‘தர்பார்’ படத்தில் சசிகலா தொடர்பான வசனம் நீக்கம்: லைகா நிறுவனம் அறிவிப்பு!
லைகா தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படம் நேற்று (ஜனவரி 9ஆம் தேதி) வெளியானது.
சர்வதேச அளவில் 7,000 திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த படத்தில், ”காசிருந்தால் சிறைவாசி கூட ஷாப்பிங் போய் வரலாம். தென்னிந்தியாவில் கூட ஒரு கைதி இப்படி அப்பப்போ வெளியே போய்ட்டு வருவாங்களாமே!?’ என்ற வசனம் இடம் பெற்றுள்ளது.
இந்த வசனம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், தற்போது பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வருபவருமான சசிகலாவைக் குறிப்பிடுவதாக சர்ச்சை எழுந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த அதிமுக அமைச்சர் ஜெயகுமார், “பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். ஆனால் சிறைச்சாலை வரை பாய்வதாக ‘தர்பார்’ படத்தின் கருத்து உள்ளது. இந்த கருத்து நல்ல கருத்து தான். இது சசிகலாவை பற்றிய கருத்தாக இருக்கும் என எண்ணுகிறேன்” என்றார்.
சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் இதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, சர்ச்சைக்குரிய வசனத்தை உடனடியாக படத்தில் இருந்து நீக்க வேண்டும் என படக்குழுவினரை கேட்டுக்கொண்டார்.
மேலும், “ரஜினிகாந்தும், அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும் இப்படி ஒரு வசனத்தை வைக்க அனுமதித்திருக்கக் கூடாது. உடனடியாக சம்பந்தப்பட்ட காட்சியை நீக்குவார்கள் என நம்புகிறோம். இல்லையேல், அவர்கள் மீது சட்டப்படி வழக்குத் தொடரப்படும்” என்று தனது பேட்டியில் குறிப்பிட்டார் ராஜா செந்தூர் பாண்டியன்.
இது தொடர் விவாதமாகி வந்த நிலையில், ‘தர்பார்’ படக்குழுவினர் அந்த வசனத்தை படத்திலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக லைகா நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பதிவில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில், “எங்களின் ‘தர்பார்’ திரைப்படத்தில், கைதிகள் சிறைச்சாலையை விட்டு வெளியே செல்வதைக் குறிக்கும் வார்த்தைகள் பொதுவாக எழுதப்பட்டதே தவிர, எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் குறிக்கவோ, அல்லது யார் மனதையும் புண்படுத்தவோ எழுதப்பட்டது அல்ல. இருப்பினும் அந்தக் குறிப்பிட்ட சில வார்த்தைகள் சிலரது மனதைப் புண்படுத்துவதாகத் தெரிய வந்ததால், அதை படத்திலிருந்து நீக்குகிறோம்” என்று தெரிவித்துள்ளது லைகா நிறுவனம்.