பாஜகவுடன் கூட்டு சேர்ந்ததால் சிறுபான்மையினர் வாக்குகளை இழந்து விட்டோம்”: அதிமுக அமைச்சர் ஓப்பன் டாக்!
மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் நடைபெற்றது. இக்கூட்ட்த்தில் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி., பாரதிய ஜனதா கட்சி., தே.மு.தி.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தோம். இந்த தேர்தலில் நாங்கள் தோல்வி அடைந்தோம் என்பதை ஒப்புக்கொள்கிறோம்.
இந்த தேர்தலில் தி.மு.க.வுக்காக யாரும் வாக்களிக்கவில்லை. மத்தியில் யார் ஆள வேண்டும் என்று தமிழக மக்கள் முடிவு செய்திருக்கிறார்கள். அதே மக்கள் தமிழகத்தில் அ.தி.மு.க.தான் ஆள வேண்டும் என்றும் முடிவு செய்திருக்கிறார்கள்.
வெளிப்படையாக சொல்கிறேன், யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. நாங்கள் இந்த தேர்தலில் தவறான கூட்டணி அமைத்ததன் விளைவாக ஒரு சமுதாயத்தின் வாக்குகளை – குறிப்பாக சிறுபான்மையினர் வாக்குகளை – இழந்து விட்டோம்.
இது மோடிக்கு எதிரான வாக்குகள் தான். இதில் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்து விட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 40 வாக்குகள் சிறுபான்மையினர் வாக்குகள் உள்ளன. அதனை அப்படியே இழந்து விட்டோம். இதனால் வெற்றி அவர்களுக்கு சாதகமாகி விட்டது.
கூட்டணியில் செய்த தவறை திருத்திக் கொள்கிறோம். அ.தி.மு.க. எப்போதும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருக்கும்.
இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.