“பெரிய நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளை முதலில் அகற்றுக!” – ரோகிணி
“ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. பெரிய நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளை முதலில் அகற்ற வேண்டும்” என்று நடிகை ரோகிணி கோரியுள்ளார்
மார்க்சிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 15-வது மாநில மாநாட்டின் 2-வது நாள் நிகழ்ச்சியாக பிரதிநிதிகள் மாநாடு திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு நடிகை ரோகிணி பேசியதாவது:
சினிமாவைத் தாண்டி சமூகத்தை பார்த்து சில உண்மையான காரியங்களை மேற்கொண்டு வருகிறேன். சினிமா மட்டுமே எனது வாழ்க்கை இல்லை. அதையும் தாண்டி சமூகத்தின் பார்வைக்கு என்னைக் கொண்டு சென்றது இதைப் போன்ற மாநாடுகள்தான். நாம் கற்றுக்கொள்ள இந்த மேடையில் நிறைய வாய்ப்புகள் உள்ளன.
சென்னையில் வெள்ளம் வந்தபோது பலரும் களமிறங்கி உதவி செய்தனர். மழை தொடங்கியபோதே, என்னை அழைத்து கைகோர்த்துச் செயல்பட்டது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். எப்படியும் அந்த பேரிடரில் இருந்து நாம் மீண்டு விடுவோம் என நம்பிக்கை வந்தது.
சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதி ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் பணியிடங்களில் இளைஞர்களாகிய நீங்கள் அமர வேண்டும். இப்போதும், சில நல்ல அதிகாரிகள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. பெரிய நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளை முதலில் அகற்ற வேண்டும். கல்வி, சலுகைகள் என ஒவ்வொரு விஷயத்தையும் போராடிப் பெறும் சூழல்தான் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.