“மக்களை துன்புறுத்தினால் கலவரங்கள் வெடிக்கலாம்”: மோடி அரசை எச்சரித்து உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
ரூ.500, 1000 செல்லாது என திடீரென அறிவிக்கப்பட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கையை எதிர்த்து, நாடு முழுதும் கீழ்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை தடை செய்ய முடியாது என்று மத்திய அரசிடம் திட்டவட்டமாக கூறிய உச்சநீதிமன்றம், “இந்த அளவுக்கு பிரச்சனைகள் எழுந்திருக்கும்போது நாங்கள் எப்படி கதவுகளை அடைக்க முடியும்?” என்று கூறி அரசின் மனுவுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வின் முன் இன்று விசாரணை நடைபெற்றது.
அப்போது, “மக்கள் பணத்தை தேடி அலைகின்றனர், மணிக்கணக்காக வரிசையில் காத்திருக்கின்றனர். இதற்கு எதிராக அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்படுவதே பிரச்சனையின் தீவிரத்தையும் பரிமாணத்தையும் அறிவுறுத்துவதாக உள்ளது” என்றார் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர்.
மேலும், “மக்கள் நிவாரணம் தேடி நீதிமன்றங்களை நாடுகின்றனர், அவர்களுக்கு எதிராக நாங்கள் கதவுகளை அடைக்க முடியாது” என்று அரசின் மனுவுக்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.
“இந்தப் பிரச்சினை அவ்வளவு சாதாரணமல்ல, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே இது மிகுந்த பரிசீலனைக்குரியது. மக்கள் பணத்திற்காக அலைக்கழிக்கப்படுகின்றனர். மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கலவரங்களும் உருவாகலாம்” என்று நீதிபதிகள் அமர்வு தெரிவிக்க, அதற்கு பதில் அளித்த அட்டர்னி ஜெனரல் முகுல் ரொஹாட்கி, “இது முற்றிலும் தவறு, மக்கள் பொறுமையுடன் வரிசையில் காத்திருக்கின்றனர்” என்றார்.
இதற்கு பதிலடி கொடுத்த அமர்வு, “இல்லை! மக்கள் அல்லல்படுகின்றனர், இதனை ஒருவரும் மறுக்க முடியாது” என்று திட்டவட்டமாக தெரிவித்தது.
மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், நவம்பர் 8-ம் தேதி இரவு அறிவிப்புக்குப் பிறகு 47 பேர் உயிரிழந்துள்ளனர். இது ரூபாய் நோட்டு நடவடிக்கையின் விளைவே என்றார்.
இதற்கு அட்டர்னி ஜெனரல் முகுல் ரொஹாட்கி, “மக்கள் மீது அக்கறை இல்லையெனில் நாங்கள் மணிக்கொருதரம், நாளுக்கொருதரம் அறிவிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருப்போமா? வரிசையின் நீளம் நாளுக்குநாள் குறைந்து வருகிறது” என்றார்.
இதற்கு கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், அரசிடம் போதுமான பணம் இல்லையா என்ற தொனியில், “ரூ.100 நோட்டுகள் தட்டுப்பாடா? அந்த நோட்டுகள் பயன்படுத்த முடியாது என்று அறிவிக்கப்படவில்லையே? ஏன் நூறு ரூபாய் நோட்டுகள் கிடைக்குமாறு செய்யப்படவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு ரொஹாட்கி கூறும்போது, “ஆம். ரூ.100 நோட்டுகள் போதுமான அளவில் இல்லை. ஏனெனில் நவம்பர் 8 அறிவிப்புக்கு முன்பு தற்போது செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, 1000 நோட்டுகளே மொத்த பணப்புழக்கத்தில் 80% இருந்து வந்தது” என்றார்.
அவர் மேலும் தெரிவிக்கும்போது பணத்தட்டுப்பாடு இல்லை, நாடு முழுதும் தபால் நிலையங்களுக்கும், வங்கிகளுக்கும் புதிய நோட்டுகளை கொண்டு சேர்ப்பதில் பிரச்சினை என்று கூறினார்.
இதற்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “பணமாற்று வரம்பை ரூ.4,500-லிருந்து ரூ.2000 ஆக குறைக்கப்பட்டது ஏன்? சாமானிய மக்களின் கடினப்பாடுகளை புரிந்துகொண்டு நடந்துகொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளபோதும் வரம்பு குறைக்கப்பட்டது எப்படி?” என்றார்.
இதற்கு ரொஹாட்கி, பெட்ரோல் நிலையங்களில் கார்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. திருமணங்களுக்கு ரூ.2.5 லட்சம் வரை அனுமதிக்கப்பட்டுள்ளது, விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை அனுமதிக்கப்பட்டுள்ளது, என்றார்.
இதற்கு குறுக்கிட்ட கபில் சிபல், “மெர்சிடஸ் வைத்திருப்பவர்கள் பெட்ரோல் நிலையங்களில் கார்டை தேய்க்கலாம், விவசாயிகள் செய்ய முடியாது. நாட்டு மக்கள் தொகையில் பெரும்பாலானோர் மாதமொன்றுக்கு ரூ.10,000-த்துக்கு குறைவாகவே சம்பாதிக்கின்றனர். இது கறுப்புப் பணம் அல்ல. ஒரு குடும்பமே 20 கிமீ நடந்து சென்று பஸ்தாரில் உள்ள ஐசிஐசிஐ வங்கிக்கு பணம் மாற்ற செல்கிறது. 23 லட்சம் கோடி நோட்டுகளில் சுமார் 14 லட்சம் கோடி நோட்டுகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது, மீதி 9 லட்சம் கோடி நோட்டுகள்தான் புழக்கத்தில் உள்ளன” என்றார்.
கபில் சிபல் கேள்விக்கு பதில் இல்லாத அட்டர்னி ஜெனரல் ரொஹாட்கி, கோர்ட்டில் அரசியல் பேசுகிறார் என்றும் ‘நாங்கள் உங்கள் செய்தியாளர்கள் சந்திப்பை பார்த்துள்ளேன்’ என்றும் கூறினார்.
இதற்கு சற்றே காட்டமாக பதில் அளித்த கபில் சிபல், “என்னுடைய செய்தியாளர்கள் சந்திப்பு நீதிமன்ற அறையிலா நடைபெற்றது? தேவையில்லாமல் அதைப்பற்றி இங்கு ஏன் பேசுகிறீர்கள்? என்றார்.
இதனையடுத்து மத்திய அரசும், கபில் சிபலும் நவம்பர் 25-ம் தேதியன்று ரூபாய் நோட்டு நடவடிக்கைகளினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் உண்மை நிலவரங்களையும், அடிப்படையான கடினப்பாடுகளையும் தரவுகளுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டு விசாரணையை தள்ளி வைத்தார்.