மன அழுத்தத்தில் இருக்கிறார் புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி!

பெரும் செல்வந்தரான கார்ல் மார்க்ஸ் தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலைக்காக போராடி தன்னை அர்ப்பணித்தபோது, தொழிலாளர்களுக்கும் மார்க்ஸ்க்கும் என்ன சம்மந்தம் என்று யாரும் கேட்கவில்லை.

வெள்ளை நிறவெறிக்கு எதிராக கருப்பின மக்களின் விடுதலைக்காக தன்னை அர்பணித்து போராடிய நெல்சன் மண்டேலாவின் விடுதலை படையில் (தேசத்தின் ஈட்டி) தளபதியாக இருந்து போராடியவர் ஜோஸ்லேவோ. இவர் வெள்ளை இனத்தைச் சார்ந்தவர். பின்னாளில் மண்டேலாவுடன் வெள்ளை அரசு சமாதான பேச்சுவார்த்தை நடத்தியபோது மண்டேலாவுக்கு கை கொடுத்த வெள்ளை அதிகார வர்க்கம், ஜோஸ்லேவுக்கு கை கொடுக்க மறுத்தது. அப்படி கருப்பின விடுதலைக்காக தன்னையே கொடுத்து உண்மையாய் போராடினார். அப்போது கூட யாரும் ஜோஸ்லேவுக்கும் கருப்பின விடுதலைக்கும் என்ன சம்மந்தம் என்று சொல்லவில்லை.

தமிழின விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய விடுதலைப்புலிகளின் ஆண்டன் பாலசிங்கத்தோடு இணைந்து களமாடியவர் அடேல் பாலசிங்கம். தமிழர்களால் “அண்ணி” என்று அழைக்கப்பட்ட அவர் வெள்ளை பெண்மணிதான். அடேலுக்கும் தமிழர்களுக்கும் என்ன சம்மந்தம் என்று யாரும் கேட்டதில்லை.

அதேபோல இன்று வரை தமிழர்களின் போராட்டத்தை ஆதரித்து எழுதியும் பேசியும் வரும் பிலியன் ரத்னே என்பவர் சிங்கள இனத்தை சார்ந்தவர். தமிழர் விடுதலைக்கும் சிங்கள பிலியனுக்கும் என்ன சம்மந்தம் என்று யாரும் கேட்டதில்லை. பண்டாரநாயக குடும்பத்தைச் சார்ந்த பிலியன் இப்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செனட் உறுப்பினராக இருக்கிறார். இன்று வரை யாரும் கேள்வி கேட்டதில்லை.

இவ்வளவு ஏன், கீழ்த்தஞ்சை பகுதியில் ஆதிக்க சாதிகளுக்கு எதிராக தலித்துகளுக்கு ஆதரவாக போராடிய சீனிவாசராவ் பிராமண வகுப்பில் பிறந்தவர் தான். பார்ப்பானுக்கும் பள்ளனுக்கும் பறையனுக்கும் என்ன சம்மந்தம் என்று யாரும் கேட்டதில்லை.

இன்னும் ஏன், தாழ்த்தப்பட்டோர் விடுதலைக்காக தோழர் லெனினோடு இணைந்து ‘அழித்தொழித்தல்’ பணியில் ஈடுபட்டு தூக்கு தண்டனை வரை சென்று 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் சிறைவாசியாக இருந்த போராளி தோழர் தியாகு தலித் அல்லாதவர் தான். தியாகுக்கும் தலித்துகளுக்கும் என்ன சம்மந்தம் என்று யாரும் இதுவரை கேட்டதில்லை.

மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் கூலி உயர்வுக்காக பேரணி நடத்தியபோது தாமிரபரணி நதிக்கரையில் அரச பயங்கரவாதம் தாண்டவமாடியது. அந்த தொழிலாளர்களின் படுகொலை குறித்து “ஓர் நதியின் மரணம்” என்ற படம் எடுத்து தலித்துகளின் படுகொலையை உலகுக்கு வெளிச்சம் பாய்ச்சிய தோழர் ஆர்.ஆர்.சீனிவாசனுக்கும் தலித்துகளுக்கும் என்ன சம்மந்தம் என்று யாராவது கேட்டார்களா?

தலித்துகளின் படுகொலை, குச்சி கொளுத்துதல் போன்ற வன்கொடுமைகளை கண்டித்து தலித்துகள் அல்லாத பெரியாரிய, மார்க்சிய முற்போக்கு சக்திகள் போராடும்போது ,தலித்துகளுக்கும் இவர்களுக்கும் என்ன சம்மந்தம் என்று யாராவது கேள்வி தொடுத்தார்களா?

ஆனால், ஒரு ‘உலக மகாஅறிவுஜீவி’ கேள்வி கேட்கிறது, ’நீட்டுக்கும் கலைக்கல்லூரி மாணவர்களுக்கும் என்ன சம்மந்தம்? ஏன் இவர்கள் போராட வேண்டும்?’ என்று.

மருத்துவர் கிருஷ்ணசாமியின் இந்த கேள்வியால் பாவம், அவர் மிக மோசமான மன அழுத்தத்தில் இருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.  ஒரு நல்ல மனநல மருத்துவரை அணுகுவது மருத்துவர் கிருஷ்ணசாமிக்கு நல்லது.

ஒன்று மட்டும் புரிகிறது… மருத்துவர்கள் அவர்கள் சார்ந்த சமூகத்தை தவறாக வழிநடத்துகிறார்கள் என்பதுதான்.

ஒருவர் மருத்துவர் ராமதாசு.

மற்றொருவர் இந்த கிருஷ்ணசாமி!

வன்னிஅரசு
விடுதலை சிறுத்தைகள் கட்சி