”மோடியை உங்கள் கணவர் ஆதரித்தால் இரவு உணவு பரிமாறாதீர்கள்”: பெண்களுக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள்
“மோடி என்று உங்களுடைய கணவர் முழக்கமிட்டால் அவருக்கு நீங்கள் இரவு உணவு தரமாட்டேன் எனக் கூறுங்கள்” என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பெண்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியின் 2024 – 25 பட்ஜெட்டில் 18 வயது பூர்த்தியடைந்த தகுதியான பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்ட பின்பு பெண்களுடன் உரையாடும் விதமாக ‘மஹிளா சம்மான் சம்மோர்ச்’ என்ற கூட்டம் சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டு பெண்களுடன் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:
“பல ஆண்கள் மோடியின் பெயரை உச்சரிக்கிறார்கள். அவர்களை நீங்கள் தான் சரி செய்ய வேண்டும். உங்களுடைய கணவர் மோடியின் பெயரை முழங்கினால், இரவு அவருக்கு உணவு பரிமாற மாட்டேன் எனக் கூறுங்கள்.
உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் அவர்கள் எனக்கும் (கெஜ்ரிவால்) ஆம் ஆத்மி கட்சிக்கும் ஆதரவு அளிப்பார்கள் என உறுதி வாங்குங்கள். அதேபோல், பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் மற்ற பெண்களிடம், அரவிந்த் கெஜ்ரிவால் தான் அவர்களின் சகோதர்ர் எனக் கூறுங்கள். நான் அவர்களுடைய மின்சார கட்டணத்தை இலவசமாக்கியுள்ளேன். அவர்களுடைய பேருந்து கட்டணத்தை இலவசமாக்கியுள்ளேன். இப்போது மாதம்தோறும் ரூ. 1,000 தர இருக்கிறேன். பாஜக அவர்களுக்கு என்ன செய்தது? எதற்காக பாஜவுக்கு வாக்களிக்க வேண்டும்? இந்த முறை கெஜ்ரிவாலுக்கு வாக்களிக்க அவர்களிடம் சொல்லுங்கள்.
கட்சிகள் ஒரு பெண்ணுக்கு சில பதவிகளை அளித்துவிட்டு பெண்களுக்கு அதிகாரமளித்து விட்டதாகக் கூறுகின்றன. பெண்களுக்கு பெரிய பதவிகள் வேண்டாம் என நான் கூறவில்லை. அவர்கள் பெரிய பதவிகள், சீட்டுகள் அனைத்தையும் பெற வேண்டும். ஆனால் அதன் மூலம் இரண்டு மூன்று பெண்கள் தான் பயன் பெறுவார்கள். மற்ற பெண்கள் என்ன செய்வார்கள்?. நமது அரசின் திட்டமான ‘முக்கிய மந்திரி மஹிளா சம்மான் யோஜனா’உண்மையான அதிகாரத்தைக் கொண்டுவரும். கையில் பணம் இருக்கும்போது அதிகாரம் தானாக வரும். ஒவ்வொரு பெண்ணும் மாதந்தோறும் ரூ1,000 பெறும்போது அதிகாரம் வரும். இந்தத் திட்டம் ஒட்டுமொத்த உலகிலும் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் மிகப் பெரிய திட்டமாக இருக்கும்.”
இவ்வாறு முதல்வர் கெஜ்ரிவால் பேசினார்.