நாட்டில் கலவரம் மூளும் அபாயம்: குடியரசு தலைவருடன் மோடி திடீர் சந்திப்பு!
போதிய முன்னேற்பாடோ, திட்டமிடலோ இல்லாமல், “ரூ.500, ரூ.1000 செல்லாது” என கடந்த 8ஆம் தேதி திடீரென அறிவித்தார் நரேந்திர மோடி. போதிய கால அவகாசம் தரப்படாமல் உடனடியாக அமல் செய்யப்பட்ட இந்த அறிவிப்பினால், நாட்டின் பணப்புழக்கத்தில் 86 சதவிகிதமாக இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் திடீரென வெற்றுக் காகிதங்களாய் மாறி போயின. மீதமுள்ள 14 சதவிகிதம் பணத்தைக் கொண்டு தான் 130 கோடி இந்தியர்களும் தற்போது வாழ்ந்தாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் பணத்தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை இன்னின்ன நிபந்தனைகளுக்கு உட்பட்டு வங்கியில் மாற்றிக் கொள்ளலாம், ஏடிஎம்-ல் எடுத்துக்கொள்ளலாம் என்று மோடி அரசு வக்கணையாய் தினம் தினம் அறிவிப்பு வெளியிட்டாலும், நடைமுறையில் வங்கிகளிடம் போதுமான பணம் இல்லாததாலும், பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் “டெம்ப்பரரிலி அவுட் ஆஃப் சர்வீஸ்” என்ற போர்டு தொங்குவதாலும் சாமானிய மக்கள் அன்றாட செலவுகளுக்கே பணம் இல்லாமல் அல்லாடுகிறார்கள். இதனால் அவர்களது வாழ்க்கை ஸ்தம்பித்துக் கிடக்கிறது.
மக்கள் பொறுமை இழந்து வருவதால் நாட்டில் ‘பணக்கலவரம்’ மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் ஏற்கெனவே எச்சரித்திருக்கிறார்கள். மோடி அரசு சாமானிய மக்கள் மீது பொருளாதார யுத்தம் தொடுத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அக்கட்சிகள் ஏற்படுத்திய அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கிக்கிடக்கின்றன.
இது மட்டும் இல்லாது, 3 மாநிலங்களின் முதல்வர்கள் மோடி அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி மக்களோடு நின்று போராடத் துவங்கியிருக்கிறார்கள். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராய் விஜயன் ஆகியோரின் இந்த போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு பெருகிவருகிறது.
இந்நிலையில், “மக்களை துன்புறுத்தினால் கலவரம் வெடிக்கலாம்” என்று உச்சநீதிமன்றம் இன்று மோடி அரசை எச்சரித்துள்ளது. மேலும், மோடி அரசின் அரைவேக்காட்டுத்தனத்தை அம்பலப்படுத்தும் வகையில் அது அடுக்கடுக்கான பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இத்தகைய அசாதாரண சூழலில், மோடி இன்று மாலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை திடீரென சந்தித்துள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரூபாய் நோட்டு விவகாரத்தால் ஏற்பட்டுள்ள ‘நெருக்கடி நிலை’ குறித்தும், அதை சமாளிக்க ‘அவசர நிலை’யில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அப்போது விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.