மேனேஜரால் மோசம்போன சிரிப்பு நடிகர்: ஹோட்டலில் வேலை பார்க்கும் பரிதாபம்!
முதல் படமான ‘ரேணிகுண்டா’ படத்திலேயே அனைவரது கவனத்தையும் கவர்ந்த நகைச்சுவை நடிகர் – தீப்பெட்டி கணேசன். ‘ரேணிகுண்டா’வை தொடர்ந்து ’பில்லா-2’, ‘தென்மேற்கு பருவகாற்று’, ‘ஆயிரம் விளக்கு’, ‘நீர்ப்பறவை’, ‘சொகுசுப்பேருந்து’, ‘வேல்முருகன் போர்வெல்ஸ்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து, முன்னணி நகைச்சுவை நடிகராக வேகமாக முன்னேறிக்கொண்டு வந்தவர்.
சமீபகாலமாக அவரை எந்தப் படத்திலும் காணவில்லை. எங்கே போனார் தீப்பெட்டி கணேசன் என்று பார்த்தால், சென்னை கே.கே.நகரில் கவிஞர் ஜெயங்கொண்டான் நடத்திவரும் ‘ஜெயம் ஹோட்டலி’ல் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். ஹோட்டல் சப்ளையராக அவரை அங்கு பார்க்கும் அனைவருக்குமே அதிர்ச்சி…
என்னதான் நடந்தது தீப்பெட்டி கணேசனுக்கு…?
’’மதுரை ஜெய்ஹிந்த்புரம்ணே நமக்கு. அம்மா, அப்பா, அண்ணன், நான்னு மொத்தம் நாலு பேர் வீட்ல. ஒம்பதாப்புக்கு மேல படிக்கப் புடிக்காம பெயிண்ட்டிங் வேலை பார்த்துட்டு இருந்தேன். லோக்கல் சேனல்ல நடிக்க ஆள் தேவைன்னு வந்த விளம்பரம் பார்த்துட்டுப் போனப்ப தான் ‘ரேணிகுண்டா’ பட வாய்ப்பு கொடுத்தார் இயக்குனர் பன்னீர்செல்வம் சார். அவர் தான் சாதாரண கணேசனாக இருந்த என்னை ‘தீப்பெட்டி’ கணேசன் ஆக்கினார். ‘நீ எதைச் சொன்னாலும் டக்குனு புடிச்சுக்குற. அதான் இந்தப் பேரு’ன்னு காரணம் சொன்னார்.
“அஜீத் சார் கூட ‘பில்லா 2’, சிம்பு சார் கூட ‘வேட்டை மன்னன்’, விக்ரம் சார் கூட ‘ராஜபாட்டை’னு நிறைய படங்கள்ல நடிச்சுட்டேன்.. பெரிய இயக்குநர்கள், பெரிய பேனர்னு நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்தது.
’’இப்போ நிலவரம் சரியில்லண்ணே. எல்லாத்துக்கும் காரணம் என்னோட மேனேஜர் தான். அவரை முழுசா நம்பினேன். ஆனா, பெரிய மோசம் பண்ணிட்டாரு. நான் வாங்கிட்டு இருந்த சம்பளத்தை விட அவரே ஓவரா ஏத்தி, அதுல நிறைய பணத்தை எனக்குத் தெரியாமலே மோசடி செய்துட்டாரு. நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்டாருண்ணே. என் சம்பளத்தை அவர் தாறுமாறா ஏத்திவிட்டதால, வந்துகிட்டு இருந்த வாய்ப்புகள் குறைய ஆரம்பிச்சிடுச்சு. சரி சும்மா இருக்குற நேரத்துல நண்போரோட ஹோட்டல்ல இருக்கலாமேனு இங்க அவருக்கு உதவியா இருக்கேன்.
“உண்மையிலேயே நான் அதிகமா சம்பாதிக்கணும்னு ஆசைப்பட்டதில்ல. வர்ற வாய்ப்பை பயன்படுத்தி நல்ல பேர் எடுத்து நிலையான இடத்துக்கு வரணும்னு திட்டமிட்டு இருந்தேன்… ஆனா முதலுக்கே மோசம் செய்துட்டாரு அந்த மேனேஜர். நான் எப்போதும் சம்பளம் இவ்வளவு வேணும்… அவ்வளவு வேணும்னு டிமாண்ட் பண்ணினதே இல்ல. எவ்வளவு கொடுக்குறாங்களோ, அந்த சம்பளத்துக்கு நடித்துக் கொடுக்க தயாராகவே இருக்கேன். இப்போ அந்த மோசடி மேனேஜரையும் நீக்கிட்டேன். தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் இனி என்னை நேரடியாவே தொடர்பு கொள்ளலாம். எனக்கு கைகொடுத்த திரையுலகம் மீண்டும் வாழ வைக்கும்னு நம்புறேன்…” என்ற தீப்பெட்டி கணேசனின் குரல் தழுதழுக்கிறது. பார்க்க பாவமாக இருக்கிறது…
தமிழ் திரையுலகில் தான் எத்தனை எத்தனை அரக்கர்கள்…!