டெவில் – விமர்சனம்

நடிப்பு: விதார்த், திரிகுன், பூர்ணா, சுபஸ்ரீ, மிஷ்கின் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: ஆதித்யா

ஒளிப்பதிவு: கார்த்திக் முத்துகுமார்

படத்தொகுப்பு: இளையராஜா.எஸ்

இசை: மிஷ்கின்

தயாரிப்பு: மாருதி பிலிம்ஸ் & ஹெச் பிக்சர்ஸ்

தயாரிப்பாளர்கள்: ஆர்.ராதாகிருஷ்ணன் & எஸ்.ஹரி

பத்திரிகை தொடர்பு: சதீஷ் குமார்

படத்தின் தலைப்பு தான் ‘டெவில்’. ஆனால் படத்தில் பேயோ, பிசாசோ வருவதும் இல்லை, அச்சுறுத்துவதும் இல்லை என்பதே இப்படத்தின் தனித்தன்மையான சிறப்பு. எனில், ‘டெவில்’ என்று எதைத் தான் சொல்கிறார்கள்? தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறது அல்லவா? வாருங்கள்… முதலில் கதையைப் பார்ப்போம்…

பிரபல வழக்கறிஞர் அலெக்ஸ் (விதார்த்). அவருடைய அலுவலகத்தில் பணிபுரியும் கவர்ச்சிப்பெண் சோபியா (சுபஸ்ரீ). இருவருக்கும் இடையே ரகசிய செக்ஸ் உறவு இருந்து வருகிறது. இது தெரியாத அலெக்ஸின் பெற்றோர், அவருக்கு குடும்பப் பாங்கான நாயகி ஹேமாவை (பூர்ணா) பெண் பார்த்து, நிச்சயித்து, திருமணம் செய்து வைக்கிறார்கள். இதனால் காண்டாகும் சோபியா, அலெக்ஸின் முதலிரவில், அது நடக்க முடியாத அளவுக்கு அவருக்கு போன் பண்ணி தொந்தரவு செய்து, உடனே தன்னிடம் வருமாறு நச்சரிக்கிறார். வேறு வழியில்லாத அலெக்ஸ், “ஒரு அவசர வேலை” என்று புது மனைவியிடம் பொய் சொல்லிவிட்டுப் போய், சோபியாவுடன் சரச சல்லாபம் செய்கிறார்.

கணவர் தன்னை தொடக்கூட இல்லை என்றபோதிலும், ஒரு பதிவிரதை போல அவர் மீது அன்பைப் பொழிகிறார் ஹேமா. பாசமாக கணவருக்கு பணிவிடைகள் செய்கிறார். ஒருநாள் கணவருக்கு சர்ப்பரைஸ் கொடுப்பதாக நினைத்துக்கொண்டு திடீரென்று அலெக்ஸின் அலுவலகத்தில் போய் நிற்கிறார். அங்கே அலெக்ஸும் சோபியாவும் கட்டியணைத்து முத்தமழை பொழிந்துகொண்டிருப்பதை நேரில் பார்த்து பேரதிர்ச்சி அடைகிறார். கோபாவேசத்துடன் கணவரை நிரந்தரமாகப் பிரிகிறார்.

பதட்டமும் குழப்பமுமாய் தத்தளிக்கும் மனநிலையுடன் ஹேமா காரை ஓட்டிச் செல்கிறார். எதிரே ஜாலியாக ஹேப்பி மனநிலையுடன் பைக்கை ஓட்டிவருகிறார் இளைஞர் ரோஷன் (திரிகுன்). எதிர்பாராத விதமாக ஹேமாவின் கார் ரோஷனின் பைக் மீது மோதிவிட விபத்து. காயங்களுடன் உயிர் பிழைக்கிறார் ரோஷன். குற்ற உணர்வு கொள்ளும் ஹேமா, ரோஷனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்கிறார். அடிபட்ட கையைத் தூக்க முடியாமல் அவதிப்படும் ரோஷனுக்கு, ஒரு கையாக இருந்து, ஒத்தாசைகள் செய்கிறார். தன் மீது பரிவு காட்டும் ஹேமாவில் முதலில் தன் அம்மாவைப் பார்க்கும் ரோஷன், பின்னர் காதல் வயப்படுகிறார். ரோஷனின் காதல் தெரிந்து முதலில் அவரை புறக்கணிக்க முயலும் ஹேமா, அதன்பின் மெல்ல மெல்ல அவர் மேல் ஈர்ப்புக்கொள்ளத் தொடங்குகிறார். இந்த இருவரும் காதலுடன் ஊர் சுற்ற ஆரம்பிக்கும்போது…

ஹேமாவின் முன் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு வந்து நிற்கிறார் அவரது கணவர் அலெக்ஸ். சோபியா வேறொருவருடன் செக்ஸ் உறவு வைத்திருப்பது தெரிந்து, அவரை அலெக்ஸ் கொலை வெறியுடன் கொல்ல நினைத்து, கொல்ல முடியாமல், அவரைப் பிரிந்து, தவறை உணர்ந்து திருந்தி, மனைவியிடம் மன்னிப்புக் கோரி வந்திருக்கிறார்.

ஒரு பக்கம் துரோகம் இழைத்தபின் திருந்தி வந்திருக்கும் கணவர் அலெக்ஸ், மறுபக்கம் தன்னை உள்ளங்கையில் தாங்கி ஆராதிக்கும் புதுக்காதலர் ரோஷன்… இந்த இருவரில் யாரை தனக்கானவராக ஹேமா முடிவு செய்கிறார்? அவரது முடிவு அலெக்ஸுக்கும் ரோஷனுக்கும் இடையே எப்படிப்பட்ட வன்முறை மோதலை ஏற்படுத்துகிறது? அதன் விபரீத விளைவுகள் என்ன? கிளைமாக்ஸ் என்ன?” என்பன போன்ற கேள்விகளுக்கான பதிலை, நிறைய திருப்பங்களும் அமானுஷ்யமும் கலந்து, பார்வையாளர்களை சீட் நுனியில் அமர வைத்து கொடுத்திருக்கிறது ‘டெவில்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

0a1h

கதையின் நாயகி ஹேமா கதாபாத்திரத்தில் வருகிறார் பூர்ணா. சவாலான நல்ல கதாபாத்திரம் கிடைத்தால், அதில் சிறப்பாக நடித்து, பெயரை தட்டிச் சென்றுவிடக் கூடிய அசகாயசூரி என்பதை ஏற்கெனவே பல முறை நிரூபித்துள்ள அவர், இந்த படத்திலும் அந்த பெயரை தக்க வைத்துக் கொண்டுள்ளார். “நான் இயக்குநர் மிஷ்கினின் பள்ளி மாணவி” என்று அவர் தன்னைப் பற்றி பெருமையாக சொல்லிக் கொள்வதற்குப் பொருத்தமாக பரவசம், ஏமாற்றம், காதல், குழப்பம் உள்ளிட்ட சகல உணர்வுகளையும் அழகாக, அமைதியாக பார்வையாளர்களுக்குக் கடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார்.

நாயகிக்கு துரோகம் இழைக்கும் கணவர் அலெக்ஸ் கதாபாத்திரத்தில் வரும் விதார்த், அந்த கதாபாத்திரத்துக்குள் தன்னை கச்சிதமாகப் பொருத்திக்கொண்டு, அக்கதாபாத்திரம் கோரும் சரியான அளவில் நடிப்பை வழங்கியிருக்கிறார்.

நாயகியை இம்ப்ரஸ் பண்ண முயலும் துருதுரு இளைஞர் ரோஷன் கதாபாத்திரத்தில் வரும் திரிகுன், தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாக செய்திருக்கிறார். அதுபோல், காமவலை வீசி நாயகன் அலெக்ஸை கைக்குள் போட்டுக்கொள்ளும் கவர்ச்சிப்பெண் சோபியாவாக வரும் சுபஸ்ரீ, மிகக் குறைந்த ஆடையில் கிளாமர் காட்டி, படுக்கையறைக் காட்சிகளிலும் சூடேற்றி இருக்கிறார்.

ஒரு காட்சியில் பைத்தியக்காரன் போலவும், மற்றொரு காட்சியில் கிறிஸ்துவ பிச்சைக்காரன் போலவும், இன்னொரு காட்சியில் இந்துமத வெட்டியான் போலவும் மூன்றே மூன்று காட்சிகளில் வந்து, இறுதியில், வாழ்க்கையில் நடந்துமுடிந்த துயர சம்பவங்களை ரிவேர்ஸ் செய்து அழித்து, புதிதாய் பாசிட்டிவாக மாற்றியமைக்க உதவும் அமானுஷ்ய நல்ல சக்தியாக வெளிப்பட்டு, கிளைமாக்ஸை தலைகீழாகப் புரட்டிப்போட வழிவகை செய்யும் புதிரான கதாபாத்திரத்தில் இயக்குநர் மிஷ்கின் ஜமாய்த்திருக்கிறார்.

மிஷ்கினின் உடன்பிறந்த தம்பியும், அவரது உதவி இயக்குநரும், ‘சவரக்கத்தி’ படத்தின் இயக்குநருமான ஆதித்யா இயக்கியிருக்கும் இரண்டாவது படம் இது. சிலப்பதிகாரம் சொல்லும் கண்ணகி, கோவலன், மாதவி ஆகியோருக்கிடையிலான முக்கோண உறவை நினைவூட்டும் வகையில் பூர்ணா, விதார்த், சுபஸ்ரீ ஆகியோரின் கதாபாத்திரங்களை நவீன காலத்துக்கேற்ப படைத்து, புதிதாக திரிகுன் கதாபாத்திரத்தை நுழைத்து, அருமையாக திரைக்கதை அமைத்து சுவாரஸ்யமாக படத்தை நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர் ஆதித்யா. ”மனிதர்களின் தீய எண்ணங்களும், தீய செயல்களும் தான் டெவிலே தவிர, தனியாக டெவில் என எதுவும் இல்லை” என்ற அருமையான கருத்தை – சொற்களாக அல்லாமல் – தரமான கலைப் படைப்பு மூலம் சொன்னதற்காக இயக்குநருக்கு நமது பாராட்டுகள்.

இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார் இயக்குநர் மிஷ்கின். அவரது இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் இனிமை. பின்னணி இசையும் பாராட்டும்படி இருக்கிறது. அவர் மிகையாக வயலின்களைப் பயன்படுத்துவதை கொஞ்சம் குறைத்துக்கொண்டால், பின்னணி இசை இன்னும் கூட ரசிக்கத் தக்கதாக இருக்கும்.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துக்குமார் இரவுநேரக் காட்சிகளை மிகுந்த ரசனையுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார். இளையராஜா எஸ்ஸின் படத்தொகுப்பு தெளிவான கதையோட்டத்துக்கு உறுதுணையாக இருந்துள்ளது.

‘டெவில்’ – தரமான கிரைம் திரில்லர்! கண்டு களிக்கலாம்!