கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத்திலும் தொடர்ந்த விக்ரமின் ‘கோப்ரா’ கொண்டாட்டம்!
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமாரின் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் கதையின் நாயகனாக நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘கோப்ரா’. ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் ‘கோப்ரா’ திரைப்படத்தை, தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. கணித புதிர்களை மையப்படுத்தி உருவாகி இருக்கும் ‘கோப்ரா’ திரைப்படத்தை பற்றி ரசிகர்களிடத்தில் ஆர்வத்தை தூண்டும் வகையில் அப்பட நாயகன் விக்ரம் தலைமையில் பட குழுவினர் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.
திருச்சி, மதுரை, கோவை, சென்னை ஆகிய இடங்களில் ரசிகர்களை சந்தித்த கோப்ரா படக்குழுவினர், கேரள தேசத்து ரசிகர்களை சந்திக்கும் வகையில் கொச்சிக்கு பயணம் செய்தனர். கொச்சி விமான நிலையத்தில் படக்குழுவினருக்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டு உற்சாகமான வரவேற்பளித்தனர்.
இதனைத் தொடர்ந்து கேரள பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இந்த சந்திப்பில் விக்ரம், நடிகர் ரோஷன் மேத்யூ, நடிகைகள் மியா ஜார்ஜ், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து கொச்சியில் உள்ள பிரபலமான ஜெயின் கல்லூரி வளாகத்தில் ‘கோப்ரா’ பட குழுவினர், மாணவ மாணவிகளை சந்தித்தனர். அவர்களின் கேள்விகளுக்கு படக்குழுவினர் பதிலளித்து உற்சாகப்படுத்தினர்.
விக்ரம் தலைமையிலான பட குழுவினரின் தமிழக பயணத்தை போல், கேரள பயணமும் எதிர்பார்த்ததை விட கூடுதலான வெற்றி பெற்றதால் ‘கோப்ரா’ பட குழு உற்சாகமடைந்திருக்கிறது.
பெங்களூருவில்…
”கோப்ரா’ படத்தை ரசிகர்களிடம் பிரபலப்படுத்துவதற்காக அப்பட நாயகன் விக்ரம் தலைமையிலான குழுவினர், பெங்களூரூக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு பிரம்மாண்டமான முறையில் ரசிகர்கள் திரண்டு வரவேற்பளித்தனர்.
பெங்களூரூவிலுள்ள நெக்ஸஸ் மால் எனும் வணிக வளாகத்தில் நடைபெற்ற ரசிகர்களுடனான விழாவில் விக்ரம், நடிகைகள் ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். கட்டுக்கடங்காத அளவிற்கு திரண்ட ரசிகர்களிடம் விக்ரம், ‘கோப்ரா’ படத்தை பற்றி விவரித்து பேசினார். அதன் பிறகு அவர்கள் எழுப்பிய வினாவிற்கும் பதிலளித்தார். அதைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றது.
திட்டமிட்டபடி பெங்களூரூவில் ரசிகர்களை சந்தித்த ‘கோப்ரா’ பட குழுவினர், அடுத்த கட்டமாக ஹைதராபாத்திற்கு பயணித்தார்கள்.
ஹைதராபாத்தில்…
விக்ரம் தலைமையிலான ‘கோப்ரா’ குழுவினருக்கு ஹைதராபாத் விமான நிலையத்தில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விக்ரம், நடிகைகள் ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, தயாரிப்பாளர் என்.வி. திருப்பதி பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் என் வி திருப்பதி பிரசாத் பேசுகையில், ”கோப்ரா திரைப்படம் கொரோனா தொற்று காலகட்டத்தில் ரஷ்ய நாட்டில் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் குளிரில் 35 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகும் முழுமையான பாதுகாப்புடன் ரஷ்யாவில் மீண்டும் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்தப் படத்தில் விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். இதற்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். இது போன்ற கதாபாத்திரங்களில் தென்னிந்தியாவிலேயே விக்ரம் ஒருவரால் தான் ஏற்று நடிக்க இயலும். இந்தியாவிலேயே கமல்ஹாசனுக்கு அடுத்து உடலை வருத்திக்கொண்டு நடிப்பதில் விக்ரம் தன்னிகரற்றவராக திகழ்கிறார். கோப்ரா திரைப்படம் வித்தியாசமான கதை. திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் கூட்டணியுடன் உருவாகி இருக்கிறது. இந்தியாவின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரான ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்திருக்கிறார். புஷ்பா இயக்குநர் சுகுமார் நிகழ்த்திய மாயாஜாலத்தை போல், இயக்குநர் அஜய் ஞானமுத்துவும் கோப்ரா படத்தில் மாயாஜாலத்தை நிகழ்த்தி இருக்கிறார். கொல்கத்தா, அலிப்பி, சென்னை, ரஷ்யா என பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. கிட்டத்தட்ட ஓராண்டு காலம் கடுமையாக உழைத்து கோப்ரா படத்தை நிறைவு செய்திருக்கிறார்கள். விக்ரமின் கலை உலக பயணத்தில் இந்த கோப்ரா மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக அமையும். கோப்ரா திரைப்படம் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தெலுங்கிலும் வெளியாகிறது. இதற்கு ரசிகர்கள் பேராதரவு அளிக்க வேண்டும்.” என்றார்.
விக்ரம் பேசுகையில், ” கோப்ரா படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்துவால் இங்கு வர இயலவில்லை. படத்தின் இறுதி கட்டப் பணிகளில் தீவிரமாக அவர் ஈடுபட்டு இருக்கிறார். எனக்கும் தெலுங்கு ரசிகர்களுக்கும் இடையே எப்போதும் ஒரு பாசம் மிகுந்த பந்தம் இருக்கிறது. இயக்குநர் அஜய் ஞானமுத்து இந்த கதையை விவரிக்கும் போது உடனே நடிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதற்குரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.
ரஷ்யாவில் நடைபெற்ற படப்பிடிப்பு கொரோனா காலகட்டத்தில் முழுமையான பாதுகாப்புடன் நடைபெற்றாலும், அங்கு ஐந்து வெவ்வேறு கெட்டப்புகளில் நடிக்க வேண்டியதிருந்தது. அதற்கான ஒப்பனை, குளிர்.. இதனை கடந்து தான் நடித்தேன். எனக்கு இவை அனைத்தும் எளிதாக இருந்தது. ஒவ்வொரு கெட்டப்பிற்கும் ஒவ்வொரு உடல் மொழி.. அது எனக்கு சவாலானதாக இருந்ததால், மகிழ்ச்சியுடன் பணியாற்ற முடிந்தது.
கோப்ரா திரைப்படம், சைக்கலாஜிக்கல் திரில்லராகவும், எமோஷனல் டிராமாவாகவும், சயின்ஸ் ஃபிக்சனாகவும், ஆக்சன் என்டர்டெய்னராகவும் கலந்து உருவாகி இருக்கிறது.
இந்தப் படத்தில் எனக்கும் நடிகை ஸ்ரீநிதிக்குமிடையே அற்புதமான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாகி இருக்கிறது. ரொமான்ஸ் காட்சிகள் இருந்தாலும் அவர் அதிலும் தன் முத்திரையை பதித்திருக்கிறார்.
மீனாட்சி இந்த படத்தில் ஒரு கல்லூரி பெண்ணாகவும், கணித புதிர்களை விடுவிப்பதில் உதவி செய்பவராகவும் தோன்றுகிறார். அவருடைய கதாபாத்திரமும் மிகவும் சுவாரசியமானது.
மிருணாளினி ரவி என்னை காதலிக்கும் கதாபாத்திரம். உணர்வு பூர்வமான இந்த வேடத்தை அவர் சிறப்பாக செய்திருக்கிறார்.
இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்கும் ரசிகர்களுக்கு ஹாலிவுட் படங்களை பார்த்த பிரமிப்பு ஏற்படும். இந்தப் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இருக்கிறது. கதை, காதல், நகைச்சுவை, சண்டைக் காட்சி, சென்டிமென்ட்… என அனைத்தும் இடம்பெற்றிருக்கிறது.
மலையாள நடிகர் ரோஷன் மேத்யூ வில்லனாக நடித்திருக்கிறார். கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முதன்முதலாக நடித்திருக்கிறார். அவர் திரையில் தோன்றும் போது உங்களை ஆச்சரியப்பட வைப்பார். இதன் பின்னணியில் இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் பங்களிப்பு அதிகம்.
நாங்கள் எங்களுடைய சிறந்த உழைப்பை வழங்கியிருக்கிறோம். தெலுங்கு ரசிகர்களுக்கு கோப்ரா படம் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சிறந்த படங்களுக்கு தெலுங்கு ரசிகர்கள் என்றைக்கும் ஆதரவு அளித்திருக்கிறார்கள். கோப்ரா திரைப்படம் உலக அளவில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படைப்பாக உருவாகி இருக்கிறது.
நம் தேசத்தில் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற தற்போது பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவான திரைப்படங்களின் தேவை ஏற்பட்டிருக்கிறது. இவையனைத்தும் கோப்ரா படத்திலும் இருக்கிறது.
என் நடிப்பில் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மூன்று ஆண்டுகளாகிவிட்டது. இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பின் போது நடிகை மியா ஜார்ஜ் சிங்கிளாக இருந்தார். இரண்டாம் கட்ட படபிடிப்பின் போது அவருக்கு திருமணம் நடைபெற்றது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பின் போது அவருக்கு குழந்தை பிறந்தது. தற்போது படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்விற்காக கொச்சிக்கு சென்ற போது, அவருக்கு ஐந்து மாத குழந்தை இருந்தது. இதனால் எனக்கு பயம் ஏற்பட்டது. கோப்ரா திரைப்படத்தை விரைவில் வெளியிட வேண்டும் என்ற கட்டாயமும் உருவானது. ஆனால் திரையில் மியா ஜார்ஜ் தன்னுடைய அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார்.
கோப்ரா போன்ற பிரம்மாண்டமான படைப்பை தெலுங்கு ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்றால், அதற்கு திருப்பதி பிரசாத் தான் பொருத்தமானவர் என அவரைத் தேர்ந்தெடுத்தோம். அவரும் மனமுவந்து எங்களது வேண்டுகோளை ஏற்று கோப்ரா படத்தை தெலுங்கில் வழங்குகிறார்” என்றார்.
ஊடக சந்திப்பில் விக்ரம் மேலும் தெரிவித்த சுவாரசியமான விசயங்கள்…
*இந்த ‘கோப்ரா’ திரைப்படத்தில் கணித ஆசிரியர் வேடத்தில் நடித்தாலும், நான் மாணவனாக இருந்தபோது கணித பாடத்தில் பலவீனமான மாணவனாகவே இருந்தேன். ஆசிரியர் பலமுறை தலையில் குட்டி, ‘உனக்கு கணக்கு வராதுடா…’ என தெரிவித்தார். இந்த படத்தில் நடித்திருக்கும் கணிதாசிரியர் வெட்க சுபாவம் உள்ளவராக இருந்தாலும், அசாத்தியமான திறமைசாலி. இவருக்கு ஹாலுஸிநேஸன் என்ற பாதிப்பும் இருக்கும். இயக்குனர் அஜய் ஞானமுத்து பயங்கர புத்திசாலி. படத்தின் இரண்டாம் பகுதியில் தான் என்னுடைய கதாபாத்திரத்தின் வீரியத்தை ரசிகர்களுக்கு புரிய வைத்திருக்கிறார். உச்சகட்ட கட்சி வரை கதை சுவாரசியமாக பயணிக்கும்.
*கோப்ரா என்றால் எப்போது தாக்கும் என்று தெரியாது. கோப்ரா ஒவ்வொரு காலகட்டத்திலும் தன் தோலை உரித்து கொண்டு புது வடிவத்தை பெறும். அதேபோல் இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
*படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு கெட்டப்பிற்கு ஏற்ற வகையில் உடல் மொழியையும், பின்னணி பேசும் பாணியையும் மாற்றியிருக்கிறேன். ஆறு குரல்களில் மாற்றி மாற்றி பேசி இருக்கிறேன்.