திமுக தேர்தல் அறிக்கையில் 50 முக்கிய வாக்குறுதிகள்!
மக்களவைத் தேர்தலையொட்டி, திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை சென்னை அறிவாலயத்தில் வெளியிட்டார். திமுகவின் முக்கிய வாக்குறுதிகள் வருமாறு:
- மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெற்றிடும் வண்ணம், அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை திமுக மத்தியில் அமையும் புதிய ஆட்சியைத் தொடர்ந்து வலியுறுத்தும்.
- ஆளுநர்களை நியமனம் செய்யும்போது மாநில முதல்வரின் ஆலோசனையுடன் நியமித்திட புதிய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
- இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 361-ஐ நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆளுநரும் சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டவர் என்ற நிலை உருவாக்கப்படும்.
- மாநில அரசுகளை கலைத்திட வழிவகுக்கும் அரசமைப்புச் சட்டப்பிரிவு 365-ஐ அகற்றிட திமுக தொடர்ந்து வலியுறுத்தும்.
- உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வலியுறுத்தப்படும்.
- புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து பெற்றுத்தந்திட திமுக முயற்சிகள் அனைத்தையும் மேற்கொள்ளும்.
மத்திய அரசுப் பணிகளுக்கும், மத்தியப் பணியாளர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நடைபெறும் பணியாளர் தேர்வுகளுக்கு தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளின் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளை நடத்துவதற்கு புதிய அரசு ஆவன செய்யும்.
- தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்தும் தமிழில் செயல்பட வேண்டும். இதற்காக அரசமைப்புச் சட்டம் 343-ல் உரிய திருத்தம் கொண்டு வர புதிய அரசு நடவடிக்கை எடுக்கும்.
- இண்டியா கூட்டணி ஆட்சி அமையும்போது அனைத்து மாநில மொழிகளின் வளர்ச்சிக்கும் சம அளவு நிதி ஒதுக்கப்படும்.
- தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக ஏற்று மத்தியில் அமையும் புதிய அரசு ஆணை பிறப்பிக்கும்.
- உலகப் பொது மறையான திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்பட புதிய அரசு ஆவன செய்யும்.
35 ஆண்டுகளுக்கு மேலாக முகாம்களில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு புதிய அரசு ஆவன செய்யும். இலங்கை திரும்பிச் செல்ல விரும்புவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளும் செய்யப்படும்.
- சேது சமுத்திரத் திட்டம் முழுமையாக நிறைவேறவும், தென் தமிழகம் பொருளாதார வளர்ச்சி பெறவும், இந்திய நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்தியில் அமையும் புதிய அரசு ஆவன செய்யும்.
- உச்ச நீதிமன்றம், சிஏஜி உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்கள் எவ்வித அரசியல் தலையீடு இன்றி, தன்னிச்சையாக செயல்படுவது உறுதி செய்யப்படும்.
- புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதுடன் அதனை ரத்து செய்திட ஆவன செய்யும்.
- சிறப்பாக செயல்படவும், நிர்வாக வசதிக்காகவும் ரயில்வே நிர்வாகம் படிப்படியாக மாநிலங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
- நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிர் இடஒதுக்கீடு 33 சதவீத இடஒதுக்கீடு உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும்.
இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளில், வங்கிகளில் பெற்றிருக்கும் கடனும் வட்டியும் மத்திய அரசால் தள்ளுபடி செய்யப்படும்.
- மாணவர்களின் கல்விக்கடன் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும்.
- அனைத்து மாநில மகளிருக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும்.
- தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
- தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.
- பல்கலைக்கழகங்களில் ஆளுநர்களால் நியமிக்கப்படும் துணைவேந்தர்கள் நியமனத்தை, இனி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசே மேற்கொள்ளும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்.
- குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA-2019) ரத்து செய்யப்படும்.
- கல்லூரி மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் ஒரு ஜிபி அளவில் கட்டணமற்ற இலவச சிம் கார்டு வழங்கப்படும்.
மாநிலங்களில் உள்ள மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் அந்தந்த மாநிலத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்படும்.
- வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்.
- மாநிலம் முழுவதும் அனைத்து இடங்களிலும் இலவச வைஃபை சேவை வழங்கப்படும்.
- ஏழை எளிய நடுத்தர மக்களும் விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்த உதவும் வண்ணம் விமானக் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
- இந்தியாவில் ராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell) மொழி ஆராய்ச்சி மையம் உருவாக்கப்படும்.
- கச்சத்தீவை மீட்க வழிவகை செய்யப்படும்.
பணி ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் மத்திய அரசில் பணியாற்றிய செயலாளர்கள் உள்ளிட்டோர் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகளில் இணைய 2 ஆண்டுகள் காத்திருப்புக் காலமாக அறிவித்து புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்.