“பிரபாகரன் – சீமான் புகைப்படம் கிராபிக்ஸ்; நான் தான் செய்து கொடுத்தேன்”: இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் வாக்குமூலம்!

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சேர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் மிகவும் பிரபலம்.

ஆனால் அந்த படம் வெளியானபோதே, “இது கிராபிக்ஸ்” என்ற பேச்சு எழுந்தது. அதற்கேற்ற மாதிரி சீமான் நிறைய கதைகள் சொல்ல ஆரம்பித்தார். “பிரபாகரன் எனக்கு ஆமைக்கறி இட்லி சுட்டுக் கொடுத்தார். துப்பாக்கிச் சுட சொல்லித் தந்தார்” என்றெல்லாம் பேச ஆரம்பித்தார் சீமான். இதை அவரது கட்சியைச் சேர்ந்த அப்பாவிகள் நம்பினர். அதே நேரம் வெகு பலர் சீமான் பேச்சை கிண்டலடிக்கவே செய்தனர்.

இன்று வரை, அந்த புகைப்படம் குறித்த சர்ச்சை தொடர்கிறது. இந்த நிலையில் ’வெங்காயம்’, ’பயாஸ்கோப்’ ஆகிய படங்களை இயக்கிய சங்ககிரி ராஜ்குமார் தனது முகநூல் பக்கத்தில், ”இவர், அவரை சந்திக்கவே இல்லை! எதன் அடிப்படையில் சொல்கிறேன் என்றால்… அந்த புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவன் என்கிற அடிப்படையில்…” என்று பதிவிட்டார். இது பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

பிரபாகரனுடன் சீமான் இருப்பது போன்ற புகைப்படத்துடன், சங்ககிரி ராஜ்குமாரின் பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இது குறித்து சங்ககிரி ராஜ்குமார் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

நான் கிராபிக்ஸ் துறையில் மிகவும் நாட்டம் உள்ளவன். ஆரம்பத்தில் தமிழன் தொலைக்காட்சியில் கிராபிக்ஸ் டிசைனராக இருந்தேன். பிறகு 2007 வாக்கில் மக்கள் தொலைக்காட்சியில் பணி புரிந்தேன்.

அப்போது, ஏற்கெனவே தமிழன் தொலைக்காட்சியில் என்னுடன் பணியாற்றிய செங்கோட்டையன் என்பவர் என்னைத் தேடி வந்தார்.
விடுதலைப் புலிகள் இயகத் தலைவர் பிரபாகரனுடன் இயக்குநர் மகேந்திரன் இருக்கும் ஒரிஜினல் படம் உள்ளிட்டவற்றை எடுத்து வந்தார். தனியாக இருக்கும் சீமான் படத்தையும் கொண்டு வந்தார். அவர், ‘தலைவர் பிரபாகரன் அவர்களுடன் சீமான் இருக்கும்படியாக கிராபிக்ஸ் செய்து கொடுங்கள். அந்த படத்தை சீமானுக்கு அன்பளிப்பாக கொடுக்க வேண்டும். அவர் சந்தோசப்படுவார்’ என்றார்.

அதன் அடிப்படையில் நானும், பிரபாகரன், சீமான் இருவரும் ஒன்றாக நிற்பது போல கிராபிக்ஸ் செய்து கொடுத்தேன். ஆனால், அந்த படத்தை வைத்து சீமான் இப்படியெல்லாம் அரசியல் செய்வார் என நான் எதிர்பார்க்கவில்லை” என்று கூறியுள்ளார் சங்ககிரி ராஜ்குமார்.

“இத்தனை நாட்கள் ஏன் மவுனமாக இருந்தீர்கள்?” என்று கேட்ட்தற்கு, “இடையில் செங்கோட்டையனை பார்த்தபோது இது குறித்து கேட்டேன். அவர், ‘ஏதோ அரசியல் செய்கிறார்… விட்டுவிடு’ என்றார். நானும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால், போகப்போக விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பற்றி பொய்க்கதைகளைச் சொல்லி, ஆமைக்கறி சாப்பிட்டேன் என்றெல்லாம் பேச ஆரம்பித்தார் சீமான். இதனால் தலைவர் பிரபாகரனுக்கு இருக்கும் மரியாதையான பிம்பத்தை உடைக்க ஆரம்பித்தார். அப்போதே ‘இந்தப் படம் கிராபிக்ஸ்தான்’ என்கிற உண்மையை சொல்ல நினைத்தேன். ஆனாலும் பொறுத்து இருந்தேன்.

ஈழத்தில் சமூக நீதியைக் காத்தவர் பிரபாகரன். தமிழ்நாட்டில் சமூக நீதியைக் காத்தவர் பெரியார். இன்னும் சொல்லப்போனால் பெரியாரின் கருத்துக்கள்தான் இன்றும் தமிழ்நாட்டில் சமூக நீதிக்கான கோட்பாடாக இருக்கிறது.

பாஜகவிடம் பணம் வாங்கிக்கொண்டு, அந்த பெரியாரை இழிவுபடுத்துகிறார் சீமான். இனியும் பொறுக்கக் கூடாது என்பதால் உண்மையைச் சொல்லிவிட்டேன்” என்றார் சங்க்கிரி ராஜ்குமார்.

“சீமானின் அப்பாவி ரசிகர்கள் உங்களை ’வந்தேறி’ என்று வசை பாடுவார்களே…” என்று கேட்டதற்கு, அவர் சிரித்துக்கொண்டே, “வந்தேறியாகவே இருந்துட்டுப் போறேன்.. சொல்கிற கருத்து என்ன என்பதுதானே முக்கியம்! கியூபாவில் சேகுவாரா ’வந்தேறி’தான்.. ஆனால் அவர்தானே புரட்சிக்கு முக்கிய காரணமாக இருந்தார்” என்றார்.