டிடி ரிட்டர்ன்ஸ் – விமர்சனம்

நடிப்பு: சந்தானம், சுரபி, மாசூம் சங்கர், பிரதீப் ராம் சிங் ராவத், மாறன், ரெடின் கிங்ஸ்லி, ஃபெஃப்சி விஜயன், மொட்ட ராஜேந்திரன், முனீஷ்காந்த், பிபின், தீனா, சேது, தங்கதுரை, ரீட்டா, மானஸ்வி, தீபா மற்றும் பலர்

இயக்கம்: எஸ்.பிரேம் ஆனந்த்

ஒளிப்பதிவு: தீபக் குமார்

படத்தொகுப்பு: என்.பி.ஸ்ரீகாந்த்

இசை: ஆஃப்ரோ

தயாரிப்பு: ‘ஆர்.கே.எண்டர்டெயின்மெண்ட்’ சி.ரமேஷ் குமார்

பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்

சந்தானம் நாயகனாக நடித்த ‘தில்லுக்கு துட்டு’, பாராட்டையும் வசூலையும் வாரிக் குவித்த வெற்றிப்படம். அந்த ‘தில்லுக்கு துட்டு’ பட வரிசையின் மூன்றாவது படமாக, முழுக்க முழுக்க சந்தானம் பாணி நகைச்சுவையைத் தெறிக்கவிட்ட படமாக வெளிவந்திருக்கிறது ‘டிடி ரிட்டர்ன்ஸ்’.

0a1d

முன்னொரு காலத்தில், புதுச்சேரியில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பங்களாவில், பயங்கரமான சூதாட்டம் ஒன்றை தொழிலாக நடத்தி வருகிறது ஒரு குடும்பம். சூதாட்டத்தில் வென்றால், கட்டிய பணத்திற்கு இணையாக பல மடங்கு பரிசு, தோற்றால் மரணம். இப்படியான விபரீத விளையாட்டை நடத்தும் அந்த குடும்பத்தை ஊர்மக்கள் அடித்து, எரித்து கொன்று விடுகிறார்கள்.

தற்காலத்தில், அதே புதுச்சேரியில், மிகப் பெரிய தாதாவாக கோலோச்சி வரும்  அன்பரசு (ஃபெஃப்சி விஜயன்) தனது மகன் பென்னிக்கு (ரெடின் கிங்ஸ்லி) திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார். இதற்காக ரூ.25 லட்சம் கொடுத்து, விருப்பமில்லாத பெண் ஒருவரை மணமகளாகத் தேர்வு செய்கிறார். கடைசி நேரத்தில் அந்த பெண் ஓடிவிட, அவரது தங்கையும் நாயகியுமான சோஃபியாவை (சுரபி) பென்னிக்கு மணம் முடிக்க தயாராகிறார்கள். இதையறிந்த சோஃபியாவின் காதலரும் நாயகனுமான சதீஷ் (சந்தானம்), தாதா அன்பரசு கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுத்து கல்யாணத்தை நிறுத்தி சோபியாவை மீட்க நினைக்கிறார். அதற்கு ரூ.25 லட்சம் பணம் அவருக்கு தேவைப்படுகிறது.

இதனிடையே, தாதா அன்பரசுவிடம் இருக்கும் பணத்தை குழந்தை (பிபின்) –  பீம் (முனீஷ்காந்த்) கும்பல் கொள்ளையடிக்க, அவர்களிடம் இருந்து புரொஃபசர் (மொட்டை ராஜேந்திரன்) கும்பல் அந்த பணத்தை கொள்ளையடிக்கிறது. ஆனால், அந்த பணம் தற்செயலாக சதீஷின் கையில் கிடைக்கிறது. பணத்தோடு பயணிக்கும் சதீஷின் நண்பர்கள் போலீசிடம் இருந்து தப்பிக்க, விபரீதமான சூதாட்ட விளையாட்டால் கொலை செய்யப்பட்ட குடும்பம் வசித்த பங்களாவில் பணத்தை மறைத்து வைக்கிறார்கள்.

தனது பணம் யாரிடம் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளும் தாதா அன்பரசு, நாயகி சோஃபியாவை வைத்து நாயகன் சதீஷை மிரட்டுகிறார், இதனால் பணத்தை திருப்பி கொடுத்து விடலாம் என்ற எண்ணத்தில் சதீஷ் பணத்தை எடுக்க பங்களாவுக்குள் செல்ல, அங்கிருக்கும் பேய்களிடம் சிக்கி, விபரீத சூதாட்ட விளையாட்டை விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்.

சதீஷ் மற்றும் அவரது நண்பர்களுடன், பணத்தை தேடி அங்கு வரும் தாதா அன்பரசு, குழந்தை, புரொஃபசர் உள்ளிட்ட அனைவரும் அந்த பேய் வீட்டில் சிக்கிக்கொண்டு, பேய்களுடன் விபரீத சூதாட்ட விளையாட்டில் பங்கேற்க, இறுதியில் அவர்கள் விளையாட்டில் வெற்றி பெற்று உயிருடன் வெளியே வந்தார்களா? அல்லது தோற்று உயிரை விட்டார்களா? என்பதை காமெடியாக சொல்வது தான் ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

‘குளு குளு’, ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ ஆகிய பரிசோதனை பட முயற்சிகளுக்குப் பிறகு மீண்டும் தனது பாணி காமெடி ஜானருக்கு திரும்பியிருக்கிறார் சந்தானம். நாயகன் சதீஷாக வரும் அவர், டைமிங், ரைமிங் கலந்த கலாய், பேயிடம் நக்கலாக நடத்தும் பேச்சுவார்த்தை, அசால்ட்டான உடல்மொழி என மிகையில்லாத நடிப்பால் கவர்கிறார். நாயகனாக இருந்தாலும், காதல் காட்சிகள், ஆக்‌ஷன், பாடல்கள் என அனைத்தையும் அளவாக செய்துவிட்டு காமெடியில் மட்டும் முழு கவனத்தையும் செலுத்தியிருக்கிறார். திரைப்பட பார்வையாளர்கள் சந்தானத்திடம் விரும்பி எதிர்பார்ப்பது இத்தைகைய காமெடி நடிப்பைத் தான். கீப் இட் அப்.

சந்தானத்துடன் சேர்ந்து, ரெடின் கிங்ஸ்லி, பெப்சி விஜயன், மாறன், சைதை சேது, முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், பிபின் என பலரும் காமெடிக் காட்சிகளில் போட்டிபோட்டுக் கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிரிக்க வைக்கிறார்கள்.

நாயகனின் காதலி சோஃபியாவாக வரும் சுரபிக்கு பெரிய அளவில் வேலையில்லை; என்றாலும் நடிப்பிலும் குறையில்லை.

முரட்டு வில்லனாக வரும் சாய் தீனா கூட இறுதியில் சில காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். வித்தியாசமான பேயாக வில்லன் நடிகர் பிரதீப் ராம் சிங் ராவத் சில காட்சிகளே வந்தாலும் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

இயக்குநர் ஏ.பிரேம் ஆனந்த், சிரிப்பு சரவெடியாக படத்தை இயக்கியிருக்கிறார். ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர், அரசியல்வாதிகளையும், திரை பிரபலங்களையும் நடுநடுவே நக்கலடிக்கவும் செய்திருக்கிறார். முந்தைய சந்தானம் படங்களில் வரும் பாடி ஷேமிங், அடல்ட் வகையறா நகைச்சுவைகளைத் தவிர்த்துவிட்டு, இந்த படத்தில் காட்சிகளுக்கு ஏற்றார் போன்ற டைமிங் காமெடிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியிருக்கிறார். பாராட்டுக்கள்!

 தீபக் குமாரின் ஒளிப்பதிவும், ஆஃப்ரோவின் ஹாரர் பின்னணியிசையும் படத்துக்கு பலம்.

 ’டிடி ரிட்டர்ன்ஸ்’ – வயிறு நோக சிரிக்க வைக்கும் வெற்றிகரமான காமெடி மேஜிக்!