சாமானியர்களை வரி வரம்புக்குள் தள்ளுவதற்காகவே “நோட்டு செல்லாது” நடவடிக்கை!

பணம் வங்கிக்குள் வந்தால் மட்டுமே அது Part of the Systemக்குள் நுழைவதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கலர் கலரான கதைகளை கூறி வருகிறார்.

”If India runs its economy honestly…there will be no ill-affects of cash economy”. இதுவும் அவரது வார்த்தைகள் தான்.

”If India runs its economy honestly”….. அப்படியென்றால் இந்திய மக்கள் நேர்மையாக பொருளாதாரத்தை நடத்தவில்லை என்று சொல்ல வருகிறாரா? இப்படித்தான் நம் அனைவரையும் குற்றப் பரம்பரையினைப் போல கையில் மை வைக்கச் சொன்னார்கள்.

“If Rich pay the taxes honestly” – இப்படி சொல்லி இருந்தால் இதை கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையாகப் பார்க்க முடியும். ஆனால் இந்திய மக்கள் நேர்மையாக பொருளாதாரத்தை நடத்த வேண்டும் என குறிப்பிட்டிருப்பதன் அடிப்படையில் இவர்கள் குறி வைத்திருப்பது சாமானியர்களின் வருமானத்தில் இருந்து வருமான வரியை சுரண்டுவதற்குத்தான்.

வங்கிக்குள் நுழைந்தால் மட்டும்தான் பணம் “part of the system”க்குள் வரும் என இவர்கள் சொல்வதை ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டால், பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை வெளிநாட்டு தனியார் வங்கிகளுக்கு விற்கிற மோடி அரசின் செயலை சிஸ்டத்தையே விற்கிற சட்ட விரோத செயலாகத்தானே பார்க்க முடியும்.

”Those who become part of the system also become part of taxation net”. இப்படி வேறு சொல்லியிருக்கிறார். இந்தியாவின் 58.4 % சொத்தினை வெறும் 1% பணக்காரர்களுக்கு தாரை வார்த்துவிட்டு, அவர்களில் பலருக்கு வரி விலக்கையும் அளித்துக் கொண்டிருக்கும் இந்திய அரசுக்கு 99% மக்களிடம் வருமான வரி கோர எந்த தகுதியும் இல்லை. கல்வி, மருத்துவம், தண்ணீர் உள்ளிட்ட அனைத்தையும் தனியார்மயமாக்கி விற்கும் அரசு எந்த யோக்கியதையின் அடிப்படையில் சாமானியர்களிடம் income tax கேட்க முடியும்?

மேலும் சாமானியர்களிடமிருந்து வரியைப் பிடுங்கி, அதன் மூலமாக Defense budget ஐஉயர்த்தப் போகிறாராம் அருண் ஜெட்லி. ஏற்கனவே இந்தியாவின் மொத்த பட்ஜெட்டான 20 லட்சம் கோடியில் 17 சதவீதம் ஆயுதத் துறையில்தான் செலவிடப்படுகிறது. இந்தியாவின் துறைகளிலேயே அதிகமாக செலவிடப்படும் துறை இதுதான்.

நாட்டின் 30 கோடிக்கும் அதிகமான மக்களை பசியுடன் தூங்க அனுப்பும் நாடு, சாமானியர்களின் மானியங்களை நிறுத்த கையெழுத்திட்டுவிட்டு, பெரும் பணத்தினை ஆயுத வியாபாரத்திலும், அணு வியாபாரத்திலும் அழிக்கிறது.

எல்லையில் ராணுவ வீரர்கள்…………. என்று மோடி பக்தர்கள் வாயை திறக்க ஆரம்பிப்பது கேட்கிறது.

ஆயுத பட்ஜெட்டை உயர்த்துவது ராணுவ வீரர்களுக்கு வசதிகள் செய்து கொடுப்பதற்காக எல்லாம் இல்லை. ஏற்கனவே ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் பென்சன் பணத்திலும் மோடி அரசு கைவைத்திருப்பதால் அவர்கள் தொடர்ச்சியாக முறையான பென்சன் கோரி போராடி வருகிறார்கள். ஒரு ஓய்வு பெற்ற ராணுவ வீரர் இந்த பென்சன் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அப்படி இருக்கையில் ராணுவ வீரர்களின் நலனில் அக்கறையுள்ளோர் போல மோடி காட்டிக் கொள்வதெல்லாம் அப்பட்டமான நடிப்பன்றி வேறில்லை.

உண்மையில் எல்லையில் சிப்பாயாக இருக்கிற பல ராணுவ வீரர்கள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். மோடி கும்பல் வெளிநாட்டு ஆயுத வியாபாரிகளுடன் தங்கள் வியாபாரத்தை நடத்த “போர்” “Surgical strike” என்றெல்லாம் நாடகமாடிக்கொண்டு ஏழை ராணுவ வீரர்களை பலியாக்கிக் கொண்டிருக்கிறது.

அதே ராணுவ வீரர்களை வைத்தே காஷ்மீரின் அப்பாவி மக்களை வேட்டையாடுகிறது இந்திய அரசு. பல்வேறு மாநிலங்களில் ராணுவக் குவிப்பினை செய்து தங்கள் அதிகார வெறியினை நிலைநிறுத்த முயன்று வருகிறது. இதே ராணுவத்தை வைத்தே, தங்கள் நிலத்தைக் காக்க போராடும் பழங்குடி மக்களை மாவோயிஸ்ட் என்ற பெயரில் வேட்டையாடுகிறது. தங்களின் உயர் அதிகாரிகளின் கட்டளையை ஏற்று சொந்த மக்களை வேட்டையாட, தேசப்பற்று வசனங்களைப் பேசி உயர்த்தி சல்யூட் அடிக்கிறார்கள் இந்த ராணுவ வீரர்கள்.

Defense Budgetஐ ஏற்ற வரி கட்ட வேண்டும் என வெளிப்படையாக ஒரு நிதி அமைச்சர் பேசுவதென்பது மனித உரிமை ஆர்வலர்களால் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று. டிசம்பர் 8ஆம் தேதி இந்தியாவை அமெரிக்கா தனது major defense partner என்று ஒப்பந்தம் போட்டு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆயுத வணிக ஒப்பந்தத்தோடு ஒப்பிட்டுத்தான் தற்போது அருண் ஜெட்லி பேசியிருப்பதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

இந்தியாவின் ராணுவத் தளவாடங்களை முழுமையாக அமெரிக்காவிற்கு எழுதிக் கொடுத்திருக்கிறது இந்திய அரசு. அமெரிக்க ஆயுத நிறுவனங்களின் லாபத்திற்கு இந்திய மக்களின் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் அடகு வைத்திருக்கிறது இந்திய அரசு. இப்போதே காசுமீர் மக்களின் போராட்டத்தை ஆயுத ரீதியாக மட்டுமே எதிர்கொள்ளும் இந்திய ராணுவத்தை, அமெரிக்கப் பொறுக்கி ராணுவத்திடம் அடகு வைப்பதென்பது இந்தியாவின் அனைத்து மக்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்குவதாகும்.

கார்ப்பரேட் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மலிவாக கடனை அளித்து, பிறகு அதனை தள்ளுபடியும் செய்வது அடுத்த திட்டம். ஏற்கனவே அம்பானி, அதானி, டாடாக்களிடமிருந்து வர வேண்டிய 7 லட்சம் கோடிக்கும் அதிகமான கடனை வடக்குப்பட்டி ராமசாமியின் கணக்கில் சேர்த்துவிட வேண்டியதுதான்.

சாமானியர்களை வரி வரம்புக்குள் பிடித்துத் தள்ளவும், அதன் மூலம் கார்ப்பரேட் வியாபாரத்தை நடத்தவும், Cashless என்ற பெயரால் சிறு வணிகர்களை அழிக்கவுமே இந்த Demonetization.

VIVEKANANDAN RAMADOSS