மோடியின் ரூபாய் நோட்டு நடவடிக்கையை எதிர்த்து கேரள முதல்வர், அமைச்சர்கள் தர்ணா!
ரூ.500, ரூ.1000 நோட்டுகளை கூட்டுறவு வங்கிகளில் மாற்ற முடியாது என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் திருவனந்தபுரத்தில் ரிசர்வ் வங்கி முன் இன்று தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற அனுமதி கிடையாது என மத்திய நரேந்திர மோடி அரசு உத்தரவிட்டது. இத்தகைய முடிவு மூலம் மோடி அரசு கூட்டுறவுத் துறையை அழிக்க முயற்சிப்பதாக பினராயி விஜயன் ஏற்கெனவே விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) திட்டமிட்டபடி கேரள முதல்வரும், அமைச்சர்களும் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய பினராயி விஜயன், “கேரளாவின் கூட்டுறவு வங்கிகளில் மொத்தம் 1.27 லட்சம் கோடி ரூபாய் இருக்கிறது. இந்தப் பணம் அனைத்தும் முறையாக டெபாசிட் செய்யப்பட்ட பணம். கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால், அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை தடை செய்வதால் மட்டும் கறுப்புப் பணத்தை ஒழித்துவிட முடியுமா என அதை அமல்படுத்தியவர்கள் ஆழமாக சிந்தித்திருக்க வேண்டாமா?
கேரள மாநிலத்தின் கூட்டுறவு வங்கிகளில் இருக்கும் இவ்வளவு பெரிய தொகை மீதான தாக்குதல் வியூகத்தால் கறுப்புப் பணம் கட்டுப்படுத்தப்படுமா? வரும் 21-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு பாஜகவுக்கும் அழைப்பு விடுப்போம்” என்றார்.
இந்த தர்ணா போராட்டாத்தில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, “நாடு முழுவதும் தேவையான அளவு ரூ.500, 1000 நோட்டுகள் கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்” என்றார்.