”ஒன்றிய அமைச்சரவையில் ஒரு முஸ்லிம்கூட இல்லாதது நாட்டின் மதிப்பை பாதிக்கும்!”: காங். மூத்த தலைவர்
“நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அமைச்சரவையில் ஒரு இஸ்லாமியர்கூட இல்லாதது நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்” என்று உத்தராகண்ட் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒன்றிய அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் முகமும் இல்லை. இது உலக அளவில் நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். உலகமே ஒரு குடும்பம் என கூறக் கூடியவர்கள் நாம். நாட்டின் மக்கள் தொகையில் பெரும் பகுதியைக் கொண்டுள்ள ஒரு பிரிவினரை இந்த அமைப்பிலிருந்து விலக்கி வைப்பது நாட்டின் மரியாதையை பாதிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
கபில் சிபில்:
”கடந்த ஆட்சியில் என்ன நடந்ததோ அது மீண்டும் நடக்காமல் இருக்க வேண்டும்” என்று முன்னாள் மத்திய அமைச்சரும் சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எனது வாழ்த்துகள். நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராகி உள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள். நல்ல அரசாங்கம் அமைய வேண்டும் என்பதே ஒரு குடிமகனாக எனது விருப்பம். கடந்த ஆட்சியில் என்ன நடந்ததோ, அது மீண்டும் நடக்கக் கூடாது. எதிர்க்கட்சிகளை விரோதியாக பார்க்கக் கூடாது. கோபமும் வெறுப்பும் இருக்கக்கூடாது” என தெரிவித்துள்ளார்.