தலித் மாணவர் ரோகித் வெமுலாவை கொன்ற ஆர்.எஸ்.எஸ்!

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலா, பல்கலைக்கழகத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக 15 நாட்களுக்கும் மேலாக போராடிக்கொண்டிருந்த நிலையில் ஞாயிறு (17-01-2016) அன்று இரவு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இந்துத்துவக் காலிகளுக்கு எதிராக போராடியதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் நேரடி தலையீட்டின் கீழ், கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்புதான் இப்பல்கலையைச் சேர்ந்த அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த ஐந்து தலித் மாணவர்கள் விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். வெளியேற்றப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக விடுதி, நூலகம், வகுப்பறை மற்றும் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

பல்கலைக்கழகத்தின் பாரபட்சமான இந்த பார்ப்பன பாசிச நடவடிக்கையை எதிர்த்தும், மாணவர்களை பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்கக் கோரியும் பாதிக்கப்பட்ட மாணவர்களும், ஜனநாயக சக்திகளும் பல்கலைக்கழகத்திற்கு வெளியே கொட்டகை அமைத்து பதினைந்து நாட்களுக்கு மேலாக போராடி வந்தனர். இந்நிலையில் தான் மாணவர் ரோகித் வெமுலாவின் மரணம் நாடெங்கிலும் ஜனநாயக சக்திகளை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியிருக்கிறது.

தலித் மாணவனின் மரணத்திற்கு எதிராக பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள், தெலுங்கானாவைச் சேர்ந்த மத்திய மோடி அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை கைது செய்யுமாறும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்யுமாறும் போராடி வருகின்றனர்.

பல்கலைக்கழக மாணவரின் தற்கொலையின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடி அரசின் பகிரங்க தலையீட்டுக்கான காரணம் என்ன?

முசாபர் நகர் தாக்குதலில் ஆர்.எஸ்.எஸ் காலிகளின் திட்டமிட்ட சதிச்செயலை அம்பலப்படுத்தும் “முசாபர் நகர் பாக்கி ஹே” எனும் ஆவணப்படத்தை இம்மாணவர்கள் கூட்டமைப்பு பல்கலைக்கழக வளாகத்திற்குள் திரையிட்டிருக்கிறது.

முன்னதாக, இந்த ஆவணப்படம் டெல்லி பல்கலைக்கழகத்தில் திரையிடப்படுவது இந்துத்துவக் கும்பலால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அச்சுறுத்தலுக்கு அஞ்சாத, நாடெங்கிலும் உள்ள ஜனநாயக முற்போக்கு மாணவர் அமைப்புகள், இந்துத்துவ பாசிசத்தை தனிமைப்படுத்தி வேரறுக்கும் விதமாக முசாபர் நகர் தாக்குதலில் ஆர்.எஸ்.எஸ்ஸின் சதிச்செயலை அம்பலப்படுத்துவதில் முனைப்பு காட்டின. இதன் ஒரு பகுதியாகவே ஹைதராபாத் பல்கலைக்கழகத்திலும் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பினர் “முசாபர் நகர் பாக்கி ஹை” ஆவணப்படத்தை திரையிட்டனர். மேலும், யாகூப் மேமன் துக்கிலிடப்பட்டதில் அரசின் இந்துத்துவ முகத்தை தோலுரிக்கும் விதத்திலும் இம்மாணவர் கூட்டமைப்பின் பிரச்சாரம் அமைந்திருந்தது.

இதனால் காவிக்கூட்டம் மாணவர்கள் மத்தியில் முழுக்கவும் அம்பலப்பட்டு போனது. பார்ப்பனிய இந்து மதத்தின் சேவகனாக தாழ்த்தப்பட்டவர்கள் இருக்க வேண்டும் என்று சொன்ன சாவர்க்கரின் ஆணையை தலித்துகள் மீறுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத காவிக்கும்பல், இம்மாணவர் கூட்டமைப்பு மீது தாக்குதலில் இறங்கியிருக்கிறது. அது தொடர்பான விசாரணையில் ஆர்.எஸ்.எஸ்-ஏ.பி.வி.பி குண்டாந்தடிகள் இம்மாணவர் கூட்டமைப்பிடம் மன்னிப்புக் கோர வைக்கப்பட்டனர்.

ஆனால், அரசு அடக்கு இயந்திரத்தை தன் கைகளில் வைத்திருக்கிற காவிக்கூட்டம் தனக்கே உரித்தான நைச்சிய பாணியில் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பை பல்கலையில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கத்துடன், தாங்கள் தாக்கப்பட்டதாக பொய் வழக்கை புனைந்தது. இந்த பொய் குற்றச்சாட்டை வைத்துக்கொண்டு மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருக்கும் பண்டாரு தத்தாத்ரேயா, “ஹைதராபாத் பல்கலைக்கழகம் தேசத்துரோக-சாதிய-பயங்கரவாதிகளின் கூடாரமாக இருக்கிறது” என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் ஸ்மிருதி இரானிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

இப்படித்தான் காவி வானரங்கள் சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் ‘மோடிக்கு எதிராக பேசுகிறது’; ‘இந்துமதத்தை கொடூரங்களின் கூடாரம் என்று சொல்கிறது’ (அம்பேத்கர் சொன்னது!!); ‘தேசத்துரோகச் செயல்களில் ஈடுபடுகிறது’ என்று ஸ்மிருதி இரானிக்கு மொட்டைக் கடுதாசி போட்டனர். அ.பெ.ப.வ முன்னணி மாணவர்களும் ரோகித் வெமுலா உள்ளாக்கப்பட்ட இதே உளவியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஆனால் அதே சமயம் ஜனநாயக சக்திகளின் வீச்சான போராட்டமும் தமிழ்நாட்டின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபுமும் புரட்சிகர இயக்கங்களின் இடையறாத தாக்குதலும் இந்தியாவெங்கும் மோடி கும்பலின் இந்துத்துவ பாசிசத்தை அம்பலப்படுத்தி காவிக்கும்பலை பின்வாங்க வைத்தது.

ஆனால், தெலுங்கானாவிலோ தலித் மாணவரை காவுவாங்கி இந்துத்துவம் தன் கோரப்பற்களைக் காட்டியிருக்கிறது. ஸ்மிருதி இரானியின் தலையீடு; அதற்குப் பிந்தைய துணைவேந்தரின் ஒருதலைபட்சமான நடவடிக்கை; தலித் பேராசிரியர்கள் என்று கூறிக்கொண்டவர்களே ஆர்.எஸ்.எஸ் ஊதுகுழலாக மாறிப்போய் மவுனம் சாதித்தது என டிசம்பர் 21 அன்று அம்பேத்கர் மாணவர் அமைப்பின் ஐந்து முன்னணியாளர்களும் பல்கலையில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.

ரோகித் வெமுலாவின் ஆராய்ச்சி உதவித்தொகை கடந்த ஜூலை மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இறுதியில், அவர் பல்கலைக் கழகத்தில் நுழைவதற்கே அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறாக, மத்திய, மாநில, பல்கலைக்கழக, ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத ஒடுக்குமுறை கருவிகள் ஒரு சேர இம்மாணவர்களின் மீது ஏவப்பட்டிருக்கிறது. இறுதியில் பார்ப்பனியம் நிலைநாட்டப்பட்டு மாணவர் ரோகித் வெமுலா தூக்கில் ஏற்றப்பட்டிருக்கிறார்.

சென்னைப் பல்கலைக்கழகத்திலும் டாஸ்மாக்கிற்கு எதிராக போராடிய மாணவர்கள் பல்கலைக்கழகத்தால் நீக்கப்பட்டது நினைவிருக்கலாம். இந்துத்துவத்தின் ஊதுகுழலாக இருக்கும் அ.தி.மு.க கட்சியின் அம்மா அடிவருடி துணைவேந்தர் தாண்டவனும் சென்னை மாணவர்களுக்கு ரோகித் வெமுலா அனுபவித்த அத்துணை கொடுமைகளையும் ஏவத்தான் செய்தார். இதனாலேயே சென்னை மாணவர்கள் ஒருகட்டத்தில் பல்கலைக்கழக கட்டிடத்தில் ஏறி ‘பல்கலைக்கழகம் தங்களை மீண்டும் அனுமதிக்காவிட்டால் உயிர் துறப்பதாக’ பகிரங்கமாக அறிவித்தனர்.

சென்னைப் பல்கலையில் நடக்கவிருந்த படுகொலை ஹைதாராபாத் பல்கலையில் நடந்தேறியிருக்கிறது என்பதில் இருந்து என்ன தெரிகிறது?

மாணவர்கள் அரச பயங்கரவாதத்தை எதிர்க்கும் பணியில் தங்களை சமரசத்திற்கு இடமின்றி ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். இது எதைவிடவும் ஆபத்து என்பதை பாசிஸ்டுகள் உணர்ந்திருக்கின்றனர். மாணவர்களை மூர்க்கமாக ஒடுக்காவிட்டால், போராட்டத்தின் திசைவழி ஆளும்வர்க்க கும்பலை அச்சுறுத்தும் என்பதில் மரண பீதியுற்றிருக்கின்றனர்.

ஆகையால் தான், பொதுவெளியில் தலித் மாணவர்கள் அடையாள அரசியல் என்ற எல்லைக்குள் நின்று பேசுவதை அனுமதிக்கிற ஆளும் வர்க்கம், அதே மாணவர்கள் முசபார்நகர் தாக்குதலை அம்பலப்படுத்துவதில் நிற்கிறபொழுது என்ன செய்கிறது என்பதற்கு ரோகித் வெமுலாவின் தற்கொலை ஒரு வகைமாதிரியாக வந்து நிற்கிறது.

அது மட்டுமல்ல. இசுலாமியர்களுக்கு எதிராக தலித்துகளைத் திரட்டிவிட முடியும் என்று கனவு கண்ட ஆர்.எஸ்.எஸ் கும்பலின் திட்டத்தை சுக்கு நூறாக ஹைதராபாத் பல்கலைக்கழக தலித் மாணவர்கள் நடைமுறையில் உடைத்துக் காட்டியிருக்கின்றனர். இதை ஆளும் இந்துத்துவக் கும்பலால் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதும் ரோகித் வெமுலாவின் கொலையிலிருந்து தெரிய வருகிறது.

ரோகித் வெமுலாவின் குரல் இந்துத்துவப் பாசிசத்தை எதிர்க்கும் கலகக் குரலாக வெளிப்பட்டு இந்துத்துவக் கயிற்றால் அவரது குரல்வளை கடைசியில் இறுக்கப்பட்டிருக்கிறது. ரோகித் வெமுலாவின் பலி நாடெங்கும் கோப அலைகளை கிளப்பி விட்டிருக்கிறது.

ஊர், சேரி என்று பிரித்து வைத்து தலித்துக்களை அடக்கி வைத்து அடிமையாக நடத்திய பார்ப்பனிய மதம் நவீன காலத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க மூலம் அதை தொடர்கிறது. அம்பேத்கர் துதி, தலித்துக்களின் மீதான ஓநாய் இரக்கம்  போன்ற ஊசிப்போன ‘கருணை’யால் மோடி அரசின் உண்மை முகம் தெரியாமல் போய்விடவில்லை. நாடெங்கும் கிளம்பும் மாணவர் போராட்டங்கள் மோடி அரசுக்கு வெறும் தலைவலியாக மட்டும் இருக்காமல் மரண அடியாக மாறவேண்டும்.

இளங்கோ

 நன்றி: வினவு டாட்காம்