“மனநோய் பற்றிய மூட கருத்துக்களை பரப்புகிறது பிக்பாஸ்!” – டாக்டர் ருத்ரன்
மனநலம் குன்றியவர் குறித்து பல மூட கருத்துகள் பலர் மத்தியில் இருக்கையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அது குறித்த விகார விமர்சனமும், வேடிக்கை எனும் பெயரால் காலங்காலமாய் இந்நோய் பற்றிய மட்டமான மடத்தனமான சித்தரிப்பும் நேற்று ஒளிபரப்பப்பட்டது.
எது குறித்தும் ஆழமான புரிதல் இல்லாத ஊடக ஆவேசத்தின் அவசர ஆட்டமாய் இதை ஒதுக்கிச் செல்ல முடியவில்லை.
பிற முட்டாள்கள் இன்னமும் ‘நவராத்திரி’ பட மனநோயாளிகளின் அபத்த நகைச்சுவையையே பிரதான சித்தரிப்பாய் நினைத்துக் கொண்டிருந்தாலும், அந்த கூட்ட்த்தில் இருக்கும் ஒரு செவிலியருக்கும் மனநோயால் பாதிக்கப்பட்டவர் எப்படி இருப்பார், நடந்து கொள்வார் என்பது தெரியவில்லை என்பது தான் கேவலம். சமூகத்தில் இப்படித் தான் பல துறைகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளவர்களும் இருக்கிறார்கள், இதில் மருத்துவர்களும் அடக்கம்.
1986 முதல் 2001 வரை என் எல்லா செயல்பாட்டிலும் மனநலம்+மனநோய் விழிப்புணர்வுக்காக உழைத்தவன் என்பதில் எனக்கு ஒரு தற்பெருமை உண்டு. அத்தனையும் போதவில்லை என வருத்தமும் கோபமும் நேற்று என்னுள் பொங்கியது.
ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் மூடநம்பிக்கைகள் பரவலாக பரவுகின்றன. மனநோய்கள் குறித்து மக்களிடையே மீண்டும் ஒரு தீவிர விழிப்புணர்வு உருவாக்கும் பணி பொறுப்பானவர்களுக்கு அவசியமாகிறது.
வியாபார நிமித்தம் கமல் இதை விமர்சிக்காமல் விட்டாலும், இது குறித்து வேறேதாவது தளத்திலாவது பேசுவது இந்நிகழ்ச்சியில் சம்பாதிப்பதற்கான பிராயச்சித்தமாகும். இதெல்லாம் அதீத எதிர்பார்ப்பு என்பதும் தெரியும்.
டாக்டர் ருத்ரன்
மனநல மருத்துவர்