கான்ஜுரிங் கண்ணப்பன் – விமர்சனம்
நடிப்பு: சதீஷ், ரெஜினா கேசன்ட்ரா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், நாசர், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, நமோ நாராயணா, ஆதித்யா கதிர், எல்லி அவ்ர்ராம் மற்றும் பலர்
இயக்கம்: செல்வின் ராஜ் சேவியர்
ஒளிப்பதிவு: எஸ்.யுவா
படத்தொகுப்பு: பிரதீப் இ.ராகவ்
இசை: யுவன் சங்கர் ராஜா
தயாரிப்பு: ‘ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட்’ கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ்
பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்
கேம் டிசைனராக வேண்டும் என்ற ஆர்வத்தில் வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர் கண்ணப்பன் (சதீஷ்). அவருக்கு, நீண்ட நாட்களாக பூட்டிக்கிடக்கும் அவரது வீட்டுக் கிணற்றிலிருந்து, இறகுகள் நிறைந்த வினோதமான பொருள் ஒன்று கிடைக்கிறது. அது சூனியம் செய்து வைக்கப்பட்டிருக்கும் ‘ட்ரீம் கேட்ச்சர்’ என்று தெரியாத கண்ணப்பன், தற்செயலாக அதன் ஒரு இறகை பறித்துவிடுகிறார். அப்போதிருந்து அவர் தூங்கும்போதெல்லாம் கனவில் ஒரு பாழடைந்த பங்களாவில் பேய்களால் விரட்டப்படுகிறார். அங்கு உயிர் போனால் நிஜ உலகிலும் உயிர் போகும் என்கிற ஆபத்தும் நிலவுகிறது.
இதன்பின் கண்ணப்பனின் குடும்பத்தினர், கண்ணப்பனுக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் ஜானி (ரெடின் கிங்ஸ்லி) என அனைவரும் அந்த ‘ட்ரீம் கேட்ச்சரின்’ இறகை அடுத்தடுத்து பறித்துவிட, எல்லோரும் கனவில் ஒன்றாக பாழடைந்த பங்களாவுக்குப் போய் பேய்களிடம் மாட்டிக்கொள்கிறார்கள்.
பேய்கள் இவர்களை எப்படியெல்லாம் இம்சிக்கின்றன? பேய்களை இவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்? பயங்கர விசித்திரக் கனவிலிருந்து மீண்டார்களா? என்பன போன்ற கேள்விகளுக்கான விடையை ஃபேன்டஸி கலந்த காமெடியாகக் கொடுத்திருக்கிறது ‘கான்சூரிங் கண்ணப்பன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
‘கண்ணப்பன்’ என்ற கதாநாயக கதாபாத்திரத்தில் சதீஷ் நடித்திருக்கிறார். கனவில் குழம்புவது, பேய்களைக் கண்டு அலறுவது போன்ற சீரியஸான காட்சிகளில் சதீஷின் நடிப்பு நிறைவாக இருக்கிறது.
காமெடி காட்சிகளில் கொஞ்சம் சிரிக்கவும் வைக்கிறார்.
பேய் ஓட்டுபவராக ஒரு சில காட்சிகளில் வரும் ரெஜினா கேசன்ட்ரா தனக்குக் கொடுக்கப்பட்ட பணியை செய்துள்ளார். பேயாக வரும் நடிகை எல்லி அவ்ர்ராம் நடிப்பு ஓகே.
‘லட்சுமி’ என்ற வழக்கமான அம்மா கதாபாத்திரத்தில் வருகிறார் சரண்யா பொன்வண்ணன். யூடியூபராக அவர் செய்யும் அலப்பறைகளை ரசிக்க முடிகிறது.
ஆனந்த்ராஜ் நடிப்பு படத்திற்கு பலம். ‘டாக்டர் ஜானி’யாக வரும் ரெடின் கிங்ஸ்லி சில இடங்களில் நம்மை சிரிக்க வைக்கிறார். ஆனால், விடிவி கணேஷ், நமோ நாராயணா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட ஏனையோரும் சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார்கள். ஒர்க்-அவுட் ஆகவில்லை.
பேய் ஓட்டும் நிபுணர் ‘எக்ஸார்சிஸ்ட் ஏழுமலை’யாக வருகிறார் நாசர். இவரது கதாபாத்திரம் செழுமையாக வடிவமைக்கப்படாததால், விழலுக்கு இறைத்த நீர்!
வழக்கமான பேய்க்கதைகளிலிருந்து முற்றிலும் வித்தியாசமான ‘ட்ரீம் கேட்ச்சர்’ என்ற புதுமையான அம்சத்தை உள்ளடக்கிய கதைக்கருவை உருவாக்கியதற்காகவும், படத்தின் முதல் பாதியை விறுவிறுப்பாக நகர்த்தியதற்காகவும் அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியரை பாராட்டலாம். ஆனால், படத்தின் இரண்டாம் பாதிக்கு போதுமான அளவு மெனக்கெடாமல், சுவாரஸ்யம் குறைவாக அமைத்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. நகைச்சுவையையும், சஸ்பென்ஸையும் இன்னும் கொஞ்சம் திறமையாக பயன்படுத்தியிருந்தால், படத்தை சற்று கூடுதலாக ரசித்திருக்கலாம்.
ஹாரர் திரில்லருக்குத் தேவையான பின்னணி இசையை சிறப்பாகத் தந்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. எஸ்.யுவாவின் ஒளிப்பதிவு, பிரதீப் இ.ராகவ்வின் படத்தொகுப்பு, மோகன மகேந்திரனின் கலை இயக்கம் ஆகியவை இயக்குநருக்கு பக்கபலமாக இருந்துள்ளன.
‘கான்ஜுரிங் கண்ணப்பன்’ – புதுமையான கான்செப்ட்டுக்காக பார்க்கலாம்!