டிமான்ட்டி காலனி 2 – விமர்சனம்
நடிப்பு: அருள்நிதி, பிரியா பவானி சங்கர், ஆண்டி ஜாஸ்கெலைனன், டிசெரிங் டோர்ஜி, அருண் பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், சர்ஜனோ காலிட், அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் பலர்
இயக்கம்: அஜய் ஆர்.ஞானமுத்து
ஒளிப்பதிவு: ஹரிஷ் கண்ணன்
படத்தொகுப்பு: குமரேஷ் டி
இசை: சாம் சிஎஸ்
தயாரிப்பு: பிடிஜி யுனிவர்சல், ஞானமுத்து பட்டரை, ஒயிட் நைட்ஸ் எண்டர்டெயின்மென்ட்
தயாரிப்பாளர்கள்: பாபி பாலச்சந்திரன், விஜய் சுப்ரமணியன், ஆர்.சி.ராஜ்குமார்
வெளியீடு: ரெட் ஜெயண்ட் மூவிஸ்
பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, யுவராஜ்
2015ஆம் ஆண்டு திரைக்கு வந்த ‘டிமான்ட்டி காலனி’ என்ற பேய்ப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பரவலான வரவேற்பைப் பெற்று, வசூல் ரீதியிலும் பெரிய வெற்றியைப் பெற்றது. சென்னையில் உள்ள ‘டிமான்ட்டி காலனி’யில் உள்ள பேய்கள் சூழ்ந்த சிறிய வீடு ஒன்றை மையமாக வைத்து, போர்த்துகீசிய பெரியவரின் பின்கதை, ஒரே அறையில் மாட்டிக்கொள்ளும் நால்வர், தொலைக்காட்சியில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னரும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தவர்கள் மரணிப்பது போன்ற அம்சங்களை வைத்துப் பின்னப்பட்ட அப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். அருள்நிதி, ரமேஷ் திலக், சனந்த், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
மேற்கண்ட திகில் படத்துக்குக் கிடைத்த வரவேற்பு கொடுத்த ஊக்கத்தால் உந்தப்பட்டு, அதன் இரண்டாம் பாகமாக ‘டிமான்ட்டி காலனி 2’ திரைப்படம் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். அருள்நிதி இதிலும் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். அவருடன் பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்த ஆண்டு மிகப் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான ‘டிமான்ட்டி காலனி 2’, அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா? முதல் பாகத்தைப் போலவே இதுவும் திகில் கிளப்பி பயமுறுத்துகிறதா? பார்க்கலாம்…
முதல் பாகத்தின் கதையின் பெரும்பகுதி ஒரு சிறிய வீட்டுக்குள் நடப்பதாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இரண்டாம் பாகத்தின் கதையின் பெரும்பகுதியோ, மிகப்பெரிய ஆடம்பரமான சைனீஸ் உணவகத்திற்குள் நடப்பதாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், முதல் பாகத்துக்கு ஆறு வருடங்களுக்கு முன்னர் இரண்டாம் பாகத்துக்கான கதை தொடங்குவதாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது.
கதையின் நாயகி டெபியின் (பிரியா பவானி ஷங்கர்) காதல் கணவரும் அவரின் நண்பர்களும் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆறு வருடங்களுக்குப் பிறகும் கணவரைப் பிரிந்த துயரம் தாங்க முடியாததாகி, டெபியை வாட்டி வதைத்து, ஆட்டிப் படைக்கிறது. கணவரின் புகைப்படங்களால் வீடு நிரம்பியிருக்க, ஆற்றாமையின் உச்சத்தில் தவிக்கும் டெபி, இறந்த கணவரின் பதப்படுத்திய விந்தணுவைப் பயன்படுத்தி கருவுற நினைக்கிறார்.
இந்நிலையில், சீனத் துறவி ஒருவரின் உதவியுடன், தனது கணவரின் ஆவியிடம் பேச முயற்சி செய்கிறார் டெபி. இந்த முயற்சி, டெபியை, முதல் பாகத்தின் நாயகன் ஸ்ரீனிவாசனின் (அருள்நிதி) கதையோடு இணைத்துவிட, இறந்துவிட்ட அவரை உயிருடன் மீட்பதற்கான வாய்ப்பு ஒன்று உருவாகிறது. ஸ்ரீனிவாசனின் பின்கதையை ஆராய்கையில் அவருக்கு ரகு (இன்னொரு அருள்நிதி) என்ற சகோதரர் இருப்பது தெரிய வருகிறது.
டெபி – ரகு கூட்டணி, சீனத் துறவி மற்றும் நண்பர்கள் உதவியுடன் ஸ்ரீனிவாசனை மீட்டதா? அவர்களைத் துரத்தும் ஆபத்து உண்மையில் என்ன? அவர்கள் சந்திக்கும் அசம்பாவிதங்கள் என்னென்ன? அவர்கள் என்ன ஆனார்கள்? என்பன போன்ற கேள்விகளுக்கு திகிலைக் கிளப்பும் எதிர்பாராத திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ‘டிமான்ட்டி காலனி 2’ திரைப்படம்.
நாயகி டெபி கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். பார்வையாளர்களின் கவனச் சிதறலுக்கு இடம் கொடுக்காத தனது அழுத்தமான நடிப்பால் இப்படத்தை தாங்கிப் பிடித்துள்ளார். காதல் கணவரை இழந்த துக்கம், பேய்களிடம் மாட்டிக்கொள்ளும் இடங்களில் பதற்றம், புதிர்களைப் புரிந்துகொள்ளும் சாமர்த்தியம் என அவர் நடிப்பதற்கு அருமையான வாய்ப்புகள் இதில் உள்ளன. அந்த வாய்ப்புகளை சரியாகப் புரிந்துகொண்டு சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது திரைத்துறை வாழ்வில் ‘டிமான்ட்டி காலனி 2’ முக்கியமான படங்களில் ஒன்றாக அமைந்துவிட்டது. “பிரியா பவானி சங்கர் அதிர்ஷ்டம் இல்லாத நடிகை” என்ற வதந்தியைப் பரப்பிய மூட நம்பிக்கையாளர்களே… உங்களுக்கு உக்கிரமான பதிலடியை தன் நடிப்பு மூலம் இப்படத்தில் கொடுத்திருக்கிறார். வாழ்த்துகள் பிரியா!
ஸ்ரீனிவாசன், ரகு என இரண்டு வேடங்களில் அருள்நிதி நடித்திருக்கிறார். ஸ்ரீனிவாசன் கதாபாத்திரத்தை விட ரகு கதாபாத்திரத்துக்கு கதையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எதிர்மறை நிழல் படிந்த அந்த ரகு கதாபாத்திரத்தை சிறப்பாகக் கையாண்டு, கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார் அருள்நிதி.
தயாளனாக வரும் முத்துக்குமார், ரிச்சர்ட்டாக வரும் அருண் பாண்டியன், அதிதியாக வரும் மீனாட்சி கோவிந்தராஜன், ஐஸ்வர்யாவாக வரும் அர்ச்சனா ரவிச்சந்திரன், டிமான்ட்டியாக வரும் ஆன்ட்டி ஜாஸ்கெலைனன், தாவோஷியாக வரும் டிசெரிங் டோர்ஜி, சாமாக வரும் சர்ஜனோ காலிட் உள்ளிட்ட நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.
முதல் பாகத்தின் முதல் பாதியில் காமெடி, குத்துப்பாட்டு ஆகியவை இருந்தாலும், இரண்டாம் பாதி முழுவதிலும் திகிலூட்டி இருப்பார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. இந்த இரண்டாம் பாகத்தில் அந்த திகிலை இன்னும் ஒரு படி மேலே எடுத்துச்சென்று, நூறு சதவிகிதம் பயங்கர திகில் அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார். பேய் ஓட்டுவதற்கு வழக்கமாக வேப்பிலை அடித்து விபூதி பூசும் சாமியார்களுக்குப் பதிலாக, சீனத் துறவியை உள்ளே கொண்டு வந்தது கதையை ரொம்ப்ப் புதுசாக ஆக்கி, அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. மேலும், அந்திக்கிறிஸ்து, சாத்தான் வழிபாட்டுக் குறியீடுகள் போன்றவை சுவாரஸ்யத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளன. முதல் பாகத்து அருள்நிதியை உயிரோடு கொண்டுவரும் ’இரட்டையர்கள்’ யோசனை, கண்கள் ஏன் வெள்ளையாக மாறுகின்றன, லைப்ரரியன் கதை, ஆறு வருடங்களுக்கொரு முறை பலி கொடுப்பது போன்ற சில ஐடியாக்கள் கவனிக்க வைத்து நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. படத்தின் இரண்டாம் பாகங்கள் எல்லாம் தோல்வியைத் தழுவிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், ‘டிமாண்ட்டி காலனி’யின் இரண்டாம் பாகத்தை வெற்றிப்படமாக்கி சாதனை படைத்திருக்கிறார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. பாராட்டுகள்.
சாம் சி.எஸ் தனது இரைச்சலும், அபத்தமுமான பின்னணி இசையால் படத்தை எவ்வளவு தான் கெடுக்க முயன்றாலும், ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன், படத்தொகுப்பாளர் குமரேஷ் டி ஆகியோரின் சிறப்பான பங்களிப்பு இயக்குநரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து படத்தை காப்பாற்றியுள்ளது.
‘டிமான்ட்டி காலனி 2’ – திகில் கலந்த உற்சாகத்துடன், மூன்றாம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்திருக்கிறது!