”உங்கள் மரணம் எப்படி நேரப் போகிறது என்கிற விஷயம் தெரிய வந்திருக்கிறது!” – (பகுதி 2)
(பகுதி 1-ன் தொடர்ச்சி)
‘நூற்றாண்டு காணாத’, ‘வரலாறு காணாத’, ‘யாரும் எதிர்பார்த்திராத’ போன்ற வார்த்தைகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் நிலவிய தமிழகத்தின் காலநிலைகள் வழங்கத் தொடங்கின.
வழக்கமாக பசிபிக் பெருங்கடலிலிருந்து அனுப்பப்படும் வெப்பக்காற்று ஆஸ்திரேலிய மற்றும் ஆசிய நாடுகளின் கடல்களில் காற்றழுத்த மண்டலங்களாக மாறி பருவமழையை கொடுக்கும். ஆனால் அந்த நிலை 1980களிலிருந்து மாறத் தொடங்கியது. வெப்பக்காற்று பசிபிக் கடலில் இருந்து இந்தியப் பெருங்கடல் நாடுகளுக்கு வந்து சேராமல் அங்கேயே தேக்கமடைய தொடங்கியது. அந்த மாதிரியான சூழல்களில் தென்னமேரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய நாடுகளில் பருவங்கள் பொய்க்கும். மழைக்காலத்தில் போதுமான மழை இருக்காது. வறட்சி தோன்றும். அல்லது எதிர்பாராத அளவுக்கு மழை கொட்டி தீர்க்கும்.
80களின் பிற்பகுதியில் நேர்ந்த இந்த காலநிலை மாற்றத்தில் ஒரு கால அளவு இருப்பதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்தார்கள். சில மாதங்கள் தொடங்கி இரண்டு வருடங்கள் வரை அத்தகைய காலநிலை மாற்றம் நீடிப்பதை கண்டுகொண்டார்கள். அத்தகைய காலநிலை மாற்றத்துக்கு எல் நினோ என பெயர் சூட்டப்பட்டது. ஒன்றிலிருந்து இரண்டு வருட காலத்துக்கு எல் நினோ மாற்றம் நீடிக்குமென வரையறுக்கப்பட்டது.
சென்னை தத்தளித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் ஐநாவின் முன்னெடுப்பில், பாரிஸ் நகரத்தில் உலக நாட்டுத் தலைவர்கள் கூடி காலநிலை மாற்றத்தை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்து பிரான்ஸ் நாட்டின் வெளியுறவு அமைச்சர் லாரண்ட் ஃபேபியஸ், ‘சென்னையின் எதிர்பாராத மழைவெள்ளம் நமக்கு அவகாசம் இல்லை என்பதை உணர்த்துகிறது. காலநிலை பாதிப்புக்கான உடனடியான உறுதியான நடவடிக்கை நாம் எடுக்க வேண்டும்’ என அறிக்கை வெளியிட்டார். இங்கிருக்கும் மத்திய சுற்றுச்சூழல் துறை, ‘சென்னை வெள்ளத்துக்கும் காலநிலை மாற்றத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என பதிலளித்தது.
2015ம் ஆண்டில் சென்னையில் பெய்த மழைக்கும் எல் நினோவே காரணமாக சொல்லப்பட்டது. உண்மை என்னவெனில், 2015ம் வருடத்தின் மாற்றம் இரண்டு வருடங்களுக்கு மட்டும் நீடிக்கவில்லை.
ஒரே வருடம். 2016-ன் டிசம்பர் மாதத்தில் வர்தா புயல் தமிழக கடலோரத்தை தாக்கியது. பெருமழையும் புயலுமென சென்னை தன்னை காத்துக் கொள்ள போராடியது. 24 பேர் உயிரிழந்தனர். 2017-ல் காலநிலை தன் மாற்றத்தை இன்னுமே அழுத்தந்திருத்தமாக அறிவித்தது.
நவம்பர் 29ம் தேதி கடலோர முனையை தாக்கிய ஒக்கி புயல் தமிழகத்திலும் கேரளத்திலும் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. ஆழ்கடலுக்குள் சென்றிருந்த மீனவர்களுக்கு முறையான அறிவிப்பு முன்னமே தரப்படவில்லை. சென்றவர்கள் மீள முடியாமல் கடலில் சிக்கினர். உயிர் பிழைத்தவர்கள் பிளாஸ்டிக் கேன்களை பிடித்து நீந்தி வந்து உயிரிழந்த சக மீனவர் சடலங்களை கொண்டு வந்தனர்.
1000த்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் நிலை என்னவென தெரியவில்லை. அரசின் சார்பில் அனுப்பப்பட்ட கப்பலும் சில நாட்டிகல் மைல்களுக்குள்ளாக தன்னுடைய தேடுதலை முடித்துக் கொண்டது. மீனவப்பெண்கள் கடலுக்கு சென்ற மீனவர்களை அரசு மீட்க கேட்டு போராடினர்.
தெற்கு முனையில் உருவான ஒக்கி புயல் குஜராத் வரை பயணித்தது. ஒரு முழு பேயாட்டத்தை புயல் கட்டவிழ்த்து விட்டிருந்தது. 50 வருடங்களில் நேர்ந்த புயல்களிலேயே அதிக அழிவை கொடுத்தது ஒக்கி புயல்தான்.
கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், இதுவரை நாம் பயன்படுத்தி வந்த வழிமுறைகளை கொண்டு ஒக்கி புயலின் தீவிரத்தையோ போக்கையோ முன் அனுமானிக்க முடியவில்லை என்பதுதான்.
வழக்கமாக புயல்கள் வங்கக்கடலிலோ அரபிக் கடலிலோ தோன்றுவதுண்டு. ஆனால் ஒக்கி புயல் இலங்கையின் தென்கிழக்கு கடலோரத்தில் உருவானது. வடமேற்கை நோக்கி நகர்ந்தது. 2500 கிலோமீட்டருக்கு பயணித்து முடிந்தது. இதுபோன்ற ஒரு புயலின் போக்கு கடைசியாக நிகழ்ந்தது 1925ம் ஆண்டில்தான். அதிலும் ஒரு கட்டத்துக்கு மேல் புயல் நிலத்துக்குள் வந்து கூட பயணித்திருக்கிறது. ஆனால் இது போல் கடலிலேயே 2000 கிலோ மீட்டர்களுக்கும் பயணித்தது கிடையாது.
லட்சத்தீவை புயல் தாக்கிய பிறகு, வட மேற்கு பாதையை புயல் தொடரவில்லை. அதற்கு பதிலாக அங்கிருந்து திரும்பி மேற்கு கடலோரத்தை தாக்கியது. இது முற்றிலும் எதிர்பார்த்திராத போக்கு. இத்தகைய போக்கை அடையாளம் காண நூற்றாண்டுக்கும் முன் ஆராய வேண்டியிருக்கும்.
9 மணி நேரங்களுக்குள்ளேயே காற்றழுத்த தாழ்வு மணடலம் புயலாக மாறியிருந்தது. வழக்கமாக இரண்டு நாட்களேனும் தேவைப்படும். அடுத்து, தீவிர புயலாகவும் மாறியது.
காற்றழுத்த தாழ்வு நிலையிலிருந்து தீவிர புயல் என்ற கட்டத்தை எட்ட 72 மணி நேரங்களாவது ஆகும். ஆனால் ஒக்கி வெறும் 40 மணி நேரங்களில் உருவானது. குஜராத் கடலோரத்துக்கு அருகே ஒக்கி வலுவிழக்கும்போது ஏழு நாட்களுக்கு புயல் பயணித்திருந்தது. சராசரியான புயலின் இருப்பை காட்டிலும் 43 சதவிகிதம் இது அதிகம்.
ஏன் ஒக்கியின் போக்கையும் தீவிரத்தையும் முன் அனுமானிக்க முடியவில்லை?
கடந்த பத்து வருடங்களில் கடல் பரப்பின் வெப்பம் அரபிக்கடலில் அதிகரித்திருக்கிறது. கூடியிருக்கும் கடல் மட்ட வெப்பம், அப்பகுதியை கொந்தளிப்பு நிறைந்ததாக மாற்றியிருக்கிறது.
2017ம் ஆண்டின் நவம்பரில் அமெரிக்காவின் கடல் மற்றும் வளிமண்டல ஆய்வாளர்கள் வெளியிட்ட ஆய்வில், அரபிக்கடலில் நிகழும் புயல்களின் நடவடிக்கைகளுக்கும் புவி வெப்பமாகுதலுக்கும் இடையே நேரடித் தொடர்பு இருப்பதாக நிறுவப்பட்டுள்ளது. மேலும், கடல் மட்டத்தின் வெப்பம் அதிகரிப்பது நிற்கப்போவதில்லை என்றும் புயல்களின் எண்ணிக்கையும் தீவிரமும் அதிகரிக்கவே செய்யும் எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.
ஒக்கி மட்டுமில்லாமல் அதற்கடுத்ததாக 2018ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் வந்த கஜா புயலும் தெளிவாக காலநிலை மாற்றத்தை அறிவித்தது.
இந்திய வானிலை மையத்தின் கணக்குப்படி கஜா புயல் வேதாரண்யத்துக்கு அருகே கரையை கடந்து வலுவிழக்க வேண்டும். ஆனால் புயலின் மையம் கரையை கடந்த பிறகும் வலுவிழக்கவில்லை. மழைப்பொழிவுக்கு பிறகும் வலுவுடன் பயணித்துக் கொண்டிருந்தது. தஞ்சாவூருக்கு புகுந்து புதுக்கோட்டை வழியாக இதுவரை எந்த புயலும் சென்றிடாத திண்டுக்கல்லுக்கு சென்றது. உள்மாவட்டம் வரை வலுவிழக்காமல் பயணிக்கும் புயலென்பது இதுவரை நாம் அறிந்திருந்த காலநிலைகளிலேயே இல்லாத விஷயம்.
2019ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் உருவான ஃபானி புயலும் இதே ரகம்தான். இந்திய வானிலை மையத்தின் முதல் கருத்துப்படி ஃபானி புயல் தமிழகத்தில் கரையை கடப்பதாகவே அனுமானிக்கப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை. உலக வானிலை நிறுவனம் ஃபானி புயல் ஒடிசாவில் கரையை கடக்கும் என அனுமானித்தது.
இந்தியப் பெருங்கடலின் சுமத்ரா தீவு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி வங்கக் கடல் வரை பயணித்து ஏப்ரல் 25ம் தேதி புயலாக மாறியது. ஒடிசாவில் கரை கடந்ததோடு நில்லாமல் நிலத்துக்குள்ளும் பயணித்து மேற்கு வங்கத்தையும் தாண்டி வங்க தேசம் வரை சென்றது. பத்து நாட்களாக தொடர்ந்து கடலில் பயணித்தும் தீவிரம் குறையாமலிருந்த புயல் ஃபானி. பதினைந்து வருடங்களுக்கு பிறகு இத்தகைய தீவிரத்தை ஒரு புயல் கொண்டிருந்தது. எச்சரிக்கை நடவடிக்கையாக 12 லட்சம் பேரை ஒடிசா அரசு அப்புறப்படுத்தியிருந்தது.
கடந்த 126 வருடங்களில் வங்கக்கடலில் உருவான ஏப்ரல் மாத தீவிர புயல்கள் மொத்தமே பதினான்குதான். அவற்றில் நிலத்துக்குள் பயணித்தது ஒன்றே ஒன்றுதான். ஃபானி அவற்றில் இரண்டாவது புயல் ஆகும்.
தமிழகத்தை தாக்கிய சமீபத்திய புயல்களை பொறுத்தவரை ஒரு முக்கியமான ஒற்றுமையை காண முடியும். இந்திய வானிலை மையத்தால் திட்டவட்டமாக எந்த புயலையும் அனுமானிக்க முடியவில்லை. அதற்கு காரணம் அங்கு வேலை பார்ப்பவர்களின் திறமை குறைவு அல்ல; காலநிலை மாற்றத்தை பற்றிய நம் புரிதலின்மை!.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கூட நீலகிரியின் அவலாஞ்சியில் வெறும் 24 மணி நேரங்களில் 820 மிமீ மழை பொழிந்து தள்ளியதை மறந்துவிட முடியாது.
காலநிலை மாற்றம் எல்லா குட்டிக்கரணத்தையும் அடித்து காட்டி விட்டது. தமிழகமும் அதன் அரசியல் சூழலும் தொடர்ந்து பாராமுகம் காட்டி வருகிறது.
தமிழக அரசியல் கட்சிகள் புயல் மற்றும் பேரிடரின் விளைவுகளை வெறும் குற்றம் சுமத்தும் வாய்ப்புகளாக பார்க்கின்றனவே தவிர, நீடித்த திட்டத்தையோ கொள்கைரீதியான மாற்றங்களையோ அறிவுறுத்தும் நிலையை நம் அரசியல் சூழல் வந்து சேரவில்லை. எத்தகைய பேரிடராக இருந்தாலும் அதற்கான எச்சரிக்கை நடவடிக்கைகளை பேரிடர் காலத்தில் அரசு முன்னெடுக்கும் அவலநிலையே நீடிக்கிறது.
காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர்களுக்கு அரசியலோ அல்லது எந்தவித கட்சியின் சார்போ கிடையாது. அறிவியல் சார்பு மட்டுமே உண்டு.
காலநிலை மாற்றம் குறித்து அறிவியல் சில விளக்கங்கள் கொடுக்கிறது. சுருக்கமாக அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.
காலநிலை மாற்றம் என்பது முதலில் என்ன?
காலநிலை மாற்றம் என்பது மனித குலம் இதுநாள் வரை அறிந்து வந்திருந்த பருவ காலங்கள், மழைக்காலம் போன்றவற்றில் ஏற்பட்டிருக்கும் தலைகீழ் மாற்றம் ஆகும்.
ஏன் இப்படி திடுதிப்பென காலநிலைகள் மாறின?
திடீரென இல்லை.
பாலை காய வைத்தால் உடனே பொங்கி விடுவதில்லை. சூடு பெற வேண்டும். ஒரு அளவுக்கான சூட்டுக்கு பிறகு கொதிக்க வேண்டும். அப்போதும் பால் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கவில்லையெனில், கொதிநிலை அதிகரித்து பால் பொங்கி வீணாகும்.
காலநிலையும் அதே போல தொடர்ச்சியான மாறுதல்களை அடைந்து வந்திருக்கிறது. மாற்றம் என்பதன் முழுத் தன்மையை தற்போதுதான் காலநிலை அடைந்திருக்கிறது.
தொழிற்புரட்சி காலத்தில் வேகம் பிடித்த மாற்றம், தொழில் நுட்ப யுகத்தில் அதிவேகம் பெற்றிருக்கிறது.
காலநிலை மாற்றத்துக்கான அடிப்படை காரணம் என்ன?
சூரியனிலிருந்து வரும் வெப்பம் பூமியால் பிரதிபலிக்கப்பட்டு திரும்ப பூமியிலிருந்து வெளியேறும். தொன்று தொட்டு இதுவே இயற்கையாக இருந்து வந்தது.
சமீபகாலமாக பூமியில் இருக்கும் ஜீவராசிகளாலும் பிற காரணங்களாலும் வெளியேற்றப்படும் கார்பன் வாயுவின் அளவு அதிகரித்திருக்கிறது. பூமியை சுற்றி அந்த கார்பன் வாயு படர்ந்து ஒரு திரையாக ஆக்கிரமித்திருக்கிறது. பூமியை விட்டு வெளியேற வேண்டிய வெப்பம் வெளியேற முடியாமல் திரும்ப பூமிக்கே அனுப்பப்படுகிறது.
ஆக, ஒரு முறை பூமிக்குள் நுழையும் வெப்பம் இரண்டு மடங்காக்கப்படுகிறது. தற்போது கார்பன் திரையின் அடர்த்தி அதிகமாகி இருப்பதால் பூமி கொள்ளும் வெப்பம் பன்மடங்காக்கப்பட்டிருக்கிறது.
பூமியில் அதிகரிக்கும் வெப்பம் எப்படி காலநிலையை மாற்றும்?
காலநிலைகளை கடல்களில் ஓடும் நீரோட்டங்கள் தீர்மானிக்கின்றன. நீரோட்டங்களின் வழியிலேயே கடலின் போக்கு இருக்கும். கடலின் போக்கிலேயே காற்று வீசும். காற்றின் திசையிலேயே பருவகாலங்கள் அமையும்.
பூமியில் அதிகரிக்கும் வெப்பத்தால் துருவப்பனி உருகுகிறது. உருகும் பனி கடலுக்குள் கரைகிறது. கரையும் பனி நீரோட்டத்தை மாற்றுகிறது. கடல் மட்டத்தை அதிகரிக்கிறது.
கார்பனை உறிஞ்சும் காடுகளையும் மலைகளையும் வளர்ச்சியின் பெயரால் கடந்த நூற்றாண்டில் அளவை மீறி அழித்து விட்டோம். இன்னும் அழித்தும் கொண்டிருக்கிறோம்.
கார்பனை அதிகரிக்கும் மனித நடவடிக்கைகளை செயல்படுத்திக் கொண்டு, காடுகளை அழித்துக் கொண்டு, நீர் நிலைகளை ஆக்கிரமித்துக் கொண்டு, கடலுயிர்களை அழித்துக் கொண்டு தொடர்ந்து இருப்போமெனில் மனித இனம் பூமிக்கு கடந்தகாலம் ஆகிவிடும்.
இத்தனை விளக்கங்களுக்கு பிறகும் காலநிலை மாற்றத்தை நம் மனம் ஏற்பதில்லை. அது புரிந்து கொள்ளக் கூடியதே.
மனித மனம் மரணத்தை திட்டமிடுவதில்லை. எதிர்பார்ப்பதுமில்லை. மனித இனமும் அழிவை எதிர்பார்த்திருக்கவில்லை. மனித இனமே பூமியின் நித்தியம் என நம்பி வந்திருக்கிறது. தற்போதைய இந்த காலநிலை மாற்றமும் அது கொடுக்கவிருக்கும் விளைவுகளும் மனிதனும் மனித இனமும் இதுகாறும் வரை நம்பி வந்த நம்பிக்கைகளையும் மனநிலைகளையும் சுக்குநூறாக உடைக்கிறது. அதை தாங்க முடியாததாலேயே நாம் காலநிலை மாற்றத்தை ஏற்க மறுக்கிறோம்.
காலநிலை மாற்றம் உண்மை என நம்புவதற்கு சுற்றி நடக்கும் விஷயங்களை சற்று கூர்ந்து கவனித்தாலே போதும். இதுவரை நமக்கு கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கும் சிந்தனை முறைகளில் இருந்து சற்று விலகி பார்த்தால் துலக்கமாக காலநிலை மாற்றம் புலப்பட்டு விடும்.
(இன்னும் வரும்)
ராஜசங்கீதன்
Courtesy: Poovulagu.org