“சசிகலா கூட்டத்தின் சொத்துக்களை அரசுடைமை ஆக்க இளைஞர்கள் போராட வேண்டும்!”
நீதிமன்றம் தனது தீர்ப்பை அளித்துவிட்டது. இவ்வளவு பெரிய கொள்ளைக் கூட்டங்களுக்கு புகலிடம் கொடுத்து தனது சொந்த நலனுக்காக தமிழகத்தின் நலனையும், தமிழ் மக்களின் நலனையும் பற்றி கவலைப்படாமல், தான் செய்வதுதான் சரி என ஐந்து ஆண்டுகளாக ஊடகங்களையே கூட அண்டவிடாமல், மக்களை மதுவுக்கு அடிமையாக்கி கொடுங்கோலாட்சி நடத்தியவர்தான் ஜெயலலிதா.
உயிருடன் அவர் இன்று இருந்திருந்தால் அவர்தான் முதல் குற்றவாளி. தேசிய கொடி மரியாதையுடன் மக்களின் பணத்தில் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது.
இப்படித்தான் அரசியலை தொழிலாக செய்துகொண்டு ஆயிரக்கணக்கான கோடிகளையும், மக்களின் வளத்தையும், இயற்கை வளத்தையும் கொள்ளையடித்து, தொண்டர்கள் எனும் பேரில் அடியாட்களை வைத்துக்கொண்டு கொள்ளையடித்தது போதாது என மீண்டும் மீண்டும் நம்மை பல அரசியல் கட்சிகள் அழித்து வருகின்றன.
இப்படிபட்டவர்களை நீதிமன்றத்தால் மட்டும் தண்டிக்க முடியாது. மக்கள்தான் தண்டிக்க வேண்டும். மக்கள்தான் அப்படிப்பட்டவர்களுக்கு சரியான தீர்ப்பைத்தர வேண்டும்.
முதல் கட்ட நடவடிக்கையாக ஜெயலலிதா பின்னணியில் இயங்கி கொள்ளையடித்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இலஞ்ச, ஊழல் அதிகாரிகள் மற்றும் சசிகலா கூட்டத்தின் சொத்துக்கள் அனைத்தையும் கைப்பற்றி இந்த சொத்துக்கள் யாரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டதோ அவர்களுக்கே அளிக்கும் வகையில் தமிழக மக்களின் பொது சொத்தாக மாற்றப்பட வேண்டும்.
அப்போதுதான் இனி வருங்காலத்திலாவது அரசியலுக்குள் நுழைபவர்களுக்கு மக்களின் மீது உண்மையான பயம் இருக்கும். இனி, இத்தமிழகத்தின் இளைஞர்களும், மாணவர்களும் இதைத்தான் அடுத்தகட்ட போராட்டமாக முன்னெடுக்க வேண்டும்.
மக்களின் வாக்குரிமையை விலைக்கு வாங்கி அதிகாரத்தில் அமர்ந்து, பணம் ஒன்றை கொள்ளையடிப்பது மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு கடந்தகால தமிழக அரசியல் நீர், மண், காற்று, என அனைத்தையும் நாசமாக்கி அடுத்த தலைமுறைக்கு நோய்களை மட்டுமே மீதி வைத்துவிட்டு, நேர்மையற்ற ஊழல் மலிந்த அரசியல்வாதிகளை உருவாக்கி வைத்துவிட்டது.
இனியாவது நாம் விழித்துக்கொள்வோமா?
.
தங்கர் பச்சான்