருடைய அக்கறையும், அன்பும் அதிகம். இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து நடித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் அமீர் பேசுகையில், ”இப்படத்தின் நாயகன் நவீன் சந்திராவிற்கும், இன்றைய விழா நாயகன் இசையமைப்பாளர் இமானுக்கும், தயாரிப்பாளர் அஜ்மலுக்கும் என் வாழ்த்துக்கள். ஒட்டுமொத்த திரையுலகத்தையும் அவ‌ர் மேடையில் ஒன்றிணைத்திருக்கிறார்.

நான் ஊதா கலர் ரிப்பனின் ரசிகன். நான் எல்லா தருணத்திலும் முணுமுணுக்கும் பாடல் அது. இங்கு மேடையில் பேசிய விநியோகஸ்தர் மதுரை அழகர் எந்த திரைப்படத்தையும் அவ்வளவு எளிதாக பாராட்ட மாட்டார். அவர் இந்தத் திரைப்படத்தை விநியோகிக்கிறார் என்றால், இந்த படம் உண்மையிலேயே நன்றாக இருக்கிறது என்று அர்த்தம்.‌ அத்துடன் பிரபு சாலமன்- இமான் ‍ அக்பர் – இணைந்திருக்கிறார்கள் என்றால்.. அந்த படம் நன்றாக தான் இருக்கும். அக்பர் ஆடிட்டர் என்றாலும் சினிமாவை அளவு கடந்து நேசிப்பவர். அதனால் தான் படத்தை தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தின் முன்னோட்டமும் , பாடல்களும் நன்றாக இருந்தன‌. ‘போர் தொழில்’, ‘ராட்சசன்’ போன்ற படங்கள் ரசிகர்களை எப்படி இருக்கை நுனியில் வைத்திருந்தனவோ அதேபோல் இந்த படமும் இருக்கும் என்று நம்புகிறேன், வெற்றி பெற வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்,” என்றார்.

இசையமைப்பாளர் டி. இமான் பேசுகையில், ” மிகவும் மகிழ்ச்சி.‌ தயாரிப்பாளர்கள் அக்பர் – அஜ்மல் கான் ‍- ரியா ஹரி ஆகியோர்களுக்கு முதலில் நன்றி. திரையுலகில் 23 ஆண்டுகளாக பணியாற்றிக் கொண்டிருந்தாலும் இதுவரை கிரைம் திரில்லர் ஜானரிலான திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.‌ அந்த வகையில் ‘லெவன்’ என்னுடைய இசையில் வெளியாகும் முதல் கிரைம் திரில்லர் திரைப்படம்.‌ இதற்காக இயக்குவர் லோகேஷ் அஜில்ஸுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓ டி டியில் படங்களை பார்க்கும் போது ஏராளமான க்ரைம் திரில்லர் திரைப்படங்களை தான் விரும்பி பார்ப்பேன். உச்சகட்ட காட்சி வரை ஆர்வம் குறையாமல் பார்க்கலாம்.

நான் இயக்குநர் சுந்தர் சி உடன் எட்டு படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். அந்த தருணத்தில் அவருடைய உதவியாளர்களும் இருப்பார்கள். அவர்களும் படத்தை இயக்கும் போது எனக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள். அந்த வகையில் லோகேஷ் என்னை சந்தித்து நான் சுந்தர் சி உதவியாளர். ஒரு கதையை உங்களிடம் சொல்ல வேண்டும் என கேட்டபோது, நான் மாஸான கமர்ஷியல் என்டர்டெய்னராக தான் இருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் கதையை கேட்கும் போது பக்காவான க்ரைம் திரில்லர் ஜானரில் இருந்தது. கதை கேட்டு முடித்ததும் அவரிடம் முதலில் இந்த கதைக்கு என்னை எப்படி யோசித்தீர்கள் எனக் கேட்டேன். இதுவரை நீங்கள் இந்த ஜானருக்கு இசை அமைக்கவில்லை. நீங்கள் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றார். இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இந்த திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் கார்த்திக் அசோகனின் பங்களிப்பு மிகச் சிறப்பாக இருந்தது. இந்த படம் வெளியான பிறகு அவர் பேசப்படுவார்.‌

இயக்குநர் லோகேஷ் அஜில்ஸின் எழுத்து சிறப்பானதாக இருந்தது. படத்தை நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார். படத்தைப் பார்த்த பிறகு அவரை போனில் பாராட்டினேன்.‌ இந்தப் படத்தில் வரும் சைலன்ஸ் கூட ரசிகர்களுக்கு பிடிக்கும்.

இந்தப் படத்தில் ஒரு பாடலை பாடகர் மனோ பாடியிருக்கிறார்.‌ இதுவரை எத்தனையோ பாடல்களுக்கு நான் இசையமைத்திருந்தாலும் எனது இசையில் மனோ பாடியதில்லை. இந்தப் படத்தில் அது நடந்து இருக்கிறது. இதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.‌ இந்தத் திரைப்படம் மே 16ம் தேதி அன்று வெளியாகிறது.‌ ‘போர் தொழில்’, ‘ராட்சசன்’ போன்று இந்த திரைப்படமும் இருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை. படத்தை திரையரங்கத்தில் பார்த்துவிட்டு உங்களுடைய அன்பையும் ஆதரவையும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் பிரபு சாலமன் பேசுகையில், ”தயாரிப்பாளர் அக்பருடன் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன்.‌ இந்தப் படத்தின் கதையை கேட்டதும் பிடித்திருந்தது. கதைக்குப் பொருத்தமான நடிகர்களை தேடத் தொடங்கினோம். அந்தத் தருணத்தில் அற்புதமான நடிப்புத் திறமை உள்ள நவீன் சந்திரா இந்த கதைக்குள் வந்தார். கதாபாத்திரத்தை திரையில் கச்சிதமாக காட்சிப்படுத்துவதில் திறமையானவர் நடிகர் நவீன் சந்திரா என்பதை படம் பார்த்த பிறகு நீங்கள் அனைவரும் சொல்வீர்கள். அதன் பிறகு ஒவ்வொருவராக படத்திற்குள் வந்தனர்.

இந்த படத்தை எனக்கு நெருக்கமாக உணர வைத்தது கார்த்திக் அசோகனின் ஒளிப்பதிவு தான். இதுபோன்ற திரைப்படங்களுக்கு ஒளி சூழல் முக்கியமானது.‌ அவருக்கு சினிமாவில் மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது.

மே 16 இப்படம் திரையரங்கில் வெளியாகும் போது அதற்கான அங்கீகாரத்தை ரசிகர்கள் வழங்குவார்கள் எனும் நம்பிக்கை இருக்கிறது,” என்றார்.

நடிகர் நவீன் சந்திரா பேசுகையில், ”ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ‘சரபம்’ என்றொரு தமிழ் படத்தில் நடித்தேன்.‌ அதன் பிறகு தமிழில் ‘லெவன்’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறேன்.
இந்த விழாவுக்கு வருகை தந்த அனைவருக்கும் முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகவும் உணர்வுபூர்வமான தருணம் இது. இந்த கதையை கேட்ட பிறகு இதில் நடித்தால் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. தயாரிப்பாளர் அக்பர், இயக்குநர் லோகேஷ், ஒளிப்பதிவாளர் கார்த்திக் ஆகிய மூவரும் சேர்ந்து படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளை நேர்த்தியாக உருவாக்கினர். அதனால் இந்த திரைப்படத்தை அவர்களால் எளிதாக உருவாக்க முடிந்தது.

இந்த திரைப்படத்தை ஒரு படமாக இல்லாமல் இரண்டு படமாக படப்பிடிப்பு நடத்தினோம். இதன் போது நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றினர். இந்தப் படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. மே 16ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.‌ மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

நான் இமானின் தீவிர ரசிகன். படத்தில் எல்லா பாடல்களும் நன்றாக இருக்கின்றன‌. இதற்காக அவருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘விருமாண்டி’ படத்தில் அபிராமி அவர்களின் நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அவர்களுடன் இணைந்து நடிக்கும் நாட்களுக்காக காத்திருந்தேன், நட்பாக பழகினார். காட்சிகளில் நடிக்கும்போது அவருடைய திறமையை நேரில் பார்த்து வியந்தேன். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது.‌

ரியா ஹரி படப்பிடிப்பு தளத்தில் எனக்கு நம்பிக்கை அளித்தவர். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவமும் மறக்க முடியாதது. எதிர்காலத்தில் அவர் மிகச்சிறந்த நடிகையாக வலம் வருவார். அதற்காக அவரை வாழ்த்துகிறேன், தெலுங்கு திரையுலகம் சார்பாக அவரை வரவேற்கிறேன்.

‘லெவன்’ படம் நன்றாக உருவாகியுள்ளது, படத்தை சிறப்பான தருணத்தில் வெளியிட வேண்டும் என்பதற்காக காத்திருந்தோம். ரசிகர்களுக்கு நல்லதொரு படத்தை வழங்க வேண்டும் என தீர்மானித்து மே 16ம் தேதி இப்படம் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் பேசுகையில், ” இங்கு வருகை தந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு படத்திற்கு நடிகர்கள் அமைந்துவிட்டால் பாதி வெற்றி உறுதியாகி விடும் என்று சொல்வார்கள் அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. நவீன், திலீபன், ரியா, அபிராமி, ரித்விகா ஆகியோர் இந்தப் படத்தில் இணைந்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மிடில்கிளாஸ் மாதவன் படத்தில் அபிராமியின் ரசிகன் நான்.

என்னுடைய முதல் படம் தமிழ்- தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்க வேண்டும் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்ற போது தொடக்கத்தில் சற்று பதற்றமாக இருந்தது. ஆனால் வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு என்னுடன் பணியாற்றிய நடிகர்களும் நடிகைகளும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் தான் காரணம். அவர்கள் கொடுத்த முழு ஒத்துழைப்பின் காரணமாகத்தான் படத்தினை திட்டமிட்டபடி நிறைவு செய்தேன். அதற்காக இந்த தருணத்தில் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நானும், கார்த்திக்கும் நண்பர்கள். நான் உதவி இயக்குநராகவும், அவர் உதவி ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி பயணத்தை தொடங்கிய தருணத்திலிருந்தே நண்பர்கள். அவன் தான் இந்தப் படத்திற்கு முதுகெலும்பு. படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது எனக்கு கூட சில தருணங்களில் சோர்வு எட்டிப் பார்க்கும். ஆனால் கார்த்திக் சோர்வே இல்லாமல் சுறுசுறுப்பாக பணியாற்றிக் கொண்டே இருப்பார். இந்தப் படத்தின் டீசர் வெளியானவுடன் வேறொரு படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தமானார்.

இமான் சார் எனக்கு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம். படத்தில் பாடல்களிலும், பின்னணி இசையிலும் அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். அதிலும் இடைவேளை தருணத்தில் அவர் வழங்கி இருக்கும் பின்னணி இசை நிச்சயம் பேசப்படும். இமான் சாரின் 2.0 வெர்ஷ‌னை இப்படத்தில் பார்க்கலாம்.‌

தயாரிப்பாளர் அக்பர் – படத்திற்கு நிதி அளிப்பதோடு மட்டும் இல்லாமல் இப்படத்திற்காக நாங்கள் எவ்வளவு கடுமையாக உழைப்பை கொடுத்தோமோ, அதற்கு நிகராக அவரும் உழைத்தார். அவர் ஒருபோதும் தயாரிப்பாளராக இருந்ததில்லை, படத்திற்காக அனைத்து பணிகளையும் அவர் செய்தார். அவரைப் பார்க்கும்போது எனக்கு சற்று பொறாமையாக தான் இருக்கிறது. ஏனெனில் அவ்வளவு ஸ்ட்ராங்கஸ்ட் பெர்சன்.‌ அவருக்காகவே இந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெறும், வெற்றி பெற வேண்டும். ஒரு தயாரிப்பாளர் வெற்றி பெற்றால் தான் ஒரு திரைப்படம் வெற்றி பெறும் என நம்புபவன். அந்த வகையில் இந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெறும் என்று நம்புகிறேன்.‌

நடிகர் நவீன் ஒரு கதாபாத்திரத்திற்குள் வந்துவிட்டால் அந்த கதாபாத்திரமாகவே இருப்பார். கேரக்டரை எழுதும்போது திரையில் எப்படி தோன்றும் என்று நினைத்து எழுதுவதில்லை.‌ ஆனால் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்புவோம். படம் பார்த்த அனைவரும் படம் எப்படி நன்றாக இருக்கிறது என்று ஒருமித்த குரலில் சொன்னார்களோ, அதேபோல் அனைவரும் நவீன் சந்திராவின் நடிப்பையும் பாராட்டினார்கள். இந்தப் படம் நவீன் சந்திராவிற்கு தமிழ் திரையுலகத்தில் நல்ல பெயரை சம்பாதித்து தரும். நிறைய வாய்ப்புகளும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

மே 16 அன்று ‘லெவன்’ படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அற்புதமான திரையரங்க அனுபவம் காத்திருக்கிறது. அதைக் காண திரையரங்கத்திற்கு வாருங்கள்,” என்றார்.