புத்தக கண்காட்சியில் அன்னை தெரசாவிடம் ஆசி பெறலாம், வாங்க…!
சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள வி.ஜி.பி.ஸ்நோ கிங்டம் வளாகத்தில் ஓவியர் ஏ.பி. ஸ்ரீதரின் கலைவண்ணத்தில் உருவான இந்தியாவின் முதல் தந்திரகலை அருங்காட்சியகம் கடந்த மாதம் துவங்கப்பட்டது. இதற்கு கிடைத்த அமோக வரவேற்பினைத் தொடர்ந்து சென்னை தீவுத்திடலில் அமைந்துள்ள 39வது சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்தியாவின் இரண்டாவது தந்திரக்கலை அருங்காட்சியகத்தை அமைத்துள்ளார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர். இதனை பிரபல ஒளிப்பதிவாளர் பி.சிஸ்ரீராம் இன்று காலை துவக்கி வைத்தார்.
ஓவியர் ஏ.பி.ஸ்ரீதரின் இந்த முயற்சி குறித்து ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பேசுகையில், “ஸ்ரீதர் எனக்கு நீண்டகால நண்பர். அவருடைய அனைத்துப் பயணத்திலும் நான் அவருடன் இருந்திருக்கிறேன். இந்த பயணத்திலும் நான் அவருடன் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
“தந்திரக்கலை அருங்காட்சியகம் என்பது இன்று சர்வதேச அளவில் புகழ் பெற்று வருகிறது. அதனை இந்தியாவுக்கு ஸ்ரீதர் அறிமுகப்படுத்தியுள்ளார். ஓவியங்களுடன் நம்மை இணைத்துக் கொண்டு புகைப்படம் எடுத்துக்கொள்ளும் இதனை சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் கண்டு மகிழ்வார்கள். இது மேலும் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்” என்றார்.
இந்த அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள ஓவியங்கள் சில…
1. திருவள்ளுவர் திருக்குறள் ஓலைச்சுவடியை கொடுப்பார்
2. சேகுவேராவுடன் செல்ஃபி எடுக்கலாம்.
3. பாரதியாருடன் செல்ஃபி எடுக்கலாம்.
4. அன்னை தெரசவிடம் ஆசி பெறலாம்.
5. அப்துல்கலாம் பூந்தொட்டி கொடுப்பார்.
6. காந்தியடிகள் ராட்டினத்தை கொடுப்பார்.
இதுபோல் மேலும் சுவாரஸ்யமான ஓவியங்களுடன் மக்கள் இணைய முடியும். இந்த தந்திரக்கலை அருங்காட்சியகம் இன்று 01.06.2016 முதல் 13.06.2016 வரை தீவுத்திடலில் அமைந்திருக்கும்.
இதேபோன்று இந்தியாவின் மூன்றாவது தந்திரகலை அருங்காட்சியகம் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள எக்ஸ்ப்ரஸ் அவென்யூ வணிக வளாகத்திலும் இன்று முதல் துவங்கப்பட்டிருக்கிறது.