“தமிழக காவல் துறையை மத்திய உள்துறை அமைச்சகம் இயக்குகிறது?” – இரா.முத்தரசன்

தமிழக காவல்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தால் இயக்கப்படுவதாக சந்தேகம் எழுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:-

சென்னை மாநகரக் கூடுதல் ஆணையர் சேஷசாயி, துணை ஆணையர்கள் பாலகிருஷ்ணன், சுதாகர் ஆகியோர் சென்னையில் கடந்த 25-ம் தேதி பத்திரிகையர்களை சந்தித்து தெரிவித்துள்ள கருத்துகள் அதிர்ச்சியையும், ஆழமான ஐயப்பாடுகளையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன.

அமைதியாக நடந்த போராட்டம் அமைதியாக முடிந்து விடாமல் வன்முறையைத் தோற்றுவித்த காவல்துறை, அந்தக் குற்றச்சாட்டிலிருந்து திசை திருப்பித் தப்பித்துக் கொள்ள முயற்சிப்பதாகத் தெரிகிறது.

“சில சமூக விரோத இயக்கங்களைச் சோந்தவர்கள், மாணவர்களின் கூட்டத்திற்குள் நுழைந்து விட்டனர். இதற்கான ஆடியோ, வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன” என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆனால், எந்தெந்த இயக்கங்கள் சமூக விரோத இயக்கங்கள் என்பதும், எந்த ஆதாரங்களின் அடிப்படையில் அடையாளாம் கண்டு வரையறுக்கப்பட்டது என்ற விபரமும் தெரிவிக்கப்படவில்லை.

அதேபோல், மாணவர்களின் கூட்டத்திற்குள் நுழைந்து விட்டனர் என்று உறுதிபடத் தெரிவிக்கும் காவல்துறை, யார் யார் நுழைந்தார்கள் என்பதையோ, எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இது உறுதிப்படுத்தப்பட்டது என்பதையோ தெரிவிக்கவில்லை.

நடுக்குப்பத்தில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் 6 சமூக விரோத அமைப்பை சார்ந்தவர்கள் தான் என்று காவல்துறையினர் தெரிவித்திருப்பது ஆதாரங்களின் அடிப்படையிலா, அல்லது தங்கள் அனுமானங்களின் அடிப்படையிலா என்பதும் விளக்கப்படவில்லை.

எந்தவித ஆதாரங்களும் இல்லாமல், அப்பாவி மக்கள் மீது வழக்குகளைப் பின்னி தங்கள் நோக்கத்திற்குத் தக்கபடி வாக்குமூலங்களைப் பெறுவதற்கான முயற்சி இது ஆகும்.

மேலும், குடியரசு தினவிழாவை சீர்குலைக்க முயன்றவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வோம் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டுப் போராட்டங்களை ஒட்டி கைது செய்யப்பட்டவர்களும், கைது செய்யப்படவுள்ளவர்களும் எந்த சட்டத்தின் கீழ் சிக்க வைக்கப்படுவார்கள் என்பதை இதன் மூலம் யூகித்துக்கொள்ள முடியும்.

தமிழக காவல்துறை, மத்திய உள்துறை அமைச்சகத்தால் இயக்கப்படுவதாக சந்தேகம் எழுகிறது.

தோழர் என அழைத்து யரேனும் உங்களிடம் பேசினால் தொடர்பைத் துண்டியுங்கள் என்று கோவை காவல்துறை ஆணையர் கட்டளையிட்டு;ள்ளார். தோழர், தோழமை என்ற சொற்கள் சங்க இலக்கியங்களில், கம்ப ராமாயணத்தில் கையாளப்பட்டுள்ளதே, எப்படி தமிழகம் தன் தொப்புள்கொடித் தொடர்பைத் துண்டித்துக் கொள்ள முடியும்?

தந்தை பெரியார் தனது பொதுக் கூட்ட உரையை, தோழர்களே என்று தான் விளித்துரைத்துக் தொடங்கினார். பெரியாரோடு எங்கள் உறவை துண்டித்துக்கொள்ள முடியுமா? தமிழ்ப் பண்பாட்டு மூலங்களுக்குள் காவல்துறை மூக்கை நுழைப்பது அத்துமீறலாகும்.

தமிழக காவல்துறை அதிகாரிகளின் வரம்பற்ற அறிக்கைகளும், பேட்டிகளும் கண்டனத்திற்குரியது. இந்நிலையில் தமிழகத்திலுள்ள இடதுசாரி ஜனநாயக சக்திகளும், தேசபக்தர்களும், மதச்சார்பற்ற சக்திகளும் இணைந்து நின்று, அரசியல் சட்ட அடிப்படைகளைக் காப்பாற்ற போராடுமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவி அழைக்கிறது.

இவ்வாறு முத்தரசன் கூறியுள்ளார்.