டாக்டர் – விமர்சனம்
நடிப்பு: சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, அர்ச்சனா, அருண் அலெக்ஸாண்டர், வினய்
இயக்கம்: நெல்சன் திலீப் குமார்
தயாரிப்பு: கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் & சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ்
இசை: அனிருத்
ஒளிப்பதிவு: விஜய் கார்த்திக் கண்ணன்
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் நயன்தாரா – யோகிபாபு நடித்த ‘கோலமாவு கோகிலா’ என்ற வெற்றிப்படத்தை இயக்கியவர், விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தை இயக்கிக்கொண்டிருப்பவர் என்பதால், அவர் இயக்கியிருக்கும் ’டாக்டர்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியிருக்கிறது..
டாக்டர் வருண் (சிவகார்த்திகேயன்) ராணுவத்தில் பணியாற்றும் ஒரு மருத்துவர். எல்லா ஒழுங்குகளையும் கண்டிப்புடன் கடைப்பிடிப்பவர். இதன் காரணமாகவே அவருக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பத்மினி (பிரியங்கா மோகன்), அவரை திருமணம் செய்ய மறுத்துவிடுகிறார். இந்த நேரத்தில் பத்மினியின் அண்ணன் மகள் காணாமல் போய்விடுகிறாள். அந்த சிறுமியைத் தேடுவதில் உதவ இறங்குகிறார் டாக்டர் வருண். அப்போது சிறுமிகளை கடத்தி வெளிநாட்டுக்கு விற்பனை செய்யும் கும்பல் பற்றி அவருக்குத் தெரிய வருகிறது. அந்த கும்பலால் கடத்தப்பட்ட சிறுமிகளை மீட்கும் பணியில் இறங்கும் டாக்டர் வருண், அதில் வெற்றி பெற்றாரா இல்லையா, என்பது தான் ‘டாக்டர்’ படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன், தன்னுடைய வழக்கமான கலகலப்பு காமெடி பாணியில் இருந்து விலகி முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சிவகார்த்திகேயன். பாராட்டுகள்.
நாயகியாக நடித்திருக்கும் பிரியங்கா மோகன் அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் வினய். அர்ச்சனா, தீபா சங்கர் உள்ளிட்டோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
வழக்கமான ‘பெண் கடத்தல்’ தான் அடிப்படை கதை, என்றாலும், அதற்கு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அமைத்த திரைக்கதையும், காட்சிகளும், மற்ற படங்களில் இருந்து மாறுபட்டு இருப்பதோடு, அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியான படமாகவும் உள்ளது. ஒரு சீரியசான திரில்லர் படத்தைப் போலத் துவங்கினாலும், படம் நகரநகர யோகிபாபு, ரெடின் போன்ற கலகலப்பான பாத்திரங்கள் கதையில் வந்து சேரும்போது, ஓர் அக்மார்க் பிளாக் காமெடி படமாக உருவெடுக்கிறது. குறிப்பாக, யோகிபாபு, ரெடின், சுனில் ஆகியோர் பின்னியிருக்கிறார்கள்.
அனிருத்தின் இசை, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு, ஆர்.நிர்மல் படத்தொகுப்பு படத்திற்கு பலம்.
படத்தில் உள்ள சிலபல குறைகளை விட்டுவிட்டுப் பார்த்தால், இரண்டரை மணி நேரம் ஜாலியாக ரசித்து சிரித்துவிட்டு வரத் தக்க படம் ‘டாக்டர்’.