கஸ்தூரி பாட்டியும், 2 களவாணிகளும்…!
இன்றைய பரபரப்பு – கஸ்தூரி பாட்டிதான். இவர்தான் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளின் தேர்தல் பிரச்சார விளம்பரங்களிலும் நடித்துள்ள துணை நடிகை.
“பெத்த புள்ள சோறு போடல. எனக்கு சோறு போட்ட தெய்வம் புரட்சித் தலைவி அம்மா தான்” என்று சொன்னபடி அதிமுக விளம்பரத்தில் தோன்றும் இந்த பாட்டி, அடுத்த சில நிமிடங்களில், “வானத்துல பறக்குறவங்களுக்கு நம்மளுடைய பிரச்னை எப்படி தெரியும்? மக்களைப் பற்றியே கவலைப்படாத ஆட்சி இனி எதுக்குங்க? போதும்மா போதும்…” என்று திமுக விளம்பரத்திலும் தோன்றுகிறார்.
குறும்படத்தில் நடிப்பதாக நினைத்துக்கொண்டு, வெறும் ஆயிரம் ரூபாய்க்காக திமுக விளம்பரத்திலும், ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்காக அதிமுக விளம்பரத்திலும் நடித்த பாட்டி, நடந்துவிட்ட குளறுபடிகளாலும், இதனால் ஏற்பட்டுள்ள களேபரங்களாலும் ஏகத்துக்கும் பயந்து போயிருக்கிறார். இந்த விளம்பரங்களால் தனக்குப் பிரச்சனை வருமோ என்ற அச்சத்துடன் இருக்கிறார்.
இது தொடர்பான சில பதிவுகள்:
# # #
பாலா ஜி: உண்மையில் கஸ்தூரி பாட்டிக்கு நாம் நன்றிதான் சொல்ல வேண்டும்..
திமுகவும் அதிமுகவும் ஒரே கொள்ளைக்கார கும்பல் என்பதை தன் நடிப்பு மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.
மற்றபடி திமுக அதிமுக விளம்பரங்களில் கஸ்தூரி பாட்டி நடித்தது குறித்து இங்கு பொங்குவதற்கோ, கிண்டல் செய்வதற்கோ எதுவுமில்லை.
அதேசமயம் இந்த விளம்பரத்தில் பேசப்படாத ஒரு சுரண்டல் இருப்பதை குறிப்பிட விரும்புகிறேன். ஒரு விளம்பர படத்திற்கு செலவிடப்படும் தொகையை கேட்டால் அதிர்ந்து போவீர்கள். அண்ணாச்சி நடித்த விளம்பர படத்தை சில நாட்களுக்கு முன் ஓட்டிக்கொண்டிருந்தார்களே… அந்த விளம்பரத்தில் பிரபல நடிகர் நடிக்க கேட்ட தொகை பலகோடி. அது எதுக்கு என்றுதான் அண்ணாச்சியே களத்தில் இறங்கி பரபரப்பை கிளப்பினார்.
இப்படி சினிமாவுக்கு சமமாக விளம்பர படங்கள் எடுக்க எக்கச்சக்க பணம் செலவிடப்படுகிறது. இதில் ஏஜென்ஸிகள்தான் கொள்ளை லாபம் பார்க்கின்றன. அரசியல் கட்சி விளம்பரங்கள் என்றால் இன்னும் அதிகம். இப்போதெல்லாம் இதுபோன்ற மார்க்கெட்டிங் ஏஜென்ஸிகளுக்கு தேர்தல் என்றாலே கொண்டாட்டம்தான்.
ஸ்டாலின் மார்க்கெட்டிங் டீமிற்கு போடப்பட்டிருக்கும் ஒப்பந்தம் பலகோடிகள்.
ஆனால் அவர்கள் இந்த பாட்டி போன்ற ஏழைகளை ஏமாற்றி தங்களது விளம்பரங்களில் நடிக்க வைக்கிறார்கள். இந்த விளம்பர படங்களில் கஸ்தூரி பாட்டியை நடிக்க வைத்ததற்கு திமுக ஏஜென்ஸி 1000 ரூபாயும் அதிமுக ஏஜென்ஸி 1500 ரூபாயும் கொடுத்திருக்கிறது.
ஆக, வெறும் 2500 ரூபாய்க்கு திமுக அதிமுக களவாணிகள் கஸ்தூரி பாட்டியை சிக்கலில் மாட்டிவிட்டிருக்கிறார்கள்.
# # #
சுரேஷ் கண்ணன்: அரசியல் கொள்கையோ, நிலைப்பாடோ, விசுவாசமோ இல்லாமல் இரண்டு கட்சியின் விளம்பரங்களிலும் ஒரு பச்சோந்தி போல கூசாமல் நடித்த அந்தப் பாட்டியின் அரசியல் கூலித்தனத்தை வன்மையாக கண்டிக்கிறேன்!!!
(இன்றைய அறச்சீற்ற கோட்டா இப்படியாக முடிந்தது. நாளைக்கு வேறு ஏதாவது கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்,
என்னது, ஒவ்வொரு தேர்தலிலும் பல கோடிகள் தந்தும் வாங்கியும் கூட்டணிகளை உருவாக்குகிற அரசியல் கட்சிகளைக் கண்டிக்க வேண்டுமா? அதெல்லாம் ராஜதந்திரம் சார்…! இந்தப் பாட்டி எப்படி அப்படி செய்யலாம்…? அநியாயம் இல்ல…?!?)
# # #
இரா.கிஷோர்குமார்: லட்சக் கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு அனைத்து கட்சியின் விளம்பரத்தையும் ஒரே தொலைக்காட்சியில் போடுகிறான். அது குறையாக தெரியாத நம் கண்களுக்கு, தன் அன்றாட வாழ்க்கை நடத்த 1000 ரூபாய்க்கு இரண்டு கட்சியின் விளம்பரத்தில் நடித்த அந்த கிழவியின் செயல் தவறாக தெரிகிறது. அதை கொஞ்சம்கூட கூச்சமின்றி விமர்சனமும் செய்கிறோம். நம்மை போன்ற ஒரு இழிவான பிறவிகளை எங்குமே பார்க்க முடியாது.
# # #
சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்டுகளின் நிலைமை எல்லாம் நம் கற்பனைக்கு எட்டாதவை. பரதேசி படத்தில் வரும் தேயிலை தோட்ட தொழிலாளர்களைவிட பலவகை கொடூரங்கள் அரங்கேறும். பெண்கள் என்றால் சுத்தம். பாலியல் சுரண்டல் அருவருப்பாகவும் அதிகமாகவும் நடக்கும்.
ஆர்டிஸ்ட் மேனேஜர்கள் கண்காணிகளை போல். புரொடக்ஷன் மேனேஜர்களிடம் இவர்கள் பெறும் பணம் அப்படியே ஆர்ட்டிஸ்டுகளை சென்றடையாது. அவர்களுக்கான கமிஷனும் உள்கமிஷனும் கழித்துதான் ஆர்டிஸ்டுகளுக்கான சம்பளம் கொடுக்கப்படும். வயதான ஆர்டிஸ்டுகளுக்கு பணம் மட்டுமல்ல, மரியாதையும் குறைவாகத்தான் கிட்டும். ஏனெனில், அவர்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் குறைவானவைதான்.
இப்படியான சூழலில், அந்த வயதான பாட்டியம்மா இரண்டு கட்சி விளம்பரங்களிலும் நடிப்பது ஒன்றும் தமிழக அரசியல் சூழலை கேள்விக்குறியாக்கி விடவில்லை.
சக நடிப்பு தொழிலாளிகளின் இந்த கதியை கவனிக்காமல் தங்கள் வரவை பெருக்கும் உச்ச நடிகர்களை, இயக்குனர்களை, தயாரிப்பாளர்களை கேட்க வக்கில்லை. வசனம் எழுதியும், நடித்தும் ஆட்சியை பிடித்தவர்கள் பொருட்படுத்தாத இந்த உதிரி பாட்டாளிகளின் வாழ்க்கைக்கு அவர்களிடம் நியாயம் கேட்க நாதியில்லை. அந்த பாட்டியம்மா பக்கம் ‘லைட்’டை திருப்பிவிட்டு, அவருக்கு கிடைக்கும் கொஞ்சநஞ்ச வாய்ப்புகளையும் இல்லாமல் ஆக்கப் போகிறோம்.
விமர்சனம் செய்யலாம். சட்டையர் செய்யலாம். கூடவே ஒரு சிட்டிகையேனும் பொறுப்புணர்வை எடுத்துக் கொள்வோமே!