14 ஊடகவியலாளர்களின் நிகழ்ச்சி புறக்கணிப்பு: காங்கிரஸ் விளக்கம்
இண்டியா கூட்டணிக்கு எதிராக சில ஊடகவியலாளர்கள் செயல்படுவதாக அக்கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் குற்றம்சாட்டி இருந்தன. இதன் தொடர்ச்சியாக, அதிதி தியாகி, அமன் சோப்ரா, அமிஷ் தேவ்கான், ஆனந்த் நரசிம்மன், அர்னாப் கோஸ்வாமி, அஷோக் ஸ்ரீவத்சவ், சித்ரா திருப்பதி, கவுரவ் சவந்த், நவிகா குமார், பிராச்சி பராஷர், ரூபிகா லியாகத், சிவ் அரூர், சுதிர் சவுத்ரி ஆகியோர் நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இண்டியா கூட்டணி சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனை பாஜக கடுமையாக விமர்சித்தது. அவசரநிலை பிரகடனத்தின்போது ஊடகங்களை நசுக்கிய காங்கிரஸ் கட்சி, இன்னமும் அதே மனநிலையில்தான் உள்ளது என அக்கட்சி குற்றம் சாட்டியது.
இதனை மறுத்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு தலைவர் பவன் கெரா, “நாங்கள் அவர்களை தடை செய்யவில்லை. கருப்புப் பட்டியலிலும் வைக்கவில்லை. இது ஓர் ஒத்துழையாமை இயக்கம். சமூகத்தில் வெறுப்பைப் பரப்புபவர்கள் யாராக இருந்தாலும் நாங்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம். வெறுப்பைப் பரப்பும் அவர்களை எங்களால் தடுக்க முடியாது. நீங்கள் வெறுப்பைப் பரப்ப விரும்பினால், அதனைச் செய்யுங்கள். அதற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறது. அந்தக் குற்றத்தில் ஈடுபடாமல் இருப்பதற்கான சுதந்திரம் எங்களுக்கும் இருக்கிறது.
அவர்கள் எங்கள் எதிரிகள் அல்ல. ஊடக நண்பர்களை நாங்கள் வெறுப்பதில்லை. அவர்களுக்கு நெருக்கடி ஏதும் இருக்கலாம். எதுவும் நிரந்தரமல்ல. அவர்கள் செய்யும் செயல் நாட்டுக்கு, சமூகத்துக்கு நல்லது அல்ல என்பதை அவர்கள் நாளை உணர்ந்தால், அவர்களோடு நாங்களும் இருப்போம். அவர்களின் நிகழ்ச்சிகளில் மீண்டும் பங்கேற்போம். எனவே, இதனை நாங்கள் அவர்களை தடை செய்துவிட்டதாகக் கருத வேண்டாம்.
சிலர் சாலையில் குப்பைகளைக் கொட்டினால், மாற்றுப் பாதையை தேர்ந்தெடுப்பதற்கான உரிமை எங்களுக்கு இருக்கிறது. அந்தச் சுதந்திரத்தையே நாங்கள் தற்போது கடைப்பிடிக்கிறோம். எங்கள் பாதையை மாற்றிக்கொள்ள இண்டியா கூட்டணி முடிவெடுத்திருக்கிறது. ஜனநாயகத்தின் பாதுகாவலர் ஊடகங்கள். அரசின் தவறுகளை சரி செய்யக்கூடியதாக ஊடகங்கள் செயல்பட வேண்டும். மேலும், எதிர்க்கட்சிகளின் கருத்துகளை ஊடகங்கள் ஆதரிக்க வேண்டும். ஆனால், ஊடகங்களில் உள்ள சிலர் அரசுக்கு ஆதரவாக இருந்து கொண்டு எதிர்க்கட்சிகளை அழிக்கத் துடிக்கிறார்கள். நரேந்திர மோடி அரசின் ஆதரவோடு நடக்கும் இதழியல் இது. இதன் காரணமாகவே, இண்டியா கூட்டணி இந்த முடிவை எடுத்துள்ளது” என்று அவர் தெரிவித்தார்.