ஆளுநர் ஆர்.என்.ரவியின் சுதந்திர தின தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுகவின் கூட்டணி கட்சிகள் அறிவிப்பு!

சுதந்திர தினத்தையொட்டி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை (ஆகஸ்டு 15ஆம் தேதி) வழங்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக ஆளும் திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன.

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்துக்கும் அதன் மக்களுக்கும் எதிராக செயல்பட்டு வருவதைக் கண்டிக்கும் விதமாக, சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் அவர் வழங்கும் தேநீர் விருந்தை திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன.

கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்கப் போவதில்லை என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அறிவித்தன. ஆனால், மழையால் ஆளுநர் மாளிகையே தேநீர் விருந்தை தள்ளிவைத்தது. கடந்த குடியரசு தின விருந்தையும் திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன.

இந்நிலையில், சுதந்திர தினத்தையொட்டி, நாளை மாலை தேநீர் விருந்துக்கு ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். இதை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன. அக்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளதாவது:

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை:

திமுக அரசின் செயல்பாடுகளை முடக்கி, வளர்ச்சியை பாதித்து, பாஜகவின் ஊதுகுழலாக செயல்படும் ஆளுநரின் பதவிக்காலம் ஜூலை 31-ல் முடிந்தது. அவரை மீண்டும் ஆளுநராக நியமிக்க கூடாது என்பதுதான் மக்களின் கோரிக்கை. இந்த எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் விருந்தை புறக்கணிக்கிறோம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:

கூட்டாட்சி, அரசியலமைப்பை மதிக்காத ஆணவப் போக்கு கொண்ட ரவி ஆளுநர் பதவியில் நீடிப்பதே இழுக்கு. அவருடன் தேநீர் விருந்து என்ற பேச்சுக்கே இடமில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்:

மாநில அரசுக்கு எதிராக போட்டி அரசு நடத்தி வரும் ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்.

விசிக தலைவர் திருமாவளவன்:

விசிகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தமைக்கு எமது நன்றி. எனினும், ஆளுநரின் தொடர் தமிழக விரோத நடவடிக்கை காரணமாக இந்த நிகழ்வை விசிக புறக்கணிக்கிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மதிமுகவும் தெரிவித்துள்ளது. ஆனால் திமுக புறக்கணிக்குமா அல்லது பங்கேற்குமா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.