இ-மெயில்: விமர்சனம்
நடிப்பு: ராகினி திவேதி, அசோக், ஆதவ் பாலாஜி, ஆர்த்திஸ்ரீ, பில்லி முரளி, மனோபாலா, லொள்ளு சபா மனோகர் மற்றும் பலர்
இயக்கம்: எஸ்.ஆர்.ராஜன்
ஒளிப்பதிவு: எம்.செல்வம்
இசை: கவாஸ்கர் அவினாஷ் & ஜுபின்
படத்தொகுப்பு: ராஜேஷ்குமார்
தயாரிப்பு: எஸ்ஆர் ஃபிலிம் ஃபேக்டரி
பத்திரிகை தொடர்பு: ஏ.ஜான்
கத்தியால் காய்கறி நறுக்கலாம்; மனிதக் கழுத்தையும் அறுக்கலாம். அதுபோல, நெருப்பால் விளக்கை ஏற்றலாம்; வீட்டையும் கொளுத்தலாம். அவை யார் கையில் இருக்கின்றன என்பதைப் பொறுத்து அவற்றின் பயன்பாடு நல்லதாகவோ, கெட்டதாகவோ அமையும். இந்த கத்தி, நெருப்பு போன்றது தான் அறிவியல் சாதனம். அதை நல்ல நோக்கத்துக்கும் பயன்படுத்தலாம்; கெட்ட நோக்கத்துக்கும் பயன்படுத்தலாம். நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்ப புரட்சியின் விளைவான இணையமும் (ஆன்லைன்) இதற்கு விதிவிலக்கு அல்ல. இன்று இணைய வசதியைப் பயன்படுத்தாத மனிதர்களே இருக்க முடியாது எனும் அளவுக்கு நாம் இணையத்தின் மூலம் ஏராளமான நல்ல பலன்களைப் பெற்று வருகிறோம். அதே நேரத்தில், சைபர் கிரைம் குற்றவாளிகள் இதே இணையத்தைப் பயன்படுத்தி, பலவித கொடூர குற்றச்செயல்களில் ஈடுபட்டு, பலரது வாழ்க்கையை நாசமாக்கி, நரகமாக்கி விடுகிறார்கள் என்ற செய்திகளையும் பார்த்து வருகிறோம். அப்படிப்பட்ட சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் சிக்கித் தவிக்கும் ஒரு பெண்ணின் கதை தான் ‘இ-மெயில்’ திரைப்படம்.
மனோபாலா நடத்தும் ‘கைலாசம் ரியல் எஸ்டேட்’ நிறுவனத்தில் பணி புரிகிறார் நாயகி ராகினி திவேதி. அவர் திருப்திகரமாக பணியாற்றவில்லை என கருதும் மனோபாலா, அவரை எந்நேரமும் திட்டிக்கொண்டே இருக்கிறார். தனது சம்பளம் கருதி பொறுமை காக்கும் ராகினி திவேதி, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து மனோபாலா மீது வசைமாரி பொழிந்துவிட்டு வேலையை விட்டு வெளியேறுகிறார். இதனால் அன்றாட செலவுகளுக்கே பணம் இல்லாமல் சிரமப்படுகிறார். இணைய வழியிலான ஆன்லைன் கேமில் ஆர்வம் உள்ள அவர், அதில் பணமும் கிடைக்கும் என்பதால் தீவிரமாக இறங்கி விளையாடுகிறார். ஒரு கட்டத்தில் அதற்கு அடிமை ஆகிறார். விளைவாக, முகம் தெரியாத சைபர் கிரைம் குற்றவாளிகள் அவரை தங்கள் சதிவலையில் சிக்க வைக்கிறார்கள். பிரச்சனை ஆரம்பம் ஆகிறது.
இந்நிலையில் ராகினி திவேதியும், அவர் வசிக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் குடியிருக்கும் நாயகன் அசோக்கும் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள். தன் மனைவி ஆன்லைன் கேமில் விளையாடி சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் சிக்கித் தவிக்கிறார் என்பதை அறிந்து, அவரை காப்பாற்ற முயலும் அசோக்கின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதனால் ராகினி திவேதி தானே நேரடியாக களத்தில் இறங்கி தனது பிரச்சனையைத் தீர்க்க முடிவு செய்கிறார்.
சைபர் கிரைம் குற்றவாளிகளால் ராகினி திவேதிக்கு ஏற்படும் பிரச்சனை என்ன? அதன் விபரீதம் என்ன? அதன் பின்னணியில் மர்மமாக மறைந்திருக்கும் சைபர் கிரைம் குற்றவாளிகள் யார்? அவர்கள் அடுக்கடுக்காக ஏற்படுத்தும் சிக்கல்களை ராகினி திவேதி எப்படி அறுத்தெறிந்து வென்று காட்டுகிறார்? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத பல திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக விடை அளிக்கிறது ‘இ-மெயில்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
முதன்மை கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்திருக்கிறார் ராகினி திவேதி. கதையைத் தாங்கிப் பிடிக்கும் கனமான வேடம். பாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். அவ்வப்போது கிளாமராக உடை அணிந்து வந்து சூடேற்றுகிறார். காதல் காட்சிகளிலும், அதிரடி சண்டைக் காட்சிகளிலும் அமர்க்களப்படுத்தி இருக்கிறார்.
நாயகியின் காதல் கணவராக, நாயகனாக நடித்திருக்கிறார் அசோக். காதல் காட்சிகளில் நெருக்கம் காட்டுகிறார். மனைவிக்கு ஆபத்து என்றதும் உடனே களமிறங்கும் வேகத்தில் கவனம் ஈர்க்கிறார். அவர் வரும் காட்சிகள் குறைவு என்றாலும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மனோபாலா, லொள்ளு சபா மனோகர் ஆகியோர் வரும் காமெடிக் காட்சிகள் சிரிக்க வைக்கின்றன.
இரண்டாவது நாயகனாக வரும் ஆதவ் பாலாஜி, இரண்டாவது நாயகியாக வரும் ஆர்த்திஸ்ரீ, வில்லனாக வரும் பில்லி முரளி ஆகியோரும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
ஆன்லைன் விளையாட்டில் ஏற்படும் ஆபத்து குறித்து இன்றைய இளைய தலைமுறையினரை எச்சரிக்கும் வகையிலும், அதே நேரத்தில் பொழுதுபோக்கு அம்சங்களுக்குக் குறைவில்லாமலும், கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் இப்படத்தை படைத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.ஆர்.ராஜன். ”காட்டுக்கு ஆண் சிங்கம் ராஜாவாக இருந்தாலும், எப்போதும் வேட்டையாடுவது பெண் சிங்கம் தான். அதே போல ஒரு பெண்ணாக நான் இருந்தாலும், எனக்குள் ஆயிரம் ஆண்கள் இருக்கிறார்கள்” என்று நாயகி கர்ஜிக்கும் வசனத்துக்கு ஏற்ப அவரது கதாபாத்திரத்தையும், எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தும் காட்சிகளையும் உருவாக்கி, படத்தை போரடிக்காமல் நகர்த்திச் செல்வதில் இயக்குநர் வெற்றி பெற்றுள்ளார்.
எம்.செல்வத்தின் ஒளிப்பதிவு, படத்தை வண்ணமயமாகவும், இளம் தலைமுறையினருக்குப் பிடிக்கும் விதமாகவும் காட்டுகிறது.
கவாஸ்கர் அவினாஷ் இசையில் பாடல்கள் ஓ.கே ரகம். ஜுபினின் பின்னணி இசை காட்சிகளின் தன்மைக்குப் பொருத்தமாக பயணித்திருக்கிறது. ராஜேஷ்குமாரின் படத்தொகுப்பு படத்தின் விறுவிறுப்புக்கு உறுதுணையாக இருந்துள்ளது.
‘இ-மெயில்’ – கதையில் திடீர் திடீரென ஏற்படும் திருப்பங்களுக்காகப் பார்த்து மகிழலாம்!