DEVI – Tamil Review
பேய் என்றாலே பழிவாங்குதல், சத்தம், ரத்தம், பயம், தாயத்து, மந்திரித்தல், விரட்டுதல் என்று இருக்கும். ஆனால், இந்த படத்தில் பேயை கொஞ்சம் வித்தியாசமாகக் காட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குநர் விஜய்.
மும்பையில் வேலை செய்யும் பிரபுதேவாவுக்கு நவநாகரிகமான பெண்ணை திருமணம் செய்துகொள்ள ஆசை. அதற்காக பார்க்கிற பெண்களிடமெல்லாம் காதல் அப்ளிகேஷன் போடுகிறார். இதனிடையே பாட்டிக்கு உடல்நிலை சரியில்லையென்று சொந்த ஊருக்கு செல்கிறார். அங்கே அவருக்கு திடீர் திருமணம் நடக்கிறது. கிராமத்துப் பெண்ணை மணந்த பிரபுதேவா ஏமாற்றத்துடன் மனைவியுடன் மும்பை திரும்புகிறார். அதற்குப் பிறகு நடக்கும் மாற்றங்கள் என்ன, எப்படி பேய் வந்தது, அதை விரட்ட முடிந்ததா, பிரபுதேவா மனைவியை புரிந்துகொண்டாரா என்பது மீதிக் கதை.
பல வருட இடைவெளிக்குப் பிறகு பிரபுதேவா தமிழில் மறுவருகை புரிந்திருக்கிறார். அந்த வருகை வரவேற்கப்படக்கூடியதாகவே உள்ளது. நாயகிக்கு தான் முக்கியத்துவம் என்றாலும், அதை உணர்ந்து எந்த பாசாங்கும் இல்லாமல் இயல்பாக நடித்திருக்கிறார். ஏமாற்றம், தவிப்பு, கண்ணீர் என்று எல்லா உணர்வுகளையும் பிரதிபலிக்கும் பிரபுதேவாவின் நடிப்பும் பேசப்படுகிறது. சல்மார் பாடலில் பிரபுவின் நடன அசைவுகள் ஆச்சரியம் அளிக்கின்றன.
அப்பாவி கிராமத்துப் பெண், நடிகை என இரு வேறு தோற்றங்களில் தமன்னா வித்தியாசம் காட்டுகிறார். அழகுப் பதுமையாக வந்துபோகும் அதே சமயம் நடிக்கவும் செய்திருக்கிறார். விருது விழாவில் தமன்னா ஆடும் நடனத்துக்கு ஏகோபித்த வரவேற்பை ரசிகர்கள் அள்ளி வழங்குகின்றனர்.
சோனு சூட் சினிமா ஹீரோவுக்கான பங்களிப்பை நிறைவாக வழங்கியுள்ளார். சின்ன சின்ன ரியாக்ஷன்களில் ஆர்.ஜே.பாலாஜியும், சோனு சூட் மேனேஜராக வரும் முரளி ஷர்மாவும், கவனிக்க வைக்கிறார்கள். நாசர், சதீஷ், ஆர்.வி.உதயகுமார், அபிஜித் பால் ஆகியோர் சும்மா வந்து போகிறார்கள்.
மனுஷ் நந்தனின் ஒளிப்பதிவில் மும்பை ஹைடெக் நகரத்தையும், முத்தம்பட்டி கிராமத்து இயல்பையும் கண்முன் நிறுத்துகிறார். சஜித் வாஜித் இசையில் சல்மார் பாடல் ரசிக்க வைக்கிறது. கோபி சுந்தரின் பின்னணி இசை படத்துடன் லாவகமாகப் பொருந்துகிறது.
பேய் படங்களுக்கென்று இருக்கும் கிளிஷேவைத் தவிர்த்த இயக்குநரின் புத்திசாலித்தனம் பாராட்டுக்குரியது. நாசர், சதீஷ் காட்சிகளை தவிர்த்து இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். சினிமா காட்சிகளில் இன்னும் கொஞ்சம் புதுமை புகுத்தியிருக்கலாம். பிரபுதேவா மனைவி குறித்த அன்பை, புரிந்துகொள்ளலை இன்னும் பலப்படுத்தி இருக்கலாம்.
‘தேவி’ – பேய் ரசிகர்களுக்கு பிடிக்கும்.