இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்
விமல், சிங்கம் புலி இருவரும் மருந்து கடையில் வேலை பார்க்கிறார்கள். சிங்கம் புலி மனைவியை பிரிந்து தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இருவருக்குமே சம்பளம் குறைவு என்பதால், அவ்வப்போது சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்கிறார்கள்.
யாராவது ஊருக்கு செல்வது இவர்களுக்கு தெரிய வந்தால், அந்த வீட்டில் நுழைந்து அங்கு சந்தேகம் வராத பொருட்களை, சின்ன சின்ன பொருட்களை மட்டும் திருடி எடைக்கு போட்டு அதில் கிடைக்கும் பணத்தை வைத்து பிழைப்பை ஓட்டி வருகிறார்கள். இந்த நிலையில், விமல் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு வீட்டிற்கு வரும் ஆஷ்னா சவேரி மீது விமலுக்கு காதல் வருகிறது.
இந்த நிலையில், ஒருநாள் திருட செல்லும் போது ஒரு வீட்டில் இருந்து விமலுக்கு 5 லட்சம் பணம் கிடைக்கிறது. அந்த பணத்தை எடுத்துக் கொண்டு தனது காதலியுடன் செட்டிலாகி விட நினைக்கிறார் விமல். அதேபோல் மற்றொரு வீட்டில் திருட செல்லும் சிங்கம் புலி அங்கிருந்து ஒரு பையை எடுத்து வருகிறார். அந்த பையில் என்ன இருக்கிறது என்று பார்க்க, அதிலும் லட்சக் கணக்கில் பணம் இருக்கிறது. இருவருமே இதை ஒருவருக்கொருவர் தெரியாமல் மறைக்கின்றனர்.
இதற்கிடையே விமல், சிங்கம் புலி திருடிய பொருள் ஒன்றில் முக்கியமான பொருள் இருப்பதால், அவர்களிடம் இருந்து அந்த பொருளை மீட்பதற்காக ரவுடி கும்பல் ஒன்று அவர்களை தேடுகிறது. அதே நேரத்தில் போலீசான பூர்ணாவும் இருவரையும் தேடி வருகிறார்.
கடைசியில், விமல், சிங்கம் புலி இருவரும் போலீசில் சிக்கினார்களா? ரவுடி கும்பல் அவர்களை கடத்தியதா? அந்த பணம் என்னவானது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
காதல், திருட்டு போன்ற காட்சிகளில் விமல் தனது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கவர்ச்சி புயல் மியாவிடம் சிக்கித் தவிக்கும் காட்சிகளில் சிரிப்பை அள்ளுகிறார். சிங்கம் புலி குருவாக வர, விமல் அவருக்கு சிசியனாக படத்தின் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் பங்காற்றியிருக்கின்றனர். சிங்கம் புலி வழக்கமான தனது காமெடியால் சிரிக்க வைக்கிறார்.
ஆஷ்னா சவேரி காதலுடன் கவர்ச்சியையும் தூவிவிட்டு சென்றிருக்கிறார். மியா ராய் லியோன் கவர்ச்சியில் அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறார். மற்றபடி ஆனந்த்ராஜ், மன்சூர் அலி கான் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
காதல், காமெடி, கவர்ச்சி இவை மூன்றையுமே பொருளாக கொண்டு படத்தை இயக்கியிருக்கிறார் ஏ.ஆர்.முகேஷ். முதல் பாதி சற்றே மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாவது பாதியில் ஆனந்த் ராஜ் வருகைக்கு பின் படம் வேகமெடுக்கிறது. அடல்ட் காமெடி ஜானரில் இயக்குநர் கதையில் காட்டிய முக்கியத்துவத்தை திரைக்கதையிலும் கொஞ்சம் காட்டியிருந்தால் படம் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும்.
சங்கர நாராயணன் நடராஜனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
மொத்தத்தில் `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ சிறியதாக இருக்கு.