இயேசுவே, நீயாவது மூன்று நாட்கள் தான் பிணமாக கிடந்தாய்…!

என் அன்பு இயேசுவே,

உன்னை கடந்த வெள்ளிக்கிழமை அன்று கடுமையாக அடித்து சித்ரவதை செய்து கொலை செய்தனர். ஆனால் இன்று நீ உயிர்தெழுந்து விட்டாய். உன் வருகையை கொண்டாடுகிறோம்.

உன்னை போன்றே இறந்து நட்சத்திரமான ரோகித் வெமுலா உயிர்த்தெழுவான் என்று எதிர்பார்த்தேன். நடக்கவில்லை.

தண்டவாளத்தில் உடல் சிதறி மாண்டு போன இளவரசன் உயிர்த்தெழுவான் என்று எதிர்பார்த்தேன். நடக்கவில்லை.

துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட பரமக்குடி பந்தங்கள் உயிர்த்தெழுவார்கள் என்று எதிர்பார்த்தேன். நடக்கவில்லை.

ஏன், 5 நாட்களுக்கு முன்பு சாதி வெறியர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு தகனம் செய்யப்படாமல் பிணவறையில் கிடக்கும் முருகன் உயிர்த்தெழுவான் என்று எதிர்பார்த்தேன். நடக்கவில்லை.

நந்தினியும், கலைச்செல்வியும் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டனர். அவர்களாவது உயிர்த்தெழுவார்கள் என்று எதிர்பார்த்தேன். நடக்கவில்லை.

இந்த கொடுமை எல்லாம் நடந்தும் கண்டும் காணாமலும் கள்ள மவுனம் காக்கும் இந்த சாதி சமூகத்திற்கு எதிராக உயிர்த்தெழுவார்கள் என்று எதிர்பார்த்தேன். அதுவும் நடக்கவில்லை.

ஆனால், எங்களை பிணங்களாக ஆக்கிய இந்த சாதி சமூகம் மட்டும் உயிர்த்தெழுந்து கொண்டே இருக்கிறது.

நீயாவது மூன்று நாட்கள் தான் பிணமாக கிடந்தாய்.

நாங்களோ நூற்றாண்டுகளாக பிணமாக கிடக்கிறோம்.

எங்கள் உயிர்த்தெழுதலில் நீ கொண்டாட வேண்டும் ஈஸ்டர்.

அது நடக்குமா?

VINCENT RAJ (EVIDENCE KATHIR)