பிரதமர் பதவியை தொடர்ந்து அசிங்கப்படுத்தி வரும் நரேந்திர மோடிக்கு வன்மையான கண்டனங்கள்!
பிரதமர் மோடி முந்தா நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் பிரச்சார மேடையில் நேரடியாக முஸ்லிம்களை அவமதித்துப் பேசி இருக்கிறார். ’அவர்கள் ஊடுருவாளர்கள். அதிகம் பிள்ளை பெறுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்துக்களின் சொத்துகளை எல்லாம் ஆட்டையைப் போட்டு அவர்களுக்குக் கொடுத்து விடுவார்கள்.’
முஸ்லிம்களுக்கு சொத்தை எல்லாம் பிரித்துக் கொடுத்து விடுவோம் என்று காங்கிரஸ் எங்குமே சொல்லவில்லை. இதில் இன்னொன்றையும் மோடி குறிப்பிடுகிறார். இந்தியாவின் வளங்களில் முஸ்லிம்களுக்குத்தான் முன்னுரிமை என்று மன்மோகன் சிங் சொன்னதாக சொல்கிறார். மன்மோகன் சிங் அப்படி எங்குமே பேசியதாகவும் தகவல் இல்லை. அது ஒரு வாட்சப் fake news. ஆனால் பிரதமர் பதவியில் இருப்பவர் கொஞ்சமும் யோசிக்காமல் அதையே செய்தியாக அடித்து விடுகிறார்.
உண்மையில் இந்தியாவின் வளங்கள் யாரிடம் இருக்கின்றன?
ஜோதிராவ் ஃபுலே பல்கலைக்கழகம் மற்றும் ஜேஎன்யூ இணைந்து சாதி ரீதியாகப் பொருளாதார நிலை குறித்து ஒரு சர்வே நடத்தியது. ஒவ்வொரு சமூகமும் தேசத்தின் மொத்த செல்வத்தில் எவ்வளவு தங்கள் வசம் வைத்திருக்கிறார்கள் என்று இந்த அறிக்கை கணக்கிடுகிறது. அதன்படி,
* முன்னேறிய சாதி இந்துக்கள்: 42%
* இதர பிற்படுத்தப்பட்ட சாதி இந்துக்கள்: 30.7%
* இதர சிறு குறு மதத்தினர்: 9%
* முஸ்லிம்கள்: 8%
* பட்டியலினத்தவர்: 7.6%
* பழங்குடியினர்: 3.7%
(இதர சிறு குறு மதத்தினர் கேட்டகரியில் சீக்கிய, பௌத்த, ஜெயின் மதத்தினர் வருகிறார்கள்.)
அதாவது சாதி இந்துக்கள் மட்டுமே இந்தியாவின் செல்வங்களில் சுமார் 73%ஐ தங்களிடம் வைத்துக் கொண்டு மேலும் மேலும் ஆட்டையை போட்டுக் கொண்டு, இதெல்லாம் பத்தாது என்று ‘அய்யய்யோ என் சொத்தை எல்லாம் கொண்டு போகப் போறான்!’ என்று ஒப்பாரியும் வைக்கிறார் பிரதமர்.
அடுத்ததாக அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வது குறித்து பேசியது இன்னொரு அவலம். காரணம், இந்தியாவில் அனைத்து மக்கள் தொகை வளர்ச்சியும் குறைந்து கொண்டுதான் வருகிறது. Pew Research Centre நடத்திய ஒரு ஆய்வின்படி 1951ல் இந்துக்களின் வருடாந்திர மக்கள் தொகை அதிகரிப்பு 20.7 சதவிகிதமாக இருந்தது 2011ல் 16.7 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. போலவே 1951ல் முஸ்லிம்களின் வருடாந்திர அதிகரிப்பு 32.7 சதவிகிதமாக இருந்தது 24.7 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. [3]
ஒரு சமூகத்தில் ஒரு பெண் சராசரியாக எவ்வளவு குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார் என்பதை Total Fertility Rate (TFR) என்று கணக்கிடுகிறார்கள். மதவாரியாக TFR கணக்கை இங்கே கொடுத்திருக்கிறேன்:
மதம் 1992 2015
முஸ்லிம் 4.4 2.6
இந்து 3.3 2.1
கிறித்துவர் 2.9 2.0
பௌத்தர் 2.9 1.7
சீக்கியர் 2.4 1.6
ஜெயின் 2.4 1.2
அதாவது இந்து மற்றும் முஸ்லிம் இருவரும் தங்கள் TFRஐ குறைத்துக் கொண்டே வந்திருக்கிறார்கள். இருவருக்கும் இடையில் 2015ல் 0.5 புள்ளிகள்தான் வித்தியாசம் இருந்திருக்கிறது. குறைந்து வரும் விகிதத்தைப் பார்த்தால் 2021 சென்சஸ்சில் இரு மதங்களும் ஒரே புள்ளியை தொட்டு விட்டிருக்கும் சாத்தியம் அதிகம். அடுத்த சென்சஸ் எடுக்கப்படும் போது நமக்கு அது தெரிய வரும்.
சரி, 0.5தான் வித்தியாசம் என்றாலும் முஸ்லிம் விகிதம் அதிகமாகத்தானே இருக்கிறது என்று வாதிடலாம். அதைப் புரிந்து கொள்ள இதே TFR ஐ வேறு ஒரு கோணத்தில் பார்க்க வேண்டும். அதாவது, மதவாரியாக பார்த்தோம். இப்போது மாநில வாரியாக பார்க்கலாமா?
மேலே இந்துக்கள் 2.1 என்று குறிப்பிட்டது இந்தியா முழுமைக்கும் சேர்த்து. ஆனால் மாநில வாரியாக பார்த்தால் அதீத வித்தியாசங்கள் இருக்கின்றன. [5]
* பீகார் – 3.2
* உபி – 3
* மபி – 2.7
* ராஜஸ்தான் – 2.6
அதாவது மேலே குறிப்பிட்ட இந்த மாநிலங்களின் TFR இந்திய முஸ்லிம்களின் TFRஐ விட அதிகம். மோடி பிரச்சாரம் செய்த ராஜஸ்தான் மாநிலத்தின் TFRஉம் இந்திய முஸ்லிம்களின் TFRஉம் ஒரே பாயிண்ட்டில்தான் இருக்கின்றன.
குறைவான TFR உள்ள சில மாநிலங்களின் பட்டியலை பார்க்கலாமா:
* கேரளா – 1.7
* தமிழ்நாடு – 1.6
* கர்நாடகா – 1.7
* மேற்கு வங்கம் – 1.6
இப்போது யோசித்துப் பாருங்கள்: கேரளா அல்லது தமிழ் நாட்டுத் தலைவர் யாராவது மேடை ஏறி ‘இந்த வடக்கன்ஸ் இருக்கானுங்களே, எழவு, வதவதன்னு பெத்துப் போட்டுக்கிட்டே இருக்கானுங்க. எல்லா வரிப்பணமும் அவனுங்களுக்குத்தான் போகுது!’ என்று பேசினால் எப்படி இருக்கும்?
அது புள்ளிவிபரப்படி துல்லியமான பேச்சாக இருக்கும். ஆனால் அப்படிப் பேசினால் அது எப்பேர்ப்பட்ட எதிர்வினைகளை உருவாக்கும் என்று யோசித்துப் பாருங்கள்? மோடியும் அவரது சகாக்களும் எந்த அளவுக்கு அதனைக் கொண்டு போவார்கள்? அப்படி எந்த தென்னகத் தலைவரும் பேசவில்லை.
ஆனால் மோடியோ மேடையில் முஸ்லிம்கள் பற்றி கூசாமல் பொய்கள் சொல்கிறார். மத ரீதியாக கேவலமாகப் பேசுகிறார். அவமதிக்கிறார். அவர் ராஜஸ்தானில் பேசிய பேச்சு எல்லா வகைகளிலும் நடவடிக்கைக்கு ஏற்ற பேச்சு. அந்த வீடியோவை மட்டுமே வைத்து தேர்தல் ஆணையம் அவரை முழுத் தேர்தல் முடியும் வரையும் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று தடை செய்ய இயலும். அந்த அளவுக்கு வன்மம் நிறைந்த பேச்சு அது. ஆனால் தேர்தல் ஆணையம் கிணற்றில் விழுந்த கல் போல அமைதியாக இருக்கிறது.
பிரதமர் பதவியை தொடர்ந்து அசிங்கப்படுத்தி வரும் நரேந்திர மோடிக்கு வன்மையான கண்டனங்கள். மோடி எனது பிரதமர் என்பதற்காக நான் வெட்கப்படுகிறேன். 2014ல் அவரை ஆதரித்து எழுதியதற்காக அடிக்கடி வருத்தப்பட்டிருக்கிறேன். நேற்று அந்த ராஜஸ்தான் வீடியோவைப் பார்த்தபோது இன்னும் வெட்கினேன்.
இந்த மதவெறிக்கும், வெறுப்புக்கும் 2024 ஒரு முடிவைக் கொண்டு வரும் என்று ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
-ஸ்ரீதர் சுப்ரமணியம்