இலங்கை தமிழர்களிடம் “தெனாவெட்டாக” மன்னிப்பு கேட்டார் சேரன்!
‘கன்னா பின்னா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் சேரன் கலந்துகொண்டு பேசுகையில், “திருட்டுத்தனமா படத்தை ஆன்லைனில் வெளியிடுறவங்க இலங்கை தமிழர்கள்ன்னு சொல்றாங்க. இலங்கை தமிழர்களுக்காக நாம திரையுலகமே ஒன்று சேர்ந்து குரல் கொடுத்து போராடி இருக்கோம். எங்களுடைய பல விஷயங்களை இழந்துட்டு போய் அவங்களுக்காக போராடி இருக்கோம். ஆனால் அதை சார்ந்த சிலர் தான் இதை பண்றாங்கன்னு கேள்விப்படுகிறபோது, ஏண்டா இவர்களுக்காக இதை பண்ணினோம் என அருவருப்பாக இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
சேரனின் இந்தப் பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து, கண்டனத்தை பதிவு செய்தார்கள். நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், “அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் இயக்குனர் சேரன் இலங்கை தமிழர் பற்றி பேசியது தேவையற்றது. இலங்கைத் தமிழர்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவதை தவிர்ப்போம். அவர்கள் இப்போதாவது அமைதியில் வாழட்டும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதுபோல், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குனருமான சீமான், “பொதுவெளியில் சேரன் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து, சேரன் தனது முகநூல் பக்கத்தில் மன்னிப்பு கடிதம் ஒன்றை எழுதி பதிவிட்டுள்ளார். அது வருமாறு:
அன்பு இலங்கைத் தமிழ் சகோதரர்கள் அனைவருக்கும் வணக்கம்…
முதலில் இவ்வளவு காலம் என்னை சகோதரனாக ஏற்றமைக்கு (எனக்கு எந்த தகுதியும் இல்லாமல்) நன்றி…
நீங்களும் இன்னும் சில பல சகோதரர்களும் இங்கு விமர்சனம் என்ற பெயரில் என்னைப் புகழ்ந்த எல்லா வார்த்தைகளையும் மனமாற ஏற்றுக்கொள்கிறேன்..
காலம் எனக்கு சில உண்மைகளை என் கண்முன் காட்டியிருக்கிறது…. என்னை புரிந்துகொண்டவர்கள் என் சொந்தங்கள் என்னை தவறாக எடுக்க மாட்டார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து பேசிய எனக்கு, என்னைப் பிடிக்காதவர்கள் சிலர் என் திரைப்படங்களை பிடிக்காதவர்கள் சிலர் ஒரு மேல்பூச்சுக்காக என்னை சகோதரன் என அழைத்திருக்கிறார்கள் என இப்போது உணர்த்தியிருக்கிறது. கடந்த 5 நாட்கள் நான் உள்நோக்கமில்லாமல் சொன்ன வார்த்தைகளுக்கு பதிலாக என்மேல் மானாவாரியாக புழுதிவாரி இரைத்ததில் இருந்து புரிந்துகொண்டேன்…
உங்களின் உண்மையான அன்பை நான் பெற்றிருந்தால் தவறே செய்திருந்தாலும் ஒரு வாய்ப்பை கொடுத்து நான் என்ன பதில் சொல்கிறேன் என கேட்டிருப்பீர்கள்…. அதற்கெல்லாம் அவகாசம் கொடுக்காமல் அடிச்சு நொறுக்கிட்டிங்க…
பரவாயில்லை…
ஆனால் உலகம் முழுதும் பரவிகிடக்கும் மிச்ச சொந்தங்கள் அமைதி காத்தும் ஆறுதல் சொல்லியும் புரிதலான கடிதங்களை அனுப்பியும் என்னை எல்லோரும் தவறாக நினைக்கவில்லை என்ற நம்பிக்கை கொடுத்திருக்கிறார்கள்.. சில அமைப்புகள் “இனிமேல் இலங்கைத் தமிழர்கள் முறைகேடாக DVD வியாபாரம் செய்வதை நிறுத்தவேண்டும்” என செய்தி விடுப்பதாக கூறியிருக்கிறார்கள்..
இப்போது எனக்கு கோபமில்லை.. இதை வைத்து சிலர் குளிர்காய நாமே காரணம் ஆகிவிட்டோம் என்ற வருத்தம்தான்..
என் முதுகிலும் மார்பிலும் என் குழந்தைகள் என் சகோதரர்கள் ஏறி விளையாண்டதாக எடுத்துக்கொள்கிறேன்… அதேநேரம் இதை தூக்கி எறிந்துவிட்டு வேலை செய்யலாம் என்றால் மனசு அப்படி போலியாக செயல்பட மறுக்கிறது… எனவே உங்கள் வருத்தம் களைந்து என் நிம்மதி தேடுவதே சரி எனப்பட்டதால் இதை எழுத நேர்ந்தது…
நீங்கள் அதாவது விமர்சனம் செய்த அனைவரும் வார்த்தைகளை வெளிப்படுத்திய விதமே என்னை கோபம் கொள்ள வைத்தது…. ஏனென்றால் நம் உணர்வுகளை இதுவரை மதிக்காத நடிகரின் படத்திற்கு நம் மக்களில் பலர் திரையரங்கில் பாலாபிஷேகம் செய்கிறார்கள்.. உங்களோடு வளர்ந்த ஒருவனுக்கு (நீங்கள் என்ன கிழிச்சீங்க எங்களுக்காக என கேட்டாலும்) ஒரு வாய்ப்புகூட கொடுக்காமல் ஏதோ எதிரியின் கூடாரத்தில் வளர்ந்தவன் போல வசைமழை பொழிந்துவிட்டீர்கள்…
அதைவிட சகோதரி விபத்மாவின் கட்டுரை அற்புதம்.. “நீ இன்னைக்கு சினிமால இல்லை நான் இருக்கேன்”… பிரமாதம்.. ஒரு படம் பன்னிட்டு இவ்வளவு திமிரா பேசும்போது நீங்கள் அகமகிழ்ந்தது எனக்கு சந்தோசமாக இருந்தது… இப்படி நாம் நம்மை அடுத்தடுத்து காயப்படுத்திக்கொண்டே போனபின் இனி உங்களோடு நான் வரமுடியாது என நினைக்கிறேன்… நீங்களும் இனி என் படங்களை பார்க்க மாட்டேன் என சொல்லிவிட்டீர்கள்… இல்லை இல்லை எனக்குத்தான் மார்க்கெட்டே இல்லைன்னு சொல்லிட்டிங்களே… அந்த கட்டு நமக்கு வேணம்னுதான் நான்…. சரி வேணாம்…
நீங்க நான் கேட்கனும்னு நினச்ச “என்னுடைய வார்த்தைகள் மூலம் உலகெங்கும் வாழும் இலங்கைத் தமிழர்கள் மனம் புண்பட்டிருந்தால் என்னை மன்னிக்கவும்.. அதேபோல என்னை உணர்ந்து அமைதி காக்கும் ஆதரவு அளிக்கும் அனைத்து இலங்கைத் தமிழர்களுக்கும் என் வணக்கத்தை தெரிவிக்கிறேன்..”. என்பதை கடிதமாய் இதை எழுதுகிறேன்..
நான் யாரை தலைவர் என்று சொல்வேனோ அவர் இருந்திருந்தால் அவர் சொல்லியிருப்பார்… சேரன் நம்மளோட ஆளுன்னு…. அவர் இல்லாத இழப்பு தெரிகிறது… எனக்கும் இலங்கைக்கும் என்ன தொடர்புன்னு யாருக்கும் தெரியாது தெரியவும் வேணாம்…
ஒரு வேண்டுகோள்..
தயவுசெய்து இன்னொருமுறை இதுபோல் வேறு ஒருவருக்கு நடக்க வேண்டாம்… ஏற்கனவே கத்தி பட பிரச்னையில் எந்த காரணங்களும் இன்றி உண்மையறியாமல் உடனே அண்ணன் சீமானை திட்டி தீர்த்தீர்கள்.. அவ்வளவு தூரம் உங்களோடு வந்த சீமான் அண்ணனுக்கே அந்த நிலை… இப்போ அவர் உண்மை தெரிந்தது அனைவருக்கும்… இனியும் அதுபோல தொடர வேண்டாம்…
இனி பேச ஒன்றும் இல்லை… உங்கள் அனைவருக்கும் என் கடைசி வணக்கம்…
தவறை சுட்டிக்காட்டாத நண்பன் ஒரு குவளை விஷத்துக்கு சமம்… என அறிஞன் சொல்லியிருக்கிறான்… நான் நமக்குள் இருக்கும் கூட்டத்தால் நமக்கு கிடைக்கும் கெட்டபெயரை தடுக்கவே சொன்னேன்.. “அகதிகள்” என்ற அடையாளமே நம் வலியாக மிஞ்சிவிட்ட நிலையில் மேலும் சில பெயர்கள் வேண்டாம் என்ற எண்ணத்தில் சொன்னது அது என மீண்டும் பதிவிடுகிறேன்…
மீண்டும் உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு உங்களை சமாதானம் செய்து நான் அமைதியாகிறேன்.. நன்றி அனைவருக்கும்…
“எப்பொருள் யார்யார்வாய்க்
கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”
நம் முன்னோர் வள்ளுவனார் சொன்னது..
இவ்வாறு சேரன் கூறியுள்ளார்.
மேற்கண்டவாறு சேரன் ஒரு தினுசாக மன்னிப்பு கேட்டிருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அ.அறிந்தீ எழுதியுள்ள பதிவில், “மன்னிப்பு கடிதத்தில் மன்னிப்பைவிட, தான் கூறியதில் தவறில்லை என்பதே அதிகம் தெரிகின்றது.
தமிழன் இன்னொரு தமிழனிடம்தான் தன் தெனாவெட்ட காட்டுவான். ஆனால் மாற்றானிடம் பல்ல காட்டி மடங்கிர்றது…
#சேரனின் மன்னிப்பு கடிதம்.
வாழ்த்துக்கள். சேரன் அவர்களுக்கு, இதே தெனாவட்டோட தாங்கள் எல்லாத் தளங்களிலும் பயணிக்க வேண்டுமென விரும்புகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.