“ஆர்எஸ்எஸ் குருமூர்த்திகளின் சாணக்கியத்தனங்களை முறியடிப்போம்!”
“ஆடிட்டர் குருமூர்த்தி”யின் பேட்டி “தமிழ் இந்து”வில் வந்துள்ளது. ஆனால் விஷயம் ஆடிட்டிங் பற்றியல்ல. உண்மையில் அது ஆர்எஸ்எஸ் குருமூர்த்தியின் பேட்டி. அதன் சாரம் சாதியத்திற்கு வக்காலத்து வாங்குவது. காரணம் அதுதான் ஆர்எஸ்எஸ்-ன் நிலைபாடு.
“வித்தியாசங்களுடன் சுமுகமாக வாழமுடியும் என்பதை நிலைநாட்டியவர்கள்தான் ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள்” என்கிறார். அதாவது சுமுகமற்ற சாதியத்தோடும் சுமுகமாக வாழ வேண்டும் என்றவர்கள்தாம் அந்த மகான்களாம். மனிதர் உண்மையைச் சொன்னார். ராமானுஜரை புகழ்ந்து நெடுந்தொடர் எழுதும் கலைஞருக்கு இது சமர்ப்பணம்.
இவர்களுக்கு நேர் விரோதமான கார்ல் மார்க்ஸ் தோற்றுப் போனாராம். ஒரே புளகாங்கிதம் மனிதருக்கு. பல நூறு ஆண்டுகளாக வருணம் / வர்க்கம் எனும் பேதங்களால் சுரண்டி வந்த சமூகம், மார்க்ஸுக்கு பிந்திய வெறும் 140 ஆண்டுகளில் மாறிப் போகுமா?
இங்கு முக்கியமான கேள்வி: மாறக்கூடாது எனும் ஆசையா, மாற வேண்டும் எனும் இலக்கா என்பதுதான். குருமூர்த்தி கூட்டத்தின் ஆசை சாதி ஒழியக் கூடாது என்பது. மார்க்சியர்களின் இலக்கு அதை நோக்கி விடாப்பிடியாக முன்னேற வேண்டும் என்பது. நல்ல லட்சியம் தாமதத்தை காணலாமே தவிர தோல்வியை காணாது.
இப்படித்தான் அடிமைச் சமுதாயம் ஒழியாது, அதனுடன் சரிக்கட்டிப் போக வேண்டும் என்றார்கள் அதன் ஆதரவாளர்கள் கிரேக்கத்திலும் ரோமிலும்,ஏன் அமெரிக்காவிலும்கூட. ஆனால் அடிமை வியாபாரம் ஒழியத்தான் செய்தது. அபபடி இங்கும் சாதியம் ஒருநாள் ஒழியத்தான் செய்யும்.
ஆனால் அதற்கு முன்பு குருமூர்த்தி கூட்டம் அதைக் கட்டிக் காக்க விதவிதமான வாதங்களை முன்வைக்கிறது ஒரு நப்பாசையில். “சாதி இங்கே இருக்கத்தான் செய்யும். அதை எப்படி கையாள்வது என்பதுதான் சவால்” என்கிறார்.
எப்படி கையாள வேண்டுமாம்? “வன்னியர்களும், முக்குலத்தோரும், தலித்துகளும் அரசியலை நோக்கிப் போனதால் பொருளாதாரத்தில் பின்தங்கினர்” என்கிறார். அதாவது இந்த சூத்திர- பஞ்சமர்களுக்கு அரசியல் வேண்டாம். அப்படியெனில் அரசியலை யார் கவனிப்பது? பிற சாதியினர். பழைய காலம் போல பிராமண-ஷத்திரிய- வைசிய வருணத்தவர். பேஷ்…பேஷ் !
அரசியல் அதிகாரம் இல்லாததால்தானே ஆணவக் கெலைகளைக் கூட தடுக்க முடியாது தவிக்கிறார்கள் தலித்துகள் என்று கேட்கலாம். அதற்கு குருமூர்த்தியின் பதில்: “ஆங்காங்கே நடக்கும் கவுரவக் கொலைகள் பெரிதுபடுத்தப்படுகின்றன. எட்டு கோடிப்பேர் வசிக்கும் ஒரு மாநிலத்தில் கவுரவக் கொலைகளின் சதவீதத்தைப் பார்த்தால் மிகவும் குறைவுதான்”. நடக்கும் ஆணவக் கொலைகள் போதாது நாம் கவலைப்பட! ஆக விஷயம் முடிந்தது.
அப்படியெனில், சாதியம் பற்றிய நமது நோக்கு என்னவாக இருக்க வேண்டும்? கூறுகிறார்: “ஐந்து வருடத்திற்கு மட்டுமே மதிப்புள்ள அரசியல் என்பது காலம்காலமாக இருந்த சாதி எனும் நிறுவனத்தின் முன்பு தோற்றுவிட்டது; தற்காலிக சக்திகள் நிரந்தர சக்திகளுடன் போராட முடியாது.”
சுத்தம் … படு சுத்தம். ஆர்எஸ்எஸ் மதவாதிகளைப் பொறுத்தவரை நித்தியமானது கடவுள் அல்ல, சாதிதான்; அந்த நித்தியத்துடன் அநித்தியமான அரசியல் கட்சிகள் போட்டியிடக் கூடாது; சாதியத்தின் முன்னால் மண்டியிட வேண்டும்; வேறு வழியில்லை; வேறு வார்த்தையில் சொன்னால், சாதியை எதிர்க்கும் அரசியல் அல்ல, அதற்கு அடிபணியும் அரசியலே இங்கு வேண்டும் ; அந்த சாதிய அரசியலானது வருணாசிரம அடுக்கின்படி உயர்வருணத்தவரின் ஆதிக்கத்திலேயே இருக்க வேண்டும்; பழைய மனுஅதர்ம காலம் திரும்ப வேண்டும் – இதுதான் குருமூர்த்தி கூட்டத்தின் தணியாத ஆசை. அதை கூச்சமின்றி வெளிப்படுத்தியிருக்கிறார்.
மனிதர் நாணயஸ்தர். எதையும் மறைக்கவில்லை. இப்போதும் ஆர்எஸ்எஸ்சின் உயர்சாதிய அரசியலை புரிந்து கொள்ளவில்லை என்றால் நாம்தான் ஏமாளிகள்.
“இல்லை நாங்கள் ஏமாளிகள் அல்ல. உங்கள் வருணாசிரம அரசியலை புரிந்து கொண்டவர்கள். நீங்கள் எவ்வளவு தந்திரமான வாதங்களை முன்வைத்தாலும், சாணக்கியத்தனமான காரியங்களை செய்தாலும் அத்தனையையும் முறியடித்து காட்டுவோம்” என்று முரசறைவோம்.
– அருணன்