டிக்கிலோனா – விமர்சனம்
நாயகன் சந்தானம் 2020 ஆம் ஆண்டு தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். ஹாக்கி வீரராக வேண்டும் என்று நினைத்து வந்த சந்தானம், பெரியதாக ஜெயிக்க முடியாததால் ஈ.பி.மேனாக வேலை பார்த்து வருகிறார். மேலும் திருமண வாழ்க்கை நிம்மதி இல்லாமல் இருப்பதால் விரக்தியில் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், 2027ஆம் ஆண்டு சந்தானத்திற்கு மின்சாரம் சரி செய்ய போன இடத்தில் டைம் மிஷின் ஒன்று கிடைக்கிறது. இதன் மூலம் 2020 ஆம் ஆண்டுக்கு சென்று தன்னுடைய திருமணத்தை தடுத்து நிறுத்த முற்படுகிறார். இறுதியில் தனது திருமணத்தை தடுத்து நிறுத்தினாரா? 2027 ஆம் ஆண்டிற்கு திரும்பி வந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதாநாயகன் சந்தானம் படம் முழுக்க தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் நடித்திருக்கிறார். சில இடங்களில் இவருடைய டைமிங் மற்றும் ரைமிங் காமெடி ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. ஆனால், பல இடங்களில் ‘ஐயோ…’ என்று புலம்ப வைக்கிறது. உடல் எடை கிடுகிடுவென குறைந்து மெலிந்து இருப்பதால் எனர்ஜி இல்லாத சந்தானமாக இருக்கிறார்.
கதாநாயகிகளாக நடித்திருக்கும் அனகா, மற்றும் ஸ்ரின் காஞ்வாலா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிந்துவிடுகிறார் யோகிபாபு. ஆனந்த் ராஜ் மற்றும் முனிஸ்காந்த்தின் நடிப்பு, படத்திற்கு பெரிய பலம். இவர்களுடைய காமெடி திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஊக்குவிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து கவர்ந்திருக்கிறார்.
டைம் டிராவலை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் யோகி. இதுபோன்ற கதைகளில் திரைக்கதையை கையாள்வது மிகவும் கடினம். அதை ஓரளவிற்கு சரியாக செய்து இருக்கிறார் இயக்குனர். ஒரு கட்டத்தில் பார்ப்பவர்களை குழப்பத்தில் ஆழ்த்தும் திரைக்கதை, கிளைமாக்ஸில் தெளிவடைகிறது. ஏற்கனவே வெளியான ‘இன்று நேற்று நாளை’, ‘ஓ மை கடவுளே’ போன்ற படங்களின் சாயல்கள் அவ்வப்போது வந்து செல்கிறது.
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக ரீமேக் பாடல் ரசிகர்களை தாளம் போட வைக்கிறது. யுவனின் பின்னணி இசையும், அர்வியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.
மொத்தத்தில் ‘டிக்கிலோனா’ ஜாலியாக விளையாடலாம்.