விஜய் சேதுபதி படத்துக்கு ‘ஆண்டவன் கட்டளை’ தலைப்பு ஏன்?: இயக்குனர் விளக்கம்!

சிவாஜி கணேசன் நடித்த மிக பிரபலமான வெற்றிப்படம் ‘ஆண்டவன் கட்டளை’. பி.எஸ்.வீரப்பாவின் பி.எஸ்.வி. பிக்சர்ஸ் தயாரிப்பில், கே.சங்கர் இயக்கத்தில், 1964ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி வெளியான இப்படத்தில், சிவாஜி கணேசனுடன் தேவிகா, ஏ.வி.எம்.ராஜன், புஷ்பலதா, சந்திரபாபு, கே.பாலாஜி, எஸ்.ஏ.அசோகன் உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைத்த இந்த படத்தின் அனைத்துப் பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார். டி.எம்.சௌந்தரராஜன் பாடிய “ஆறு மனமே ஆறு”, பி.சுசீலா பாடிய “அழகே வா”, டி.எம்.சௌந்தர்ராஜனும் பி.சுசீலாவும் இணைந்து பாடிய “அமைதியான நதியினிலே ஓடம்”, பி.பி.ஸ்ரீனிவாசும் எல்.ஆர்.ஈஸ்வரியும் இணைந்து பாடிய “கண்ணிரண்டும் மின்ன மின்ன”, சந்திரபாபு பாடிய “சிரிப்பு வருது சிரிப்பு வருது” ஆகிய பாடல்கள் அனைத்துமே தமிழகத்தின் மூலைமுடுக்கெங்கும் பிரசித்தம்.

கிராமபோன் ரெக்கார்டுகள் மட்டுமே இருந்த அந்த காலத்தில் மட்டுமல்ல, தொலைக்காட்சிகளும், எஃப்.எம். வானொலிகளும் ஆதிக்கம் செலுத்தும் இந்த காலத்திலும் இப்பாடல்கள் அவ்வப்போது ஒளி / ஒலி பரப்பாகி, தமிழ் ரசிக நெஞ்சங்களை கிறங்கடித்துக்கொண்டு தான் இருக்கின்றன.

சிவாஜி கணேசனின் ‘ஆண்டவன் கட்டளை’ வெளியாகி 52 ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையில், இந்த (செப்டம்பர்) மாதம் 23ஆம் தேதி இன்னொரு ‘ஆண்டவன் கட்டளை’ வெளியாக இருக்கிறது. ‘காக்கா முட்டை’, ‘குற்றமே தண்டனை’ ஆகிய படங்களை இயக்கிய எம்.மணிகண்டன் இயக்கத்தில், கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் தயாரிப்பில், ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் எம்.எஸ்.ஷரவணன் வெளியிடும் இந்த ‘ஆண்டவன் கட்டளை’யில் விஜய் சேதுபதி, ரித்திகா சிங், பூஜா தேவாரியா, நாசர், சிங்கம் புலி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்துக்கு புதிதாக ஒரு தலைப்பு வைத்திருக்கலாமே? ஏன் ‘ஆண்டவன் கட்டளை’ என்ற பழைய படத்தின் பெயர்?

“ஒரு திரைப்படத்துக்கு தலைப்பு என்பது கொக்கி. பார்வையாளர்களை கொக்கி போட்டு இழுக்கும் விதமாக தலைப்பு இருக்க வேண்டும். இந்த தலைப்பும் அப்படிப்பட்டது தான். மேலும், படத்தின் கதைக்கு இது மிகவும் பொருத்தமான தலைப்பு. படம் பார்த்த பிறகு இதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள். பிரபு சாரை நானே தொடர்புகொண்டு, இந்த டைட்டில் எனக்கு வேண்டும் என்று கேட்டேன். அவர் எந்த கேள்வியும் கேட்காமல், உடனே சம்மதம் தெரிவித்தார். அதன்பிறகு சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் பேசி, முறையாக அனுமதி பெற்று, இந்த தலைப்பை வைத்திருக்கிறோம்” என்கிறார் இயக்குனர் எம்.மணிகண்டன்.

படம் பற்றி அவர் மேலும் கூறுகையில், “என்னுடைய படங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ‘காக்கா முட்டை’ ஒரு ரகம். அதிலிருந்து வேறுபட்டது ‘குற்றமே தண்டனை’. இந்த இரண்டு படங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது ‘ஆண்டவன் கட்டளை’.

“வேலை பார்ப்பதற்காக வெளிநாடு போக விரும்பும் ஓர் இளைஞன், கிராமத்திலிருந்து சென்னை வருகிறான். அவனுக்கு இந்த மாநகரம் என்ன செய்தது? என்ன கற்றுக் கொடுத்தது? அவன் என்ன ஆனான்? என்பது தான் ‘ஆண்டவன் கட்டளை’. இதன் மைய பிரச்சனையாக பாஸ்போர்ட் விவகாரம் இருக்கும்.

“என்னுடைய படங்களில் கேரக்டர்கள் தான் இருக்கும். ஹீரோ, ஹீரோயின், வில்லன் என யாரும் இருக்க மாட்டார்கள். கிராமத்திலிருந்து சென்னை வரும் இளைஞன் கேரக்டரில் விஜய் சேதுபதியும், பத்திரிகையாளர் கேரக்டரில் ரித்திகா சிங்கும் நடித்திருக்கிறார்கள்.

“படத்தில் நல்ல பத்திரிகையாளர்களையும் காட்டியிருக்கிறேன். கெட்ட பத்திரிகையாளர்களையும் காட்டியிருக்கிறேன். கெட்டதையும் சித்தரித்தால் தான் நல்லது அழுத்தம் பெறும் என நான் ந்ம்புகிறேன். இப்படத்தில் வில்லன் உருவமாக இருக்காது; அரூபமாக இருக்கும்.

“தான் இயக்குவதற்காக அருள்செழியன் இந்த கதையை எழுதி வைத்திருந்தார். கதை எனக்கு பிடித்திருந்ததால் அப்போதே இதை எனக்கு தருமாறு கேட்டேன். ஆனால், தர மறுத்த அவர், ‘எனக்கு இயக்கும் வாய்ப்பு கிடைக்காவிட்டால், இதை உங்களுக்கே தருகிறேன்” என்று கூறினார். அதன்படி பின்னர் என்னிடம் கொடுத்துவிட்டார். அவரது கதையை நான் வாங்கி, பல புதிய விஷயங்களை சேர்த்து, திருத்தி அமைத்திருக்கிறேன்.

“படத்தின் பெரும்பகுதி சென்னையிலேயே படமாக்கப்பட்டது. சில காட்சிகள் மட்டும் வேலூரில் எடுக்கப்பட்டது. கே இசையமைத்திருக்கிறார். படத்தில் நான்கு பாடல்கள். அத்தனை பாடல்களும் அனைவருக்கும் பிடிக்கும். மேலும், பின்னணி இசையை ஒரு பாடலுக்கான மெட்டு போல் அமைத்து, ஆங்காங்கே பயன்படுத்தியிருக்கிறோம்.

வழக்கமான கமர்சியல் படங்கள் போல இல்லாமல் வித்தியாசமானதாக, அதேநேரத்தில் ‘சி’ செண்டர் ஆடியன்ஸூம் ரசிக்கும் விதமாக ‘ஆண்டவன் கட்டளை’ இருக்கும்” என்கிறார் இயக்குனர் எம்.மணிகண்டன்.

வி ஆர் வெயிட்டிங்…!