”கோ பேக் மோடி” என பதிவிட்ட ந்டிகை ஓவியா மீது போலீசில் பாஜக புகார்
நரேந்திர மோடி தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் எதிராக இருப்பதாக பெரும்பாலான தமிழக மக்கள் கருதுகிறார்கள். இதனால் ஒவ்வொரு முறை மோடி தமிழகம் வரும்போதெல்லாம் ‘கோ பேக் மோடி’ என்று நெட்டிசன்கள் போடும் பதிவு ட்ரெண்டாவது வழக்கமாக இருக்கிறது. இதன்படி, மோடி நேற்று சென்னை வருவதை ஒட்டி ‘கோ பேக் மோடி’ ஹேஷ்டேக் நெட்டிசன்களால் ட்விட்டரில் பதிவு செய்யப்பட்டது.
இவ்விதம் பதிவு செய்த பல லட்சம் பேரில் பிரபல நடிகை ஓவியாவும் ஒருவர். அவர் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘கோ பேக் மோடி’ என்று பதிவு செய்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியாவின் ட்விட்டர் பக்கத்தை 5 லட்சத்து 51 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர். அவரது ‘கோ பேக் மோடி’ பதிவை 19.8 ஆயிரம் பேர் ரீ ட்வீட் செய்துள்ளனர். 58.7 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.
ஓவியாவின் இந்த ட்வீட் குறித்து ஆத்திரமடைந்த பாஜகவின் வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் என்பவர் சிபிஐசிஐடி அலுவலகத்தின் சைபர் செல்லுக்கு ஒரு புகாரை அனுப்பியுள்ளார். அதில், பிரதமர் வருகை குறித்துக் குறிப்பிட்டு, பிரதமரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதத்தில், சமூகத்தில் பதற்றம் ஏற்படுத்தும் விதத்தில் நடிகை ஓவியா ‘கோ பேக் மோடி’ எனப் பதிவிட்டுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓவியா மீது 124 (எ) (தேசதுரோக வழக்கு), 153 (இரு சமூகங்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்துதல்), 294 (அவதூறு) 69 (எ) ஐடி பிரிவு சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் பதிவு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.