டூடி – விமர்சனம்
நடிப்பு: கார்த்திக் மதுசூதன், ஷ்ரிதா சிவதாஸ், ஜீவா ரவி, ஸ்ரீரஞ்சனி, ஜீவி மதுசூதன், உத்ரா, அர்ஜுன், மணிகண்டன், அக்ஷதா, எட்வின் ராஜ் மற்றும் பலர்
இயக்கம்: கார்த்திக் மதுசூதன்
தயாரிப்பு: ’கனெக்டிங் டாட்ஸ் புரொடக்சன்ஸ்’ சார்பில் கார்த்திக் மதுசூதன்
இசை: பாலசாரங்கன்
ஒளிப்பதிவு: மதன் சுந்தர்ராஜ், சுனில் ஜி.என்
மக்கள் தொடர்பு: மணவை புவன்
பெங்களூருவில் பப்பில் கிடார் வாசிக்கும் 33 வயது இசைக் கலைஞர் கார்த்திக் மதுசூதன். காதல், கல்யாணம், நீண்டகால ரிலேஷன்ஷிப் போன்றவற்றின் மீது துளியளவும் நம்பிக்கை இல்லாதவர். தனக்கு பிடித்த பெண்களிடம் நைசாக பேசி, அவர்களை படுக்கைக்கு அழைத்து வந்து, அப்போதைக்கு உல்லாசமாக இருந்துவிட்டு அனுப்பிவிடக் கூடிய உமனைசர். தானொரு உமைனசர் என்பதை பகிரங்கமாக சொல்லிக்கொள்வதில் அலாதி பிரியம் கொண்டவர்.
நண்பனின் திருமண ரிசப்ஷனில் நாயகி ஷ்ரிதா சிவதாஸைப் பார்க்கும் கார்த்திக், தன் வழக்கப்படி அவரிடம் நைசாகப் பேசி படுக்கையறைக்கு அழைத்துச் செல்ல முயற்சிக்கிறார். அதற்கு ஷ்ரிதா இணங்க மறுத்தபோதிலும், கார்த்திக் காதலிக்கிற மாதிரியெல்லாம் நடிக்காமல் நேரடியாக செக்ஸுக்கு அழைக்கும் அவரது நேர்மை பிடித்துப்போகிறது. ஒரு சில சந்திப்புகளுக்குப்பின் கார்த்திக் மீது காதல் கொள்கிறார்.
ஷ்ரிதா தன் காதலைத் தெரிவித்தவுடன் அதை ஏற்க மறுக்கும் கார்த்திக், பின்னொரு கட்டத்தில் ஏற்கிறபோது, தனக்கு ஐந்து வருடமாக ஒரு காதலன் இருப்பதாக சொல்லி அதிர்ச்சி தருகிறார் ஷ்ரிதா. இதனால் ஆத்திரம் கொள்ளும் கார்த்திக், ஷ்ரிதாவுடனான உறவை முறித்துக்கொண்டு, விலகிப் போய்விடுகிறார்.
இதன்பின் என்ன நடந்தது? நாயகனும் நாயகியும் இணைந்தார்களா? அல்லது நாயகி தன் முதல் காதலனை மணந்தாரா? என்பன போன்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமான திருப்பங்களுடன் விடை சொல்லுகிறது ‘டூடி’ படத்தின் மீதிக்கதை.
கிடார் இசைக் கலைஞராகவும், ‘உமனைசர்’ எனப்படும் ‘பொம்பளை பொறுக்கி’யாகவும், அதீதமாக கோபம் கொள்பவராகவும் சிறப்பாக நடித்திருக்கிறார் கார்த்திக் மதுசூதன்.
நாயகியாக வரும் ஷ்ரிதா சிவதாஸ், சிக்கலும் குழப்பமும் நிறைந்த கதாபாத்திரத்தில் தெளிவாகவும் நேர்த்தியாகவும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகியின் பெற்றோராக வரும் ஜீவா ரவி, ஸ்ரீரஞ்சனி, நாற்பது ஆண்டுகளாக காதல் குறையாமல் கணவன் மனைவியாக வாழும் ஜீவி மதுசூதன், உத்ரா, மற்றும் நாயகனின் நண்பர்களாக வரும் நடிகர்கள் என அனைவரும் இயல்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
முதல் பாதியை ரகளையாகவும், இரண்டாம் பாதியை விறுவிறுப்பாகவும் நகர்த்தியுள்ளார் இயக்குனர் கார்த்திக் மதுசூதனன். பாலசாரங்கனின் பின்னணி இசை அருமை. மதன் சுந்தர்ராஜ், சுனில் ஜி.என் ஒளிப்பதிவு சிறப்பு.
’டூடி’ – பார்த்து ரசிக்கலாம்!