சென்னை நோக்கி வந்த கோரமண்டல் ரயில் பயங்கர விபத்து: 294க்கும் மேற்பட்டோர் பலி; 1000 பேர் படுகாயம்
ஒடிசாவில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 2 பயணிகள் ரயில், ஒரு சரக்கு ரயில் மோதிய பயங்கர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 294 ஆக அதிகரித்துள்ளது. 1,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் இருந்து நேற்று (ஜூன் 2) பிற்பகல் 3.20 மணிக்கு புறப்பட்ட ஷாலிமார் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், இரவு 7 மணி அளவில் ஒடிசாவின் பாலசோர் – பத்ரக் ரயில் நிலையங்கள் இடையே பாஹாநாகா பஜார் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது, பிரதான தண்டவாளத்தில் இருந்து இணைப்பு தண்டவாளத்துக்கு ரயில் மாறியுள்ளது. இணைப்பு தண்டவாளத்தில் ஏற்கெனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்குரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் சரக்கு ரயிலின் 2 பெட்டிகளை துளைத்து 3-வது பெட்டியின் மீது பயணிகள் ரயிலின் இன்ஜின் ஏறியது. மோதிய வேகத்தில், கோரமண்டல் ரயிலின் 21 பெட்டிகள் தடம் புரண்டு, 3-வது தண்டவாளத்தின் குறுக்கே நின்றன.
அதே நேரம், பெங்களூரூவில் இருந்து ஹவுரா செல்லும் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் எதிர்திசையில் அதே பகுதியில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது, தண்டவாளத்தின் குறுக்கே நின்றிருந்த கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது பெங்களூரு – ஹவுரா ரயில் பயங்கரமாக மோதிதடம் புரண்டது. இந்த விபத்தில் கோரமண்டல் ரயிலின் 3 பெட்டிகள், ஹவுரா ரயிலின் 2 பெட்டிகள் முற்றிலுமாக உருக்குலைந்தன.
இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது. ராணுவம், விமானப் படை, தேசிய, மாநில பேரிடர் மீட்பு படைகள், தீயணைப்பு படை என பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு 200 ஆம்புலன்ஸ்கள், 100-க்கும் மேற்பட்ட பஸ்கள், வாகனங்கள் மூலம் கோபால்பூர், காந்தபாரா, பாலசோர், சோரோ ஆகிய நகரங்களில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தில் கோரமண்டல் ரயில் அதிக சேதம் அடைந்துள்ளது. ஹவுரா ரயிலில் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்தவர்கள் நல்வாய்ப்பாக பாதிப்பின்றி தப்பினர்.
இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்துள்ளனர். 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 650-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு 500-ஐ தாண்டும் என்று அஞ்சப்படுகிறது. கடந்த 42 ஆண்டுகளில் ஏற்பட்ட பெரிய ரயில் விபத்துகளில் இது ஒன்றாக இருக்கும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.