“கவர்ச்சி ஆடை” சர்ச்சை ஸ்டண்டுக்கு நல்ல ரெஸ்பான்ஸ்: முற்றுப்புள்ளி வைத்தார் சுராஜ்!
சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கத்தி சண்டை’. கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. மேலும், வசூலிலும் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
“இந்த படத்தில் தமன்னா படுகிளாமராக உடை அணிந்து வருகிறார்” என்ற தகவலை ஒரு சர்ச்சையாக கிளப்பிவிட்டு அதன்மூலம் ‘கத்தி சண்டை’ படத்துக்கு விளம்பரம் தேட விரும்பிய இயக்குனர் சுராஜ், இதற்காகவே கோடம்பாக்கம் பார்களில் சுற்றித் திரியும் ‘ட்விட்டர் குருவிகள்’ இருவரை அழைத்து, அவர்களுக்கு பேட்டி கொடுத்தார்.
அந்த பேட்டியில், “நாயகி முழுமையாக உடையணிந்து நடிப்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு கிடையாது. பணம் கொடுத்து திரையரங்கில் படம் பார்க்கும்போது, தமன்னாவை கிளாமராக பார்க்கத் தான் விரும்புவார்கள். நடிக்க வேண்டும் என்றால் அதுக்கு தனியாக தான் படம் பண்ண வேண்டும். கிளாமராக செய்பவர்கள் தான் இன்று பெரிய நாயகியாக இருக்கிறார்கள். ரசிகர்கள் படம் பார்க்கும்போது சந்தோஷமடைய வேண்டும். ஆடை வடிவமைப்பாளர், நாயகியின் முழங்கால் முட்டி வரை மூடும் உடை எடுத்து வருவார். ‘இதெல்லாம் கட் பண்ணுடா. ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாங்க. நடிக்க சொல்லுடா’ என்று சொல்வேன்” என்று தெரிவித்தார் இயக்குநர் சுராஜ்.
அவர் ஆசைப்பட்ட மாதிரியே அவரது இந்த பேட்டி பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. சுராஜ் கருத்துகளுக்கு ஆட்சேபம் தெரிவித்திருக்கும் நடிகை தமன்னா, “என்னிடம் மட்டுமல்ல, திரைத்துறையில் பணியாற்றும் அனைத்துப் பெண்களிடமும் சுராஜ் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த “கவர்ச்சி உடை” சர்ச்சையை மேலும் பரபரப்பாக்கி, ‘கத்தி சண்டை’ படத்துக்கு இன்னும் கூடுதல் விளம்பரம் கிடைக்கச் செய்ய ‘ட்விட்டர் பெண் குருவி’ ஒன்று அமர்த்தப்பட்டது. அது தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி, நடிகை நயன்தாராவின் கவனத்துக்கு சுராஜின் கேவலமான பேட்டியை கொண்டு சென்று, அவருடைய கருத்தை கேட்டது.
சுராஜ் கருத்துக்களை ஆட்சேபித்து நயன்தாரா கூறுகையில், “பணம் கொடுக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நடிகைகள் ஆடைகளைக் களைந்துவிடுவதாக அவர் நினைக்கிறாரா? நடிகைகளை ஆடை களைபவர்கள் என்பதாக மட்டுமே அவர் பார்க்கிறாரா? அவர் தன் குடும்பத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களைப் பற்றி இவ்வாறு தைரியமாக கூறிவிட முடியுமா, என்ன?” என்று காட்டமாக தெரிவித்தார்.
தனது “கவர்ச்சி ஆடை” சர்ச்சை ஸ்டண்டுக்கு நல்ல ரெஸ்பான்சும், போதுமான அளவு பப்ப்ளிசிட்டியும் கிடைத்திருப்பதால் ம்கிழ்ச்சி அடைந்திருக்கும் இயக்குனர் சுராஜ், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “தமன்னா உட்பட திரையுலகின் அனைத்து கதாநாயகிகளிடமும் மன்னிப்புக் கேட்டு கொள்கிறேன். யாரையும் தவறான நோக்கில் சித்தரிப்பதும், அவர்களது நம்பிக்கைகளை காயப்படுத்துவதும் எனது நோக்கமல்ல. மீண்டும் ஒரு முறை மன்னிப்புக் கேட்டு கொள்கிறேன். எனது வார்த்தைகளை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
சுனா பானா பஞ்சாயத்தை கலைச்சிட்டாரு…! கிளம்பிப் போய் வேற வேலை இருந்தா பாருங்கப்பா…!