முதல் பார்வை: பா.ரஞ்சித் தயாரித்துள்ள ‘டாக்டர் ஷூ மேக்கர்’

இயக்குனர் பா.ரஞ்சித் தனது ‘நீலம்’ அமைப்பு மூலமாக ‘டாக்டர் ஷூ மேக்கர்’ என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளார். கால்பந்து விளையாட்டுக்கான ஷூ தைத்துக் கொடுக்கும் “டாக்டர் இமானுவேல்” என்ற ஆளுமை பற்றிய ஆவணப்படம் இது.

இந்திய தேசமே கிரிக்கெட்டின் பின்னால் அலைந்தாலும் வடசென்னை மக்கள் எப்போதும் கால்பந்து விளையாட்டின் மீது தான் ஆர்வமாக இருந்திருக்கிறார்கள் என்பது நீண்ட நெடிய வரலாறு. அப்படி சிறுவயதில் கால்பந்து விளையாட்டின் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்த இம்மானுவேல், பிய்ந்துபோன தன் ஷூவை தைப்பதற்காக, ஷூ தைத்துக்கொடுப்பவர் ஒருவரை நாடியபோது, அவர் வாரக்கணக்கில் இம்மானுவேலை அலையவிட்டிருக்கிறார். கோபத்தில் தன் ஷூவை தானே தைக்க முயன்றார் இம்மானுவேல். அதன்பின் முறையாக ஷூ தைப்பவர் ஒருவர் உதவியோடு மிக நேர்த்தியாக ஷூ தைக்கக் கற்றுக்கொண்டார்.

வியாசர்பாடியில் ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கிறது இம்மானுவேலின் அந்த ஷூ தைக்கிற குட்டி ராஜாங்கம். கால்பந்து மீது தீராத ஆர்வம் கொண்ட, ஆனால் பெரிய அளவில் பணம் செலவு செய்து ஷூ வாங்க முடியாத சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் கனவுகளுக்காக, ஓயாது இயங்கிக் கொண்டிருக்கிறது இம்மானுவேலின் கண்களும், விரல்களும்.

இவ்வளவு காசு வேண்டும் என்று எப்போதும், தன்னிடம் வரும் ஏழை சிறுவர்களை நிர்ப்பந்திப்பதில்லை இம்மானுவேல். மிகச் சிறிய தொகைக்கு, அல்லது அவர்களால் தர முடிந்ததை வாங்கிக்கொண்டு, பல ஆண்டுகளாக இந்த சேவையை செய்து வரும் இம்மானுவேல் மிகப்பெரிய ஆளுமையாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறார்.

அந்த சிறிய அறை முழுக்க ஷூக்களால் நிரம்பியிருக்கிறது. இம்மானுவேலின் இதயம் முழுவதும் அன்பாலும் தன்னம்பிக்கையாலும் நிறைந்திருக்கிறது. திரும்ப வாங்கப்படாத நூற்றுக்கணக்கான ஷூக்களை தூக்கி எறிந்து விடாமல் பாதுகாக்கிற இம்மானுவேலிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை மட்டும் வேலை செய்வதில்லை இம்மானுவேல். காலையில் சர்ச்சுக்கு சென்றுவிட்டு வந்தபின் தன் குடும்பத்தினரோடு, பேரப்பிள்ளைகளோடு நேரம் செலவிடுகிறார்.

“டாக்டர் இம்மானுவேல்” என்று இவரை அழைக்கத் தொடங்கியது, இவரிடம் ஷூ தைத்துச்சென்ற சிறுவர்கள் தான். எப்பேர்ப்பட்ட ஷூவை கொண்டு சென்றாலும், அது எவ்வளவு கிழிந்திருந்தாலும் அதை அறுவை சிகிச்சை செய்து மிக அழகாக, தரமாக தைத்துக் கொடுக்கிற வல்லமை படைத்தவர் இம்மானுவேல். அதனால் தான் அவரை “டாக்டர் இம்மானுவேல்” என்று அழைக்க ஆரம்பித்தோம் என்கிறார்கள் அவர்கள். இப்படி பல ஆச்சர்யங்கள் நிறைந்த ‘டாக்டர் ஷூமேக்கர்’ ஆகிய டாக்டர் இம்மானுவேல் ஆவணப்படம் ஆச்சர்யம் மட்டுமல்ல, இதயத்தின் அடி ஆழம் வரை நெகிழ வைத்த நெகிழ்ச்சி.

இம்மானுவேலை மட்டுமல்லாது அவரது குடும்பத்தினரையும் இதில் ஆவணப்படுத்தியுள்ளனர். ஷூ தைக்கும் வேலை செய்வதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்தும் ஆவணப்படத்தில் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

தனது 56 வது வயதிலும் கூட அந்த வேலையை விடாப்பிடியாக செய்வதற்கான காரணத்தை அவர் சொல்வது அருமை. கால்பந்தாட்டத்தின் மீதான காதலே அவரைத் தொடர்ந்து கால்பந்தாட்ட ஷூக்களைத் தைக்க வைத்திருக்கிறது என்பதை அழகாக ஆவணப்படத்தில் பதிவு செய்துள்ளனர்.

இப்போதும் வேலையை முடித்துவிட்டு, சிறுவர்களோடு சேர்ந்து அவர் கால்பந்தாட்டம் ஆடாமல் இருப்பதில்லை. இம்மானுவேலைப் பற்றி கால்பந்தாட்டப் பயிற்சியாளர்கள் ஒவ்வொருவரும் கூறும் கருத்துகள் அவரது காலபந்தாட்ட காதலைப் பதிவு செய்கிறது. அவரைப் பற்றி மட்டுமே பேசாமல் கால்பந்தாட்டம் சென்னையில் யாரால் அதிகம் ஆடப்பட்டு வருகிறது, அதற்கான மதிப்பீடுகள் சமூகத்தில் எவ்வாறு உள்ளன, அக்கால்பந்தாட்டத்தை நேசிக்கும் வீர்ர்களின் நிலை என்ன? என்பதையும் ஆவணப்படத்தில் பதிவு செய்துள்ளனர். கால்பந்து விளையாட்டில் “ஷூ” எவ்வளவு முக்கிய அங்கம் வகிக்கிறது என்பதையும் இந்தப்படம் தெளிவாக குறிப்பிடுகிறது.

ஆரம்பத்தில் ஒளிப்பதிவு தடுமாறினாலும் போகப்போக அருமையாக இருக்கிறது. படத்தொகுப்பு நன்றாக இருக்கிறது. முழுக்க முழுக்க தமிழிலேயே இவ்வளவு சுவாரசியமான ஆவணப்படத்தை பார்ப்பதென்பது இதுவே முதல்முறையாக இருக்கக் கூடும். இந்த ஆவணப்படத்தை டி.ஜே.பாண்டிராஜ், வினோத் இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர்.