”பருவநிலை மாற்றங்களை சமாளிக்க உரிய நடவடிக்கை எடுத்திடுக”: திமுக பொதுக்குழுவில் தீர்மானம்!

திமுக பொதுக்குழு கூட்டம், இன்று காலை 10 மணியளவில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் உள்ள அரங்கத்தில் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் த்லைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, ஐ.பெரியசாமி, கனிமொழி உள்ளிட்ட உயர்மட்ட நிர்வாகிகள், மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், 3,000க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் சில முக்கியத் தீர்மானங்கள் வருமாறு:-

பருவநிலை மாற்றங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுத்திடுக!

டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டு மக்கள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகியிருப்பதைத் தொடர்ந்து, சென்னை மாநகரமும் காற்று மாசு தாக்கத்திற்கும், பாதிப்பிற்கும் உள்ளாகும் அபாயம் இருக்கிறது என்பதையும், கடல் மட்டம் தொடர்ந்து உயர்வதால் 2050ஆம் வருடத்தில் சென்னை மாநகரம் பாதிக்கப்படக்கூடும் என்று வெளிவரும் ஆய்வுச் செய்திகளையும் இந்த பொதுக்குழு மிகுந்த கவலையுடன் பதிவு செய்கிறது.

பருவநிலை மாற்றங்களை சமாளிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஆக்கபூர்வமாக எடுத்திடவும், மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், சென்னையை காற்று மாசு பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய – மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்றும் இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

மத்திய பா.ஜ.க. அரசின் தமிழக விரோதத் திட்டங்களுக்குத் துணை போவதற்குக் கண்டனம்!

  • “மரக்காணம் முதல் இராமநாதபுரம் வரை ஹைட்ரோ கார்பன்”
  • “காவிரி டெல்டா மாவட்டங்களை வளைத்து பெட்ரோலிய மண்டலம்”
  • “கதிராமங்கலம் ஆயில் குழாய் பதித்தல்”,
  • “தேனியில் நியூட்ரினோ”
  • “மேற்கு மாவட்டங்களில் விளைநிலங்கள் வழி மின்கோபுரங்கள் அமைத்தல்”,
  • “சேலம் – சென்னை எட்டு வழிச் சாலை”,
  • “திருச்சி பாரத மிகுமின் நிறுவனம், சேலம் இரும்பாலை, நெய்வேலி பழுப்பு நிலக்கரித் தொழிற்சாலை ஆகியவற்றைத் தனியார் மயப்படுத்துதல்”,
  • “உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யாதிருத்தல்”
  • “இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை வேடிக்கை பார்ப்பது”,
  • “இந்திய மீனவர்கள் மீது கடும் அபராதம் விதிக்கும் சட்டத்தை உருவாக்கிய இலங்கை அரசைத் தட்டிக் கேட்டுத் தடுத்து நிறுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காதது”,
  • “மீன் வளத்தை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்த்திட முயற்சி செய்யும் மத்திய அரசை எதிர்த்துக் கேட்காதது”,
  • “அனைத்து வகையிலும் பாதிக்கப்பட்டுள்ள நெசவாளர்களின் பிரச்சனைகளை தீர்க்க முன்வராதது”,
  • “ரயில்வே திட்டங்களில் தமிழகத்தைப் புறக்கணிப்பது”
  • “அறிவிக்கப்பட்ட மதுரை “எய்ம்ஸ்” மருத்துமனையை நிதிஒதுக்கீடின்றி முடக்கி வைத்திருப்பது”
  • “தமிழகத்தில் உள்ள முக்கிய மத்திய அரசு அலுவலகங்களின் தலைமை அலுவலகத்தை வேறு மாநிலங்களுக்கு மாற்றுவது”
  • “இராணுவத் தொழிற்சாலை உள்ளிட்ட முக்கிய தொழிற்சாலைகளின் உற்பத்தித் திறனை குறைப்பது”
  • “காவிரி, பாலாறு உள்ளிட்ட அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சினைகளில் தமிழகத்தை வஞ்சிப்பது”
  • “செம்மொழியாம் தமிழ் மொழிக்கு உள்ள அந்தஸ்தை மத்தியில் அளிக்க மறுப்பது” மற்றும் “சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை முடக்கி வைத்திருப்பது”,
  • “பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், ரயில்வே நிலையங்கள், வங்கிகள், சென்னையில் உள்ள மத்திய அரசின் துறைகள், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் உள்ளிட்ட அனைத்திலும் இந்தி மொழி திணிக்கப்படுவதை வேடிக்கை பார்ப்பது”
  • “தமிழ்நாட்டில் போக்குவரத்துத் துறையின் அபராத ரசீதில் கூட தமிழைப் புறக்கணிப்பது”
  • “அனைத்துத் தேர்வுகளையும் இந்தி மொழியில் மட்டும் எழுத அனுமதிப்பது”
  • “இந்தியில் மத்திய அரசின் விளம்பரங்கள்”
  • “மத்திய அரசு திட்டங்களுக்கு இந்தியில் மட்டுமே பெயர் சூட்டுவது”
  • “அலுவலகங்களில் நூற்றுக்கு நூறு சதவீதம் இந்தி மொழியில் அலுவல்களைப் பார்ப்பது”
  • “சென்னை மெட்ரோ ரயில்களிலும் இந்தி”
  • “தென்னக ரயில்வே ஊழியர்களிடையே இந்தியில் பேச வேண்டும்”
  • “இந்தியில் மட்டுமே தபால் துறைத் தேர்வு”
  • “பள்ளித் தலைமையாசிரியர்களின் தலைமைப் பண்புப் பயிற்சிக்கு தமிழ் புறக்கணிப்பு”

என மத்தியில் உள்ள பா.ஜ.க அரசின் பல்வேறு தமிழ் விரோத – தமிழர் விரோத சூழ்ச்சித் திட்டங்களுக்கு இங்குள்ள அதிமுக அரசு முணுமுணுப்பேதுன்றித் துணை போவதுடன், மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியின் மதவாத, தமிழக விரோத கொள்கைகளுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையிலும், ஊழல்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கிலும் அதிமுக ஆட்சி நடத்துவதற்கும்; தமிழை, தமிழர்களை, தமிழக நலன்களைப் புறக்கணிக்கும் பா.ஜ.க. அரசுக்கும்; தி.மு.கழகத்தின் இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்க!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய பின்னரும், தமிழக ஆளுநர், அவர்களை விடுவிப்பதில் ஏன் காலதாமதம் செய்கிறார் என்பது யாருக்கும் புரியாத புதிராக உள்ளது. “அந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தமிழக ஆளுநர் அவர்கள், முதலமைச்சரிடம் கூறிவிட்டதாக வெளிவந்த செய்தியையும் முதலமைச்சர் மறுக்கவில்லை.

ஆகவே அ.தி.மு.க அரசு உடனடியாக 7 பேர் விடுதலையை வலியுறுத்த வேண்டும் என்றும், அமைச்சரவை முடிவின்படி தமிழக ஆளுநர் அவர்கள், 7 பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டுமெனவும் இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

அழிவு சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கிடுக!

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற உயரிய கோட்பாட்டினை உலகிற்குச் சொன்ன அய்யன் திருவள்ளுவருக்கு, “காவி” வண்ணம் பூசி கொச்சைப்படுத்திய பா.ஜ.க.வினருக்கும், தஞ்சை – பிள்ளையார்பட்டியில் அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு அவதூறு ஏற்படுத்தியவர்களுக்கும் – அதன் பின்னணியில் உள்ள மதவாத சக்திகளுக்கும் இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும், அதிமுக அரசு தனது மவுனத்தைக் கலைத்து; அய்யன் திருவள்ளுவரைச் சிறுமைப்படுத்துவது, தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஏற்படுத்தப்படும் மாறாத அவமானம் என்பதை உணர வேண்டும் என்றும்; இந்த மாதிரி விபரீத விளையாட்டுகளை நடத்தி – தமிழகத்தில் நிலவும் மத நல்லிணக்கம் மற்றும் சகோதர மனப்பான்மையைச் சீரழிக்கவும், கவனத்தைத் திசைதிருப்பவும் நினைக்கும் அழிவு சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து – அவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க. அரசை இந்தப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

மத்திய அரசு நிறுவனங்களில் 90 சதவீதம் தமிழக இளைஞர்களை நியமித்திடுக!

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு 80 லட்சம் தமிழக இளைஞர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்து சோர்வடைந்திருக்கின்ற நிலையில், மாநிலத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும், அதன் பொதுத்துறை நிறுவனங்களிலும் வடமாநிலத்தவருக்கு அத்தனை வேலைவாய்ப்புகளையும் வாரி வழங்கிவரும் பச்சை துரோகத்திற்கு இந்த பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும், இதர மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலும் 90 சதவீதத்திற்குக் குறையாமல் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் என்றும், மத்திய அரசுப் பணிகளுக்கு நடத்தப்படும் எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வுகள் தமிழில் நடத்தப்பட வேண்டும் என்றும், மத்திய பா.ஜ.க. அரசை இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

கீழடி அகழாய்வுப் பணியினை தொய்வின்றி மத்திய – மாநில அரசுகள் துரிதப்படுத்த வேண்டும்!

சிவகங்கை மாவட்டம், வைகை ஆற்றுப் படுகையின் தென்பகுதியில் அமைந்துள்ள கீழடி கிராமப் பகுதியில், இதுவரையில் நடத்தப்பட்ட தொல்லியியல் அகழ்வாய்வுகளில், ஆயிரக்கணக்கான சான்றுப் பொருள்கள் கிடைத்துள்ளன. இந்தப் பகுதி “தொன்மையான நகர நாகரீகத்தின் அடையாளங்களுடன் உள்ளது” என ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இந்தப் பொருட்களை கார்பன் பரிசோதனைக்கு அனுப்பி ஆய்வு செய்தபோது, 2600 ஆண்டுகளுக்கு முந்தைய தடயங்களும், சான்று பொருட்களும் கிடைத்துள்ளதாக தொல்லியியல் ஆய்வறிஞர்கள் தெரிவித்துள்ளார்கள். இதனுடைய தொன்மை கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்கு முந்தையதாக இருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.

வெளிநாடுகளோடு இங்கு வணிகத் தொடர்பு இருந்தமைக்கான தரவுகளும், சான்றுப் பொருட்களும் கிடைத்துள்ளன. இந்தப் பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு அங்கேயே அருங்காட்சியகம் அமைக்கப்படுமென்று தற்போது தமிழக அரசு அறிவித்த போதிலும், அந்தப் பணிகளைத் தீவிரப்படுத்தி, 6-வது கட்டப் பணிகளும் உடனே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதோடு, அருகிலே உள்ள கிராமங்களான கொந்தகை, மாரநாடு, அகரம் ஆகிய பகுதிகளிலும் அகழ்வாய்வு நடத்தப்பட வேண்டுமென்கிற தொல்லியல் ஆய்வாளர்களின் கருத்தின் அடிப்படையில், அங்கும் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தல்!

புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு என்பது, இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கின்ற முயற்சியாகவும், ஆழப் புதைக்கப்பட்டுவிட்ட குலக்கல்வித் திட்டத்தைத் தோண்டியெடுத்து மீண்டும் புத்துயிர் கொடுக்கின்ற வகையிலும், அறிக்கையின் ஷரத்துக்கள் அமைந்திருக்கின்ற காரணத்தால், அந்த அறிக்கை விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டுமென கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், 10 பேர் கொண்ட ஒரு குழுவினை அமைத்தார். அந்தக் குழுவின் அறிக்கை, கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களிடம் 26.7.2019ல் அளிக்கப்பட்டது. தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அந்த அறிக்கையினை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரிடம் கழக நாடாளுமன்றக் குழு துணைத் தலைவர் கனிமொழி, எம்.பி., அவர்கள் தலைமையில் நாடாளுமன்ற மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வழங்கியிருக்கின்றனர்.

மேலும் புதிய தேசிய கல்விக் கொள்கை பிற்போக்குத்தனமானது; அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் சமத்துவத்திற்கும் எதிரானது; இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான கருத்துகளை இவ்வறிக்கை பரிந்துரைக்கவில்லை; மாநில அரசிடம் உள்ள கல்வி தொடர்பான அதிகாரங்களை முழுமையாக ஆக்கிரமித்து மத்திய அரசிற்கு மடை மாற்ற முயற்சிக்கிறது; கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு இதனால் எந்தவிதமான பயனும் ஏற்படப் போவதில்லை. எனவே இந்த தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரையிலும் மத்திய அரசு அறிவித்த தேசிய கல்விக் கொள்கையில் எந்தவிதமான மறுபரிசீலனையும் மாற்றங்களும் செய்ததாகத் தெரியவில்லை. திராவிட முன்னேற்றக் கழகம், இந்த வரைவு அறிக்கையை ஏற்றுக் கொள்ளாது என்று பிரகடனம் செய்வதோடு; பொதுப்பட்டியலில் உள்ள கல்விக்கான அதிகாரத்தை மாநிலப் பட்டியலுக்கு உடனடியாக மாற்றிட வேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

இவை உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.