”சாதி அழுக்கை பொசுக்கிய புரட்சியாளர் அம்பேத்கர்”: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாளையொட்டி சென்னையில் நேற்று அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சாதி என்ற அழுக்கை அறிவெனும் தீப்பந்தம் கொண்டு பொசுக்கிய புரட்சியாளர் அம்பேத்கர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய அரசியல் நிர்ணய சபை வரைவுக்குழுவின் தலைவரும், சட்டமேதையுமான அண்ணல் அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில் பல்வேறு இடங்களில் அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழக அரசின் சார்பில் சென்னையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்ததுடன் படத்துக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, கோவி.செழியன், அன்பில் மகேஸ் , கயல்விழி செல்வராஜ், எம்.பி.க்கள் திருமாவளவன், ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி சோமு, டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், எம்எல்ஏக்கள் செல்வப்பெருந்தகை, த.வேலு, கிருஷ்ணசாமி, சிந்தனைச்செல்வன், தாட்கோ தலைவர் நா.இளையராஜா, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் வே.ராஜாராமன் கலந்துகொண்டனர்.

முதல்வர் புகழாரம்:

முதல்வர் மு.க.ஸ்டாலினின் சமூக வலைதள பதிவு: சாதி எனும் ஆயிரமாண்டு அழுக்கினை அறிவெனும் தீப்பந்தம் கொண்டு பொசுக்கிய புரட்சியாளர்- தனக்குவமை இல்லாத புத்துலகப் புத்தர் சட்ட மாமேதை அம்பேத்கர் பிறந்தநாள்.. சமத்துவ நாள். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நம் பயணத்தில் என்றும் நம்மை வழிநடத்தும் அறிவுலகச் சூரியன் அம்பேத்கர் வாழ்க. ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்ற இலக்கை நோக்கிய நமது திராவிட மாடல் பயணத்தில், பாபாசாகேப் விரும்பிய சமத்துவ இந்தியா கண்டே தீருவோம். ஜெய் பீம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.