“கதறும் மக்களுக்கு கைவிலங்கு போடும் கொடூர அரசை கண்டித்து” 23ஆம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்!
திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம் எட்டு வழி பசுமைச் சாலை திட்டம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை அழித்தும், பசுமை நிறைந்த மலைகளை உடைத்தும் அமைக்கப்படுவதை எதிர்த்து விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
போராடும் மக்களிடம் முழுமையான கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தி மக்கள் கருத்தை கேட்க வேண்டும் என்று திமுக சார்பில் சட்டப்பேரவையில் வைத்த கோரிக்கையையும் தமிழக அரசு காது கொடுத்து கேட்கவில்லை. கருத்து கேளுங்கள் என்றால், தங்களின் உணர்வுகளோடு ஒன்றிவிட்ட தங்களின் விளைநிலங்களை எடுக்காதீர்கள் என்று கதறும் மக்களுக்கு கைவிலங்கு போடும் கொடூர அரசாக தமிழக அரசு இருப்பது மக்களை சொல்லொணா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜனநாயக ரீதியில் போராடும் அப்பாவி மக்களை கைது செய்தால் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தும் முதல்வர் தன் சொந்த மாவட்ட மக்கள் மீது ஏவிவிட்டுள்ள காவல்துறை அடக்குமுறையை நிறுத்தவில்லை. குண்டர் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் போன்றவற்றை பிரயோகித்து ஜனநாயக பூர்வமான அறவழி போராட்டங்களை அடக்கி ஒடுக்கி விடலாம் என்று பகல்கனவு கண்டு கொண்டிருக்கிறது தமிழக அரசு.
போராடிய மாணவி வளர்மதியையும், சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் ஆகியோரையும் கைது செய்து சிறையில் அடைத்து, ஒட்டுமொத்த மக்களையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. எனவே, சேலம் பசுமை சாலை திட்டம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களிடம் ஆக்கப்பூர்வமான கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தவும், அதுவரை விளைநிலங்கள் வழியாக நடத்தப்படும் சர்வேயை நிறுத்தி வைக்கவும், போராடும் மக்கள் மீதான தமிழக அரசின் காவல்துறை அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்தும் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட திமுக சார்பில் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி வரும் 23ஆம் தேதி காலை 10 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.