அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்: அவருக்கே இரட்டை இலை!
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. மேலும், தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த அங்கீகாரத்தால் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்துள்ளது.
ஓபிஎஸ் (ஓ.பன்னீர்செல்வம்) அணி, இபிஎஸ் (எடப்பாடி பழனிசாமி) அணி என அதிமுக இரண்டாகப் பிரிந்த பிறகு, கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என்பதால், கட்சியின் பொதுச் செயலாளராக சமீபத்தில் அவர் பொறுப்பேற்றார்.
இதையடுத்து, பொதுச் செயலாளர் பதவி உட்பட ஜூலை11-ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அதிமுகவின் சட்ட விதிகள் திருத்தமாக அங்கீகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் பழனிசாமி தரப்பு வலியுறுத்தியது. ஆனால், தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்கவில்லை.
இதற்கிடையே, கர்நாடக தேர்தலில் போட்டியிட, அதிமுகவில் பழனிசாமி தரப்பு முடிவெடுத்தது. ஓபிஎஸ் தரப்பினரும் போட்டியிடப் போவதாக அறிவிக்க, இரட்டை இலை சின்னம் தொடர்பான சிக்கல் உருவானது. எனவே, தேர்தல் ஆணையம் விரைவாக முடிவெடுக்க உத்தரவிடுமாறு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். பழனிசாமி தரப்பினரின் மனு தொடர்பாக தேர்தல் ஆணையம் 10 நாட்களுக்குள் முடிவெடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஓபிஎஸ் தரப்பில் பெங்களூரு புகழேந்தி, தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்தார். அதில், அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமியை அங்கீகரிக்கக் கூடாது என்று தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில், பழனிசாமி தரப்பினரின் மனு தொடர்பாக, இந்திய தலைமைத் தேர்தல்ஆணையம் இன்று தனது முடிவை அறிவித்துள்ளது. அதில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனால், கர்நாடக தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் எவ்வித சிக்கலுமின்றி அதிமுக போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. முன்னதாக, நேற்று அதிமுக சார்பில் கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் பெங்களூரு புலிகேசி நகர் தொகுதிக்கு டி.அன்பரசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆணைத்தின் அங்கீகாரத்தை அடுத்து அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.